ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா'
இரட்டை வேடங்களில் அசத்தினார்

ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் பெரிய வெற்றிப் படம் "பில்லா.'' இதில், இரட்டை வேடங்களில் பிரமாதமாக நடித்தார்.
ரஜினியை முழு ஆக்ஷன் ஹீரோவாக வெளிப்படுத்திய படம் இது.
கதை
சர்வதேச கடத்தல்காரர்களில் ஒருவனான பில்லா (ரஜினி) அடிதடிக்கு அஞ்சாதவன். எத்தனை அசகாய போலீசாக இருந்தாலும் பில்லாவை நெருங்க முடியவில்லை. அந்த அளவுக்கு சாமர்த்தியத்திலும் வல்லவனாக இருக்கிறான் இந்த பில்லா.
சென்னை நகர போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டர் (பாலாஜி), பில்லாவை பிடிப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறார்.
இதற்கிடையே சர்வதேச போலீஸ் அதிகாரி (மேஜர் சுந்தர்ராஜன்) சென்னை வருகிறார். சர்வதேச அளவில் பிரபலமான கடத்தல்காரர்கள் அத்தனை பேரும் தங்கள் தொழில் தொடர்பான ஒரு `மீட்டிங்'குக்காக சென்னைக்கு வந்திருப்பதை கூறி, போலீஸ் வட்டாரத்தை உஷார்படுத்துகிறார்.
பில்லாவிடம் விசுவாசமாக இருந்த ஜானி என்ற இளைஞனுக்கு, கடத்தல் வாழ்க்கை அலுத்துப் போகிறது. அவன் பில்லாவுக்கு `டிமிக்கி' கொடுத்துவிட்டு காதலியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சிக்கிறான். இதை மோப்பம் பிடித்து விட்ட பில்லா, அவனது பயணத்தை தடுப்பதுடன் உயிரையும் நிறுத்தி விடுகிறான்.
பழிக்குப்பழி
இதனால் வெகுண்டெழுந்த அவன் காதலி (பிரவீணா) தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் பில்லாவை சந்திக்கிறாள். அவனை தனது வசீகரப் புன்னகையில் மயக்கியபடியே போலீசுக்கும் ரகசிய தகவல் கொடுத்து விடுகிறாள்.
போலீஸ் டி.எஸ்.பி. தலைமையில் ஒரு போலீஸ் பட்டாளமே பில்லா தங்கியிருந்த ஓட்டலை சுற்றி வளைக்கிறது. ஆனால் பில்லா அந்தப் பெண்ணையே தனக்குப் பாதுகாப்பாக பயன்படுத்தி, தப்பித்து விடுகிறான். அதோடு அந்தப் பெண்ணையும் கொன்று விடுகிறான்.
ஜானியின் தங்கை ராதாவுக்கு (ஸ்ரீபிரியா) இந்த தகவல் தெரியவர, அவள் தனக்கு வேண்டிய ஒரு கராத்தே மாஸ்டர் மூலம் `பில்லா'வின் கூட்டத்தில் சேருகிறாள்.
பில்லா அவளை நம்பத் தொடங்கிய நேரத்தில் அவள் கொடுத்த ரகசியத் தகவல் போலீசை எட்டுகிறது. இம்முறை `பில்லா'வால் தப்ப முடியவில்லை. போலீசின் துப்பாக்கி, பில்லாவைத் துளைக்கிறது.
அரைகுறை உயிருடன் ஆற்றில் விழுந்து அப்போதைக்கு தப்பிக்கும் பில்லா, கடைசியில் `டி.எஸ்.பி' அலெக்சாண்டரின் காரில் ஏறிக்கொண்டு, அவரையே மிரட்டி தனது இருப்பிடத்துக்கு கொண்டு விடச்சொல்கிறான். ஆனால் பாதி வழியில் அவன் உயிர் பிரிந்து விடுகிறது.

போலி பில்லா
பில்லா இறந்து போனது டி.எஸ்.பி. அலெக்சாண்டருக்கு மட்டுமே தெரியும். `பில்லா'வை உயிருடன் பிடித்திருந்தால் அவன் மூலம் சர்வதேச அளவிலான கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை திரட்டியிருக்க முடியும். பில்லாவின் கடத்தல் கூட்டத்தையும் ஒட்டுமொத்தமாக பிடித்திருக்க முடியும். இந்த இரண்டுமே நடக்காததால், பில்லாவை ஒரு கல்லறைத் தோட்டத்தில் ரகசியமாய் புதைக்க ஏற்பாடு செய்த டி.எஸ்.பி. `பில்லா' சாயலில் ரோடுகளில் ஆடிப்பாடி பிழைப்பு நடத்தி வந்த ராஜப்பா (இன்னொரு ரஜினி) என்ற இளைஞனை `பில்லா' போல தயார் செய்கிறார்.
ராஜப்பா புதிய `பில்லா'வாக எதிரிகள் இருப்பிடத்தில் நுழைகிறான்.
இதற்கிடையே பில்லா மீண்டும் தனது கூட்டத்துடன் இணைந்து கொண்ட தகவல் போலீசை எட்டுகிறது. அவர்கள் பில்லாவை வேட்டையாட நடவடிக்கை எடுக்கிறார்கள்.
`பில்லா'வாக நடிக்கும் ராஜப்பாவின் நிலைதான் பரிதாபம். போலீசிடம் மாட்டினாலும் உயிர் உத்தரவாதமில்லை. கடத்தல் கூட்டம் தெரிந்து கொண்டாலும் பரலோகம் நிச்சயம். அதோடு தனது அண்ணன் ஜானியை கொன்றதற்காக எப்போது கொல்லலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ராதா ஒரு பக்கம்.
இந்த மாதிரியான இக்கட்டான சூழலில் சர்வதேச போலீஸ் அதிகாரியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், கடத்தல்காரர்களின் ஒரிஜினல் தலைவன் என்பது ராஜப்பாவுக்கு தெரியவருகிறது. போலி போலீஸ் அதிகாரி, `ராஜப்பா'வை பில்லாவாக தயார் செய்திருந்த டி.எஸ்.பி.யை `குளோஸ்' பண்ணிவிட்டு, `பில்லா'வாக நடிக்கும் ராஜப்பாவுக்கு குறி வைக்கிறார்.
ராஜப்பா தனது பாடல் குழுவினருடன் அதிரடியாக மோதல் களத்தில் இறங்கி, போலி சர்வதேச போலீஸ் அதிகாரியை உலகுக்கு அடையாளம் காட்டுகிறார்.
இதற்கிடையே ராஜப்பாவை யாரென்று தெரிந்து கொண்ட ராதாவும் உதவுகிறாள்.
சர்வதேச கடத்தல் கூட்டம் ராஜப்பாவால் பிடிபட, போலீஸ் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.
ராஜப்பா - ராதா திருமணத்தில் படம் முடிகிறது.
பில்லா, ராஜப்பா என இரண்டு வேடத்தில் ரஜினி நடிப்பில் கலக்கிய படம். பில்லாவாக தனக்கே உரிய ஸ்டைலில் அசத்தினார்; ராஜப்பா என்ற கிராமத்துப் பாடகன் கேரக்டரிலும் நெளிவும் குழைவும் கலந்து ரசிகர்களை கவர்ந்தார்.
போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டராக பாலாஜி சிறப்பாக நடித்தார். படத்தை தயாரித்ததும் இவரே.
அதுவரை காமெடி செய்து கொண்டிருந்த தேங்காய் சீனிவாசனை குணச்சித்திர கேரக்டரில் அறிமுகப்படுத்திய பெருமை இந்தப் படத்துக்கு உண்டு.
நடிகர்கள் ஏவி.எம்.ராஜன், அசோகன், கவுரவ வேடத்தில் தோன்றினார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "நாட்டுக்குள்ளே எனக்கொரு ஊருண்டு'', "நினைத்தாலே இனிக்கும் சுகம்'', "மை நேம் இஸ் பில்லா'' போன்ற பாடல்கள் இப்போது கேட்டாலும் திகட்டாத ரகம்.
டைரக்ட் செய்தவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பினால், அதற்குப் பிறகு தனது பெயரை `பில்லா' ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்று மாற்றிக்கொண்டார்.
26-1-1978-ல் வெளியாகி, 260 நாள் ஓடி சாதனை படைத்த இப்படம், வசூலிலும் புரட்சி செய்தது. ரஜினியை நாயகனாக்கி படமெடுத்தால் `நிச்சய லாபம்' என்ற நம்பிக்கைக்கு நிரந்தரமாக அஸ்திவாரமிட்ட பெருமையும் இந்த `பில்லா' படத்துக்கு உண்டு.
பில்லாவுக்குப் பிறகு 4-6-1980-ல் "ராம் ராபர்ட் ரகீம்'' வெளிவந்தது. இந்தியில் வெளியான "அமர் அக்பர் ஆன்டனி'' படத்தின் கதையை வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

