Monday, 16 June 2014

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

ரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை
கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''




நடிப்பு பயிற்சி பெற்றும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் கண்டக்டர் வேலையில் சேரும் எண்ணத்துடன் பெங்களூருக்கு ரெயிலில் ஏறினார், ரஜினி.

ரெயிலில், ரஜினியின் எதிரே ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். "உங்களை எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கே'' என்றார், அவர்.

ரஜினி சிரித்துக்கொண்டாரே தவிர, பதில் சொல்லவில்லை.

பெரியவர் சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு, ஏதோ நினைவுக்கு வந்தவராக, "நீங்கள் கண்டக்டர்தானே! ஜெய்நகர் பஸ்சில் பார்த்திருக்கிறேன்'' என்றார்.

"ஆமாம்'' என்றார், ரஜினி.

பெரியவர் தொடர்ந்து சொன்னார்:

"என் மூத்த பையன் பி.எஸ்.சி. முதல் வகுப்பில் பாஸ் செய்தவன். நான்கு வருடமாக வேலைக்கு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. கடைசியில், பஸ் கண்டக்டர் வேலைக்கு மனு போட்டோம். பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால், வேலை வாங்கித் தருவதாக ஒரு பெரிய அதிகாரி கூறியிருக்கிறார். அந்த வேலை நல்லபடியாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, திருப்பதிக்குச் சென்று வெங்கடாசலபதியிடம் வேண்டிக்கொண்டு இப்போது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.''

பெரியவர் இப்படிக் கூறியதைக் கேட்டு, ரஜினிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

`பி.எஸ்.சி. படித்த பட்டதாரிக்கு கண்டக்டர் வேலை கிடைக்க வேண்டும் என்று இவ்வளவு தூரம் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வேலையை மிகச் சாதாரணமானதாக நினைத்துக் கொண்டிருந்தோமே! கண்டக்டர் வேலை எவ்வளவு பெரிய வேலை!' என்று நினைத்தார்.

"நல்ல வேளையாக கண்டக்டர் வேலையை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து கண்டக்டர் வேலை பார்த்து, பிழைத்துக் கொள்ளலாம்'' என்று மகிழ்ச்சி அடைந்தார்.

ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். ஆனந்தமாக புகை விட்டார்.

ரெயில் பெங்களூர் போய்ச் சேர்ந்தது.

ரெயிலில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த், வீட்டுக்குப் போவதற்காக 36-ம் நெம்பர் பஸ்சில் ஏறினார்.

பஸ்சில் கண்டக்டராக இருந்தவர் புட்ராஜ். ரஜினியின் நண்பர். இருவரும் ஒரே நேரத்தில்தான் கண்டக்டர் வேலையில் சேர்ந்தார்கள்.



ரஜினியைப் பார்த்த அவர் வியப்பும், திகைப்பும் அடைந்தார். "என்ன சிவாஜி! எப்போது பெங்களூருக்கு வந்தாய்?'' என்று விசாரித்தார்.

"இப்போதுதான் ரெயிலில் இருந்து இறங்கினேன். வீட்டுக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன்'' என்று ரஜினி பதிலளித்தார்.

"நடிப்பு பயிற்சி எல்லாம் எப்படி இருக்கிறது?''

"பயிற்சி எல்லாம் முடிந்து விட்டது. இதுவரை பட வாய்ப்பு எதுவும் வரவில்லை.''

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?'' என்று தயக்கத்துடன் புட்ராஜ் கேட்டார்.

"என்ன விஷயம்? ஒன்றும் தெரியாதே!'' என்று ரஜினி கூறினார்.

புட்ராஜ் கொஞ்ச நேரம் பேசவில்லை. பிறகு மனதைத் திடப்படுத்திக்கொண்டு, "போன வாரம் 12 கண்டக்டர்களை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள். அதில் நீயும் ஒண்ணு. இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்ததால், மேற்கொண்டு அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்'' என்றார்.

அந்த பஸ் மட்டுமல்ல, உலகமே திசை மாறி சுழல்வது போல இருந