அன்புக்கு நான் அடிமை
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான "அன்புக்கு நான் அடிமை'' 19-7-1980-ல் வெளியாகி சக்கை போடு போட்டது. இதில் ரஜினியுடன் கராத்தே மணியும் இணைந்து நடித்தார்.
ரஜினிக்கு ஜோடியாக ரதி நடித்தார்.
படத்தை சி.தண்டாயுதபாணி தயாரித்தார். ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.
ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்''
"உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''
ரஜினிகாந்த் உடல் நலம் குன்றியிருந்தபோது அவரை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்'' என்று கனிவுடன் கூறினார்.
ரஜினிகாந்த், யானையுடன் நடித்த "அன்னை ஓர் ஆலயம்'' படத்தை டைரக்ட் செய்தவர், ஆர்.தியாகராஜன். (சாண்டோ சின்னப்ப தேவர் மருமகன்)
இந்தப் படத்தை இயக்கியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
"1979-ல் `அன்னை ஓர் ஆலயம்' படத்தை இயக்கினேன். இது அந்த வருடம் தீபாவளிக்கு ரிலீசானது. "தாய்ப்பாசம் என்பது மிருகங்களுக்கும் உண்டு'' என்பதை மையக்கருத்தாக்கி வந்த படம். பெரிய வெற்றி.
இந்தப் படத்தில், ஒரு சிறுத்தையை ரஜினி தோள் மீது தூக்கிச் செல்லும் காட்சி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்தப்படம் தமிழில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, "அம்மா வெருகேனு அம்மா'' என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்தோம். அதிலும் ரஜினி நடித்தார். தெலுங்கும் வெற்றிப்படமே.

எளிமை
சினிமாப்புகழ் எப்போதுமே அவரை பாதித்ததில்லை. திடீர் திடீரென எங்கள் ஆபீசுக்கு வருவார். களைப்பாக இருந்தால், எங்கேயாவது ஒரு ஓரத்தில் கையை தலைக்கு வைத்து படுத்துக்கொள்வார். சாதாரண ஓட்டலில் இடியாப்பம் - பாயா வாங்கி வரச்சொல்லி அதையே சாப்பிடுவார்.
ஒரு படத்தில் நடித்ததுமே, `நட்சத்திர ஓட்டல் டிபன்தான் வேண்டும்' என்று கேட்கிற சினிமா உலகில், எந்த பந்தாவும் இல்லாமல் ரஜினி எளிமையாக இருந்தார்.
"அன்னை ஓர் ஆலயம்'' படத்தில் ரஜினி நடித்த நேரத்தில், தூங்காமல் - ஓய்வு எடுக்காமல் உழைத்தார். அவருக்குள் ஒருவித குழப்ப நிலை நீடித்ததை உணர்ந்து கொண்டோம். இதனால் எங்கள் கம்பெனி தயாரிப்பு நிர்வாகி, உதவி இயக்குனர் விஜயசிங்கம், கார் டிரைவர் மூவரையும் எப்போதும் ரஜினியுடன் இருக்கும்படி ஏற்பாடு செய்தோம்.
எம்.ஜி.ஆருக்கு தகவல்
ஆனால், இதையும் தாண்டி அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில், சத்யா ஸ்டூடியோவில் ரஜினி நடிக்க வந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் செயலாளராக இருந்த பத்மநாபனிடம் இதுபற்றி கவலை தெரிவித்தோம்.
எம்.ஜி.ஆர். அப்போது முதல்-அமைச்சராக இருந்தார். ரஜினி பற்றிய தகவல் பத்மநாபன் மூலம் அவருக்குத் தெரிந்தது. எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டூடியோவுக்கு வந்து, ரஜினியை பார்த்துப் பேசினார். "உடம்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத முடியும்'' என்று ரஜினிக்கு அன்புடன் `அட்வைஸ்' செய்துவிட்டுப் போனார்.

லாபமா, நஷ்டமா?
"அன்னை ஓர் ஆலயம்'' கடைசி நாள் படப்பிடிப்பு. பூசணிக்காய் உடைத்த பிறகு, காரில் ஏறப்போன ரஜினி நேராக என்னிடம் வந்தார். என்னை எப்போதும் `மாப்பிள்ளை' என்றுதான் அழைப்பார்.
"என்ன மாப்பிள்ளை! இந்தப்படம் உங்களுக்கு லாபமா? நஷ்டமா?'' என்று கேட்டார். தனது உடல் நலம் காரணமாக, படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப்போனதால், தயாரிப்பு செலவு அதிகமாகியிருக்குமோ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் அப்படிக் கேட்டார்.
நான் அவரிடம், "ரஜினிபாய்! உங்களை வைத்து தயாரிக்கும் படத்தால் நஷ்டம் வராது. லாபத்தில் கொஞ்சம் குறைவு. அவ்வளவுதான்!'' என்றேன் சிரித்தபடி.
உடனே, தனது கையில் வைத்திருந்த ஒரு கடிதத்தை என் கையில் தந்தார் ரஜினி. "நாளைக்கு இதை படிச்சுப் பாருங்க'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
அவர் புறப்பட்டுப் போனதும், ஆவலை அடக்க முடியாமல் அந்தக் கடிதத்தை அப்போதே பிரித்துப் பார்த்தேன். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என்று 3 மாதங்களுக்கான தேதிகளை எங்கள் பட நிறுவனத்துக்கு (படப்பிடிப்பு நடத்திக்கொள்ள) கொடுத்திருப்பதாக அதில் குறிப்பிட்டு இருந்தார். அந்த தேதிகளில் ஒரு தெலுங்குப் படத்தையும், ஒரு தமிழ்ப்படத்தையும் எடுத்து முடித்தோம்.''

இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
தனித்து நடிக்க முடிவு
அபூர்வ ராகங்கள், அவர்கள், 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் இணைந்து நடித்த கமலஹாசனும், ரஜினிகாந்தும் இனி தனித்தனியே நடிப்பது என்று முடிவு செய்தனர்.
இருவருடைய வளர்ச்சிக்கும் அதுதான் நல்லது என்று அவர்கள் கருதினர்.
இதுபற்றிய அறிவிப்பை, பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கமலஹாசன் அறிவித்தார். அப்போது ரஜினிகாந்த் உடன் இருந்தார்.
யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்'
சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி
தேவர் பிலிம்ஸ் தயாரித்த "அன்னை ஓர் ஆலயம்'' படத்தில் ரஜினிகாந்த், யானைகளுடன் நடித்தார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில், ஒரு சிறுத்தையை தோள் மீது போட்டுக்கொண்டு நடப்பார், ரஜினி!
சாண்டோ சின்னப்ப தேவர் மறைவுக்குப்பின், அவர் மகன் சி.தண்டாயுதபாணி "தேவர் பிலிம்ஸ்'' பேனரில் படங்களைத் தயாரித்தார்.
தேவரின் கதை
தேவர் பிலிம்ஸ் படங்களுக்கான கதைகளை பெரும்பாலும் தேவரே உருவாக்குவது வழக்கம். யானைகளை வைத்து அவர் எழுதி வைத்திருந்த கதை "அன்னை ஓர் ஆலயம்.'' அதை தண்டாயுதபாணி, படமாக எடுத்தார்.
வசனத்தை தூயவன் எழுதினார். படத்தை, தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.
இதில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் ஜோடியாக நடித்தனர். ரஜினியின் அம்மாவாக அஞ்சலிதேவி நடித்தார். மற்றும் ஜெயமாலினி, மோகன்பாபு, மேஜர் சுந்தர்ராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சுருளிராஜன் ஆகியோர் நடித்தனர்.

பாடல்களை வாலி எழுத, இளையராஜா இசை அமைத்தார்.
கதை
மிருகங்களுக்கும் தாய்ப்பாசம் உண்டு என்பதை சித்தரிக்கும் கதை. இதில், வேட்டைக்காரராக ரஜினி நடித்திருந்தார். காட்டுக்குள் தைரியமாகச் சென்று, மிருகங்களைப் பிடித்து அவற்றை சர்க்கஸ் கம்பெனிகளுக்கு விற்பது அவரது வேலை.
தாயிடம் இருந்து குட்டி மிருகங்களை தந்திரமாகப் பிடித்து விற்பனை செய்து விடுவார்.
இப்படி தாய் மிருகங்களிடம் இருந்து குட்டிகளைப் பிரிப்பது அவர் அம்மா அஞ்சலிதேவிக்குப் பிடிக்கவில்லை. அவர் ரஜினியிடம், "மிருகங்களுக்கு தாய்ப்பாசம் அதிகம். அதனால், தாயிடம் இருந்து குட்டிகளைப் பிரிக்காதே'' என்று கேட்டுக்கொள்வார்.
ரஜினியோ, "மிருகங்களுக்காவது, தாய்ப்பாசமாவது!'' என்று சிரித்துக்கொண்டு போய்விடுவார்.
இந்நிலையில், ஒரு தாய் யானையிடம் இருந்து குட்டி யானையைப் பிரித்து, சர்க்கஸ் கம்பெனிக்கு விற்று விடுவார். விஷயம் தெரிந்ததும், "உன் தாயை பிரியும்போதுதான் அந்த வேதனை உனக்குத் தெரியும்'' என்று ரஜினியிடம் கூறுவார், அஞ்சலிதேவி.
சில நாட்களிலேயே அப்படியொரு விபரீதம் நடக்கிறது. காட்டில் மகனைத் தேடிவந்த தாயாரை, ஏற்கனவே குட்டியை பிரிந்த சோகத்தில் இருந்த தாய் யானை துரத்துகிறது. தாயின் கூக்குரல் கேட்டு ரஜினி தாயைக் காப்பாற்ற ஓடிவருவார். வரும் வழியில் மிருகங்களை பிடிக்க வைத்திருந்த `பொறி'யில் மாட்டிக்கொள்வார்.
அவரது கண்ணெதிரிலேயே அஞ்சலிதேவியை தன் துதிக்கையால் தூக்கி வீசியெறிகிறது, யானை. மரணத் தறுவாயில் அஞ்சலிதேவி, "மகனே! இந்த தாய் யானையிடம் அதன் குட்டியை கொண்டு வந்து சேர்த்துவிடு!'' என்று ரஜினியிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறார்.
தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய குட்டி யானையை விற்ற சர்க்கஸ் கம்பெனிக்கு ஓடுவார், ரஜினி. ஆனால் அதற்குள் அந்த குட்டி யானை வேறொரு சர்க்கஸ் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் குட்டி யானை இருந்த கம்பெனியை தேடிப்போய் அதை மீட்கிறார்,ரஜினி.

ஆனால் குட்டி யானை, அவரைப் பார்த்து பயந்து ஓட்டம் பிடிக்கிறது. ரஜினியும் விடாமல் அதைப் பிடித்து, அதற்கு தான் எதிரி எல்ல என்பதை நம்ப வைக்கிறார். கடைசியில், அதை காட்டுக்கு அழைத்துச்சென்று தாய் யானையுடன் சேர்த்து வைக்கிறார். முடிவில் தாய் யானை, குட்டி யானை இரண்டும், துதிக்கையை தூக்கி ரஜினியை ஆசீர்வதித்து விட்டுப் போகும். அப்போது தன் தாயே தன்னை ஆசீர்வதிப்பதாக எண்ணி மகிழ்வார், ரஜினி.
சினிமா தியேட்டரில் யானை
இந்தப் படத்தில் ரஜினி, யானைக்குட்டி சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளும் கலகலப்பானவை.
ரஜினியிடம் இருந்து தப்பி ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழையும் யானைக்குட்டி, அங்கே திரையில் `நல்ல நேரம்' படத்தில் யானைகள் வருகிற காட்சியை பார்த்து திரையை கிழிப்பது, பிறகு ரஜினி வந்து குட்டி யானையை அடக்குவது போன்ற காட்சிகளை குழந்தைகள் குதூகலமாக ரசித்தார்கள்.
இளையராஜா இசையில் "அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே'', "நதியோரம்'', "அம்மா நீ சுமந்த பிள்ளை'' போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
சிறுத்தை
இந்தப் படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப் போட்டபடி நடப்பார், ரஜினி.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, "மிருகங்களின் குணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக சிறுத்தை விஷயத்தில் நாம் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே `டூப்' போட்டுக்கொள்ளுங்கள்'' என்று ரஜினியிடம், மிருகங்களை பழக்கும் `மாஸ்டர்' கூறினார்.
ஆனால் ரஜினியோ, `டூப்' போடவில்லை. அவராகவே சர்வசாதாரணமாக சிறுத்தையை தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு நடந்து
போனார்.சாதாரணமாக, இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் அளவுக்கு எடை கொண்டது அந்த சிறுத்தை. அதை, தன்னந்தனி ஆளாக அதுவும் அநாயாசமாக ரஜினி தூக்கியதைப் பார்த்து, படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள்.
19-10-1979 அன்று "அன்னை ஓர் ஆலயம்'' வெளியாயிற்று. ரசிகர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திரையரங்குகள் திணறின. படம் நூறு நாட்களை தாண்டி ஓடியது.
இதே படம் "மா'' என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது.
குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை'
முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி
ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்த "ஆறிலிருந்து அறுபது வரை'' படம், மகத்தான வெற்றி பெற்று, சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.
வில்லனாகவும், ஆன்டி ஹீரோவாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும், ஸ்டைல் மன்னனாகவும் ஜொலித்து வந்த ரஜினியை, முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைக்க பட அதிபரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் முடிவு செய்தார்.

அதற்காக அவர் உருவாக்கிய கதைதான் "ஆறிலிருந்து அறுபது வரை.''
குடும்பப் பாசம்
சிறு வயதிலேயே பெற்றோரை இழக்கும் ஒரு சிறுவன், கஷ்டப்பட்டு தன் தம்பிகளையும், தங்கையையும் படிக்க வைக்கிறான். குடும்பத்துக்காக தன்னை மெழுகுவர்த்திபோல் அழித்துக் கொள்கிறான்.
ஆனால், 60 வயதாகும் தருணத்தில் அவருடைய குடும்பத்தினர் நன்றி விசுவாசத்தோடு நடந்து கொள்ளவில்லை.
இன்றைய உலக நடப்பை யதார்த்தமாகச் சித்தரிக்கும் கதை. வசனத்தையும் பஞ்சு அருணாசலம் எழுதினார்.
மாறுபட்ட வேடம்
இந்தப் படத்தில், ரஜினிக்கு சண்டை இல்லை, ஸ்டைல் இல்லை. குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்யும் நல்லவராக நடித்திருந்தார். 25 வயது முதல் 60 வயது வரையுள்ள பல தோற்றங்களில் தோன்றினார்.
ரஜினியுடன் படாபட் ஜெயலட்சுமி, சங்கீதா, ஜெயா, மல்லிகா, திலக், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தார்கள். பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசை அமைத்திருந்தார். டைரக்ஷன்: எஸ்.பி.முத்துராமன்.
புதிய தோற்றத்தில் ரஜனியை அவருடைய ரசிகர்கள் ஏற்பார்களா? படம் வெற்றி பெறுமா? என்று பலரும் சந்தேகப்பட்டார்கள்.
ரஜினியும், படத்தின் ரிசல்ட்டை ஆவலுடன் எதிர்பார்த்தார்.

16-9-1979-ல் வெளிவந்த இந்தப்படம், `ஓகோ' என்று ஓடியது. நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
`சிவாஜிகணேசன் நடிக்கும் குடும்பப் பாங்கான வேடங்களிலும் நன்கு நடிக்கக் கூடியவர் ரஜினி' என்பது, இப்படத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டது.
அந்த ஆண்டின் சிறந்த படமாக இதை சினிமா ரசிகர்கள் சங்கம் தேர்ந்தெடுத்தது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்கும், சிறந்த டைரக்டருக்கான விருது எஸ்.பி.முத்துராமனுக்கும் கிடைத்தது.
இப்படம், "ஓ இண்டி கதா'' என்ற பெயரில் தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது. தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடியது.
எஸ்.பி.முத்துராமன்
"ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தின் டைரக்டரான எஸ்.பி.முத்துராமன், அந்தப் படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி
கூறியதாவது:-"ரஜினி, ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும்போதும், அது பற்றிய முழு விவரத்தையும் கேட்டறிந்து, கதையை உள்வாங்கிக்கொண்டு, தான் நடிக்க வேண்டிய காட்சியை நன்கு சிந்தித்து ஜீரணித்துக்கொண்டு நடிப்பார்.
"ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தின் படப்பிடிப்பின்போது, ரஜினிக்கு ஒரு சந்தேகம் வந்தது. "குடும்பத்துக்கே தன்னை தியாகம் செய்யும் அண்ணனிடம், உடன் பிறந்தவர்கள் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்வார்களா?'' என்று கேட்டார்.
"பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதுதான் யதார்த்தம்'' என்று கதாசிரியர் பஞ்சு அருணாசலமும், நானும் விளக்கினோம். இருப்பினும், ரஜினி முழுவதுமாக திருப்தி அடையவில்லை.
இதன் காரணமாக பஞ்சு அருணாசலம் ஒரு முடிவுக்கு வந்தார். 5 ஆயிரம் அடி வரை படத்தை எடுத்து ரஜினிக்கு போட்டுக் காட்டுவது, அது அவருக்குப் பிடித்திருந்தால் தற்போதுள்ள கதையை தொடர்ந்து படமாக்குவது, இல்லாவிட்டால் கதையின் போக்கை மாற்றுவது - இதுதான் பஞ்சு அருணாசலத்தின் முடிவு.

இதை ரஜினியிடம் தெரிவித்தோம். அவர் ஒப்புக்கொண்டார்.
அதன்படி, 5 ஆயிரம் அடி வரை படம் எடுத்தோம். எடிட் செய்து, ரஜினிக்குப் போட்டுக்காட்டினோம்.
அவருக்கு முழு திருப்தி ஏற்பட்டது. "படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. படத்தை இதே மாதிரி தொடருங்கள்'' என்றார்.
அதேபோல் படத்தை எடுத்து முடித்தோம்.
விநியோகஸ்தர்களிடம், "படத்தின் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் வசூல் பற்றி கவலைப்படாதீர்கள். அதுபற்றி எங்களுக்குத் தகவலும் தெரிவிக்காதீர்கள். திங்கட்கிழமை வசூலைப் பாருங்கள். பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறதா என்று கவனியுங்கள். அதை எங்களுக்குத் தெரிவியுங்கள்'' என்றோம்.
நாங்கள் எண்ணியபடி திங்கட்கிழமை முதல், பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தைப் பார்த்தார்கள். வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது.
படம் பெரிய வெற்றி பெற்றதுடன், ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது.''
இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு
சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்
கே.ஆர்.விஜயா சொந்தமாகத் தயாரித்த "நான் வாழவைப்பேன்'' படத்தில், சிவாஜிகணேசனுடன் ரஜினி இணைந்து நடித்தார். மிகப் பிரமாதமாக நடித்து, சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்.
"நினைத்தாலே இனிக்கும்'' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்த படம் "தர்மயுத்தம்.'' இதை, சாருசித்ரா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டி.ஆர்.சீனிவாசன் தயாரித்தார்.
ஸ்ரீதேவி
இதில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி. மற்றும் லட்சுமிஸ்ரீ, சச்சு, புஷ்பலதா, தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் நடித்தனர்.
கதை-வசனத்தை பீட்டர் செல்வகுமார் எழுத, கண்ணதாசன், எம்.ஜி.வல்லபன், ஹரிராம் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசை அமைத்தவர்: இளையராஜா.

படத்தை ஆர்.சி.சக்தி டைரக்ட் செய்தார்.
தங்கை மீது பாசம் உள்ள தொழில் அதிபராக ரஜினி நடித்தார். சற்றே மாறுபட்ட வேடம். மிகச்சிறப்பாக நடித்து ரசிகர்களைக்
கவர்ந்தார்.இந்தப் படத்தில், ரஜினிக்காக மலேசிய வாசுதேவன் பாடிய, "ஒரு தங்க ரதத்தில்...'' என்று தொடங்கும் பாடல், பெரிய `ஹிட்' ஆயிற்று.
"தர்மயுத்தம்'', அதே பெயரில் தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது.
நான் வாழவைப்பேன்
ரஜினிகாந்தின் திரை உலகப் பயணத்தில், ஒரு மைல் கல் "நான் வாழவைப்பேன்.'' இதில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார்.
நடிகை கே.ஆர்.விஜயாவும், அவர் கணவர் வேலாயுத நாயரும் தயாரித்த படம்.
அமிதாப்பச்சனும், வில்லன் பிரானும் நடித்த "மஜ்பூர்'' என்ற இந்திப் படத்தை தழுவி தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயா, புஷ்பமாலா, ஏ.சகுந்தலா, ஜெய்கணேஷ், தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், வி.கே.ராமசாமி, செந்தாமரை ஆகியோரும் நடித்தனர்.
திரைக்கதை - வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். யோகானந்த் டைரக்ட் செய்தார்.
வியக்க வைத்த நடிப்பு
படத்தில், இடைவேளைக்குப் பிறகுதான் ரஜினிகாந்த் வருவார். வில்லன் போன்ற கேரக்டர் என்றாலும், சிவாஜியைக் காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்யும் குணச்சித்திர வேடம்.
இப்படத்தில், ரஜினியின் நடிப்பு புதிய பரிமாணத்துடன், சிகரத்தைத் தொட்டது. தன்னுடைய குருவான சிவாஜிகணேசன் முன்னிலையிலேயே அபாரமாக நடித்து, அவருடைய பாராட்டைப் பெற்றார்.
சிவாஜி சொன்னது என்ன?
இந்தப்படம் தயாரானபோது தன் வேடம் பற்றியும், ரஜினி வேடம் பற்றியும் சிவாஜி என்ன சொன்னார்? ரஜினியின் நடிப்பை பார்த்துவிட்டு, அவர் கூறிய கருத்து என்ன?
- இதுபற்றி, அப்படத்தின் வசனகர்த்தாவும், சிவாஜியின் நெருங்கிய நண்பருமான ஆரூர்தாஸ் கூறியதாவது:-

இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில் சிவாஜிகணேசனும், `பிரான்' நடித்த பாத்திரத்தில் ரஜினிகாந்தும் நடிக்க ஏற்பாடாயிற்று.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அந்த இந்திப்படத்தை சிவாஜியும் நானும் பார்த்தோம். பார்த்து முடித்ததும் சிவாஜி என்னிடம் இப்படிக் கூறினார்.
"ஆரூரான்! `ஹீரோ' அமிதாப் நடிச்சிருக்கிறது வெறும் "டம்மி'' ரோல். அதில் நடிப்புக்கு `ஸ்கோப்' இல்லே. பிரான் ரோல்தான் "ஆக்டிங் ரோல்'' அதுதான் ஆடியன்ஸ் மனசுல நிக்கும். கெஸ்ட் ரோலா அதைச் செய்யலாமான்னு நினைக்கிறேன்.''
இவ்வாறு சிவாஜி கூறியதும் நான் சொன்னேன்:
"உங்களையும் ரஜினியையும் வச்சிக்கிட்டு, ரஜினி ஹீரோ, நீங்க `சைடு ரோல்'னு சொன்னா சரியா இருக்குமா? தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வாரா என்பதையும் யோசிங்க.''
"ஆமா. உண்மைதான். செய்தா, விஜயா - வேலாயுதம் இரண்டு பேருக்காக இந்தப் படத்துல நான் நடிக்கணும். இல்லேன்னா
விட்டுடணும்.''"நீங்க நடிச்சா நல்லாயிருக்கும்.''
"அதுமட்டுமில்லை. அந்தப் பையன் (ரஜினி) நல்லா வளர்ந்துகிட்டு வர்றான். அந்த வளர்ச்சிக்கு இந்தப் படமும் அவனுக்குப் பயன்படட்டுமே. நான்தான் எல்லாம் செய்திட்டேனே. இப்படித்தான் அப்போ ஜெமினிகணேசனும், நானும் சேர்ந்து நடிச்ச "பெண்ணின் பெருமை'' படத்துல நான் விட்டுக்கொடுத்து வில்லன் பாத்திரத்தை எடுத்துக்கிட்டேன். ஓகே! செய்வோம்'' என்றார், சிவாஜி.

பாராட்டு
"நான் வாழ வைப்பேன்'' படப்பிடிப்பெல்லாம் முடிந்து, முதல் பிரதியை சிவாஜி பார்த்தார். நானும் அவருடன் இருந்தேன். உச்சக்கட்ட காட்சியில் ரஜினியின் நடிப்பைப் பார்த்துக் கொண்டே பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம் சிவாஜி சொன்னார்:
"பாத்தியா! அன்றைக்கு நான் என்ன சொன்னேன்? கடைசியில் அந்த ரோல்தான் நிக்கும்னு சொன்னேன்ல. ரஜினியும் நல்லா நடிச்சிருக்கான் பாரு! படம் முடிஞ்சு ஜனங்க போகும்போது, ரஜினிதான் அவுங்க மனசுல நிப்பான். தெரிஞ்சதுதானே! பரவாயில்லை. படம் நல்லா வந்திருக்கு. எனக்கு அதுதான் வேணும்.''
இவ்வாறு சிவாஜி கூறினார்.
பிறர் நன்றாக நடித்தால், மனந்திறந்து பாராட்டும் பண்பாளர் சிவாஜி.
10-8-1979-ல் வெளியான "நான் வாழவைப்பேன்'' நூறு நாள் ஓடிய வெற்றிப்படம்.
இவ்வாறு ஆரூர்தாஸ் கூறினார்.
ஓயாத உழைப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த், நன்றாக குணம் அடைந்து, புதுப்பொலிவுடன் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
எதையும் எரித்து பஸ்பமாக்கிவிடக்கூடிய சூரியனையே, கிரகணம் பிடித்து விடுகிறது! ஆயினும் சில மணி நேரம்தான். பிறகு கிரகணத்தின் பிடியிலிருந்து சூரியன் விடுபட்டு மீண்டும் பிரகாசிக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியையும் கிரகணம் கவ்வியது. ஆனால், சில நாட்களிலேயே கிரகணத்தின் பிடியில் இருந்து விடுபட்டு, மீண்டும் வெற்றி பவனி வரத்தொடங்கினார், ரஜினி.
படப்பிடிப்பு இடையில் நின்று போன படங்களை எல்லாம் முடித்துக்கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து ரஜினியின் படங்கள், வரிசையாக வெளிவரத்தொடங்கின.
நினைத்தாலே இனிக்கும்
கமலும், ரஜினியும் இணைந்து நடிக்க, கே.பாலசந்தரின் திரைக்கதை, வசனம், டைரக்ஷனில் உருவான "நினைத்தாலே இனிக்கும்'' படம், 1979 தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் (14-4-1979) வெளிவந்தது.
எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, மசாலாத்தனம் இல்லாமல், இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது. பிரேமாலயா வெங்கட்ராமன் தயாரித்த இந்தப்படத்தில், ஜெயப்பிரதா, ஜெயசுதா, கீதா, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரும் நடித்திருந்தனர். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்கள்: கண்ணதாசன், கண்மணிசுப்பு.
படத்தின் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது.
கதை இதுதான்:
இசைக்குழு ஒன்றை நடத்துபவர், கமல். அதில் கிடார் வாசிப்பவர் ரஜினி. இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
மர்ம மங்கை
இந்த இசைக்குழுவினர், 10 நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்த சிங்கப்பூருக்கு செல்கிறார்கள். போகும்போது ஒரு மர்ம மங்கையை (ஜெயப்பிரதா) சந்திக்கிறார், கமல்.
அந்த மர்ம மங்கை, இரண்டுவிதமான தோற்றங்களில் வந்து கமலை குழப்புவார். கேட்டால், "நான் அவள் இல்லை'' என்பார். சமயத்துக்கு தக்கபடி அவர் பொய் பேசுவதாக கமல் நினைப்பார். ஆனாலும் அவரை காதலிப்பார்.
இடையிடையே ஜெயப்பிரதாவை ஒரு "பயங்கர மனிதன்'' துரத்துவது போன்ற தோற்றம் வந்து போகும்.
பல திருப்பங்களுக்குப்பின், உண்மை வெளிப்படும்.

ஜெயப்பிரதாவுக்கு ரத்தப்புற்று நோய். சில நாட்களில் இறந்துவிடக்கூடிய நிலையில் இருப்பவர். கடைசி காலத்தை சந்தோஷ மாகக் கழிக்க விரும்புவதாகக் கூறி, கமலின் இசைக்குழுவில் சேருகிறார்.
பல ஊர்களுக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தும்போது, ஒருமுறை ரத்தவாந்தி எடுப்பார். அவரை பரிசோதிக்கும் டாக்டர்கள், "உங்கள் ஆயுள் இன்னும் மூன்று நாட்கள்'' என்று கூறுவார்கள்.
இதை அறியும் கமல், தன் தாயார் முன்னிலையில் ஜெயப்பிரதாவை மணந்து கொள்வார். இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள். பிறகு, ஜெயப்பிரதாவை துரத்திக்கொண்டிருந்த "பயங்கர மனிதனிடம்'' (மரணம்) அவர் சிக்கிவிடுவார்.
ரஜினி காமெடி
இந்தப் படத்தில் ரஜினியின் பங்களிப்பு கணிசமானது. ஓட்டல்களிலும், பக்கத்தில் இருப்பவர்களிடமும் சின்னச்சின்ன பொருள்களை (கண்ணாடி, ஸ்பூன், மதுபாட்டில் போன்றவற்றை) திருடுவது அவர் காரக்டர். நிறைய தமாஷ் செய்வார்.
ஒருநாள், அவருக்கு ஒரு ஆடியோ டேப் வரும். அதில், "அன்பரே! உங்களைக் கண்டதும் காதல் கொண்டேன். என்னை சந்திக்க வருகிறீர்களா?'' என்று ஒரு பெண் பேசுவாள். முகவரியை, தெளிவில்லாமல் பதிவு செய்திருப்பாள்.
ரஜினி, அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க டேப் ரிக்கார்டருடன் சிங்கப்பூர் முழுவதும் அலைவார். கடைசியில் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்பார். அவள் ஒரு "லூஸ்'' என்று அறிந்து அதிர்ச்சி அடைவார்.
சிகரெட்டை தூக்கிப்போட்டு உதட்டில் பிடிக்கும் ரஜினி ஸ்டைல் ரொம்பப் பிரபலமானது, இந்தப் படத்தில்தான். அவர் ஸ்டைலைப் பார்த்த பூர்ணம் விஸ்வநாதன், "தொடர்ந்து இப்படி 10 முறை சிகரெட்டைத் தூக்கிப்போட்டு பிடிக்க முடியுமா? அதில் நீ ஜெயித்தால், ஒரு காரை பரிசளிக்கிறேன்'' என்று சவால் விடுவார்.
ரஜினி அந்த சவாலை ஏற்றுக்கொள்வார்.
"பந்தயத்தில் வெற்றி பெற்றால் உனக்கு கார். தோற்றுவிட்டால், நீ உன்னுடைய சுண்டு விரலை வெட்டிக்கொடுத்து விடவேண்டும்!'' என்று பூர்ணம் விஸ்வநாதன் பயமுறுத்துவார்.
"வந்தால் ஒரு கார்! போனால் ஒரு விரல்தானே!'' என்று நண்பர்கள் உற்சாகப்படுத்தியதால், சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்க ஆரம்பிப்பார், ரஜினி. 9 முறை வெற்றிகரமாக இப்படி செய்து விடுவார். பிறகு, அவருடைய சுண்டு விரல் அவரை பயமுறுத்தும். "சார்! உங்களுக்கு கார் முக்கியம். எனக்கு விரல் முக்கியம். யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் போட்டியை இதோடு முடித்துக் கொள்வோமே!'' என்று கூறிவிடுவார்!

அதாவது, தமாஷ் வேடம் என்பதால் காட்சி இப்படி முடிந்தது! இன்று இந்த மாதிரி காட்சி அமைக்கப்பட்டால், ரஜினி 10 தடவை என்ன, 100 தடவை கூட சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடித்து விடமாட்டாரா!
"மன்மதன் வந்தானா, நம்ம சங்கதி சொன்னானா?'', "யாதும் ஊரே யாவரும் கேளிர்'', "சயோனரா'', "இனிமை நிறைந்த உலகம் இருக்கு'', "பாரதி கண்ணம்மா'' உள்பட எல்லாப் பாடல்களும் ஹிட்.
ரஜினிக்காக, எம்.எஸ்.வி. பாடிய "சம்போ... சிவசம்போ...!'' பாடல் வெகு பிரபலம்.
பாலசந்தரின் நுட்பமான டைரக்ஷன், கமல் - ரஜினி ஆகியோரின் நடிப்பு, இனிமையான பாடல்கள், கண்ணுக்கு குளிர்ச்சியான சிங்கப்பூர் காட்சிகள் ஆகியவற்றால், படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
ரஜினிகாந்த் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டிருந்த காலக் கட்டத்தை, "இருண்ட காலம்'' என்று டைரக்டர் கே.பாலசந்தர் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்தின் திரையுலகப் பிரம்மாவான டைரக்டர் பாலசந்தர், ரஜினிக்கு அந்த கறுப்பு நாட்களில் ஏற்பட்ட குழப்பத்தைப் பற்றியும், நரம்புத் தளர்ச்சி பற்றியும் அவ்வப்பொழுது கூறியவை வருமாறு:-
மாற்றங்கள்
"தப்புத்தாளங்கள் படத்திற்கு அடுத்த படம் `நினைத்தாலே இனிக்கும்.' அதன் படப்பிடிப்பு முடியும் தறுவாயில், நான் ரஜினிகாந்திடம் பல மாற்றங்களைக் கண்டேன். அதை ஓர் "இருண்ட காலம்'' என்றே சொல்வேன்.
ரஜினிகாந்த் புது வீட்டிற்குக் குடியேறியிருந்தபோது, என்னை அழைத்திருந்தார். அவ்வளவு பெரிய வீட்டில் என் புகைப்படத்தை மட்டும் பெரியதாக மாட்டி வைத்திருந்தார்.
அந்தப் படத்தை திடீர் என்று ஒரு நாள் கழட்டி எறிந்திருக்கிறார். `அதை ஏன் கழட்டிவிட்டீர்கள்' என்று யாரோ கேட்டிருக்கிறார்கள். `இந்தப் புகழுக்கெல்லாம் பாலசந்தர்தானே காரணம்' என்று உதவியாளர்களிடம் சத்தம் போட்டிருக்கிறார். ரஜினியின் நண்பர் வீட்டில் என்னிடம் வந்து சொல்லி `ஏன் இப்படியெல்லாம் வினோதமாகச் செயல்படுகிறார் என்று புரியவில்லை. நீங்கள் வந்து அவரிடம் கொஞ்சம் பேசுங்கள்' என்றும் சொன்னார்.
குழந்தை போல அழுதார்
ரஜினியை சந்தித்து நான் கேட்டேன்.
ரஜினி சொன்னார்: "நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க? திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்'' என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் அழுதார். அவரது பேச்சு தொடர்பில்லாமல் இருந்தது. ரஜினியை அந்த சூழ்நிலையில் பார்த்த என் கண்கள் கலங்கின.
நினைத்தாலே இனிக்கும் படத்தின் டப்பிங் ஏ.பி.என் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் டப்பிங் பேச மறுப்பதாக என் உதவி டைரக்டர் கண்மணிசுப்பு, எனக்கு போன் செய்தார். நான் உடனே அங்கு சென்று ரஜினியை தனியே அழைத்து, "ஏன் டப்பிங் பேச மறுக்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.
"கால் முடமானவனை ஓடச்சொல்லி வேடிக்கை பார்ப்பது ஆறறிவு படைத்த மனிதன் செய்கிற வேலையா? உடல் நலம் குன்றி இருக்கும் ஒரு மனிதனிடம் வேலை வாங்குவது நியாயமா?'' என்று சொன்னார்.
இப்படியெல்லாம் ரஜினி என்னிடம் பேசமாட்டார். மனநிலை சரியில்லாமல்தான், இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரிந்து கொண்டேன்.
உடனே டப்பிங்கை கேன்சல் செய்துவிட்டு, டாக்டர் ஆர்.எஸ்.ராஜகோபால் அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.
இடைவிடாத உழைப்பால் அதிக அளவில் ரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறி, ஓய்வெடுத்துக் கொள்ளும்படி கூறினார் டாக்டர். வெலிங்டன் மருத்துவமனையில் சேர்த்து கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லி, தினம் காலையிலும் மாலையிலும் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டது.
இந்த நேரத்தில் பலர் பலவிதமாகப் பேசினார்கள். இத்தோடு அவர் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என்றும், அவரது பெயரைக்கூட சொல்லாமல் சிலர் `மெண்டல்' என்று குறிப்பிடுகின்ற துர்பாக்கியமான நிலைமை ஏற்பட்டிருந்தது. ரஜினியின் நலனில் அக்கறையுள்ளவர்கள் என்று பலர் கூறிக்கொள்ளலாம். அவர்களெல்லாம் என்ன சொன்னார்கள் என்பது என் காதுகளுக்கு மட்டும் கொண்டு வரப்பட்ட விஷயங்கள்.
ஐ.வி. சசி அவர்கள் கமலஹாசனையும், ரஜினியையும் வைத்து "அலாவுதீனும் அற்புத விளக்கும்'' என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். மிகப்பெரிய செட் போட்டு, நெப்டிïன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்தார். படப்பிடிப்பு அன்று ரஜினி ஸ்டூடியோவுக்கு சென்று மேக்கப்பும் போட்டுக்கொண்டார்.
ஷாட் ரெடியானதும் ரஜினியை உடை மாற்றிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். ரஜினி மறுத்துவிட்டார். எல்லோரும் போய் கேட்டிருக்கிறார்கள். யார் சொல்லியும் அவர் கேட்கவில்லை. கமலஹாசனும், நூற்றுக்கணக்கான ஜுனியர் ஆர்டிஸ்ட்களும் காத்திருக்கிறார்கள்.

டைரக்டர் ஐ.வி. சசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எனக்கு போன் செய்தார். "யார் சொல்லியும் ரஜினி கேட்க மறுக்கிறார். இன்றோடு செட் பிரிக்கப்பட வேண்டும். இங்கு ஸ்டூடியோவிற்கு வந்துவிட்டு போகமுடியுமா?'' என்று அழாக்குறையாகக் கேட்டார். நானும் உடனே போனேன். ரஜினியை மேக்கப் அறையில் சந்தித்தேன். `ஏன் ரஜினி! டிரஸ் போட்டுக்க வேண்டாமா? ஷாட் ரெடியா இருக்குல்ல!' என்று நான் சற்று அதட்டிச் சொல்வது போல் சொன்னதும், டிரஸ் போட ஆரம்பித்தார்.
ஐ.வி.சசியிடம் சென்று, "ரஜினி டிரஸ் போட்டுகிட்டிருக்காரு. இன்னும் 5 நிமிடத்துலே வந்துடுவாரு. அப்ப நான் கிளம்பவா?'' என்று கேட் டேன்.
ஐ.வி.சசி அவர்கள் கெஞ்சாத குறையாக, "அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ நீங்களும் இங்கேயே இருந்துட்டுப்போங்க. நான் அதுக்குள்ள கமலோட இருக்கிற காம்பினேஷன் ஷாட் எல்லாம் எடுத்து முடிச்சுக்கிறேன்'' என்று சொன்னார். அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. சரியென்று ஒப்புக்கொண்டேன்.
படப்பிடிப்பு நடக்க ஆரம்பித்தது. அது கத்திச்சண்டை காட்சி. நானும் பார்வையாளராக உட்கார்ந்து கொண்டே இருந்தேன். ஐ.வி.சசி அவர்களும் மள மளவென்று ஷாட்டுகளை எடுத்துக்கொண்டே இருந்தார். மதிய உணவுக்காக விடுகின்ற `பிரேக்' வரையில் இருந்துவிட்டு, நான் வந்துவிட்டேன்.
ஸ்ரீபிரியா வேண்டுகோள்
இந்தக் காலக்கட்டத்தில்தான் ஒரு முன்னணி நடிகை என் வீட்டிற்கு வந்தார். "சார்! உங்கள் ஒருவரால்தான் ரஜினிகாந்தைச் சரியான பாதைக்குத் திருப்ப முடியும். ஒரு நல்ல நடிகரை தமிழ்த் திரைக்கு அளித்தீர்கள். ரஜினிகாந்தின் இழப்பைத் தடுக்க நீங்கள்தான் முயற்சி எடுக்கவேண்டும்'' என்று மனம் விட்டுப் பேசினார்.
`கதை முடிந்தது' என்று பலர் முடிவுரை எழுதிக்கொண்டிருந்தபோது, அது தொடர்கதை ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல உள்ளமும் இருக்கிறதே என்று அறிந்ததும் என் கண்களில் நீர் திரையிட்டது. அவர்தான் நடிகை ஸ்ரீபிரியா. அவரது உயர்ந்த உள்ளத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.
மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, நாகேஷ் ஆகியோரோடு கலந்தாலோசித்து, விஜயா நர்சிங் ஹோமில் ரஜினியை சேர்த்தோம். டாக்டர் செரியனின் கண்காணிப்பில் 15 நாள் பரிபூரண ஓய்வெடுத்துக் கொண்டதால் நலம் பெற்றார், ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் போன்ற கலைஞர்களை இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் காணமுடியும். கைநழுவ இருந்த ஒரு கலைஞனை, திரைப்பட உலகம் திரும்பப் பெற்றதில் நான் பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.''
இவ்வாறு பாலசந்தர் அன்று கூறியிருக்கிறார்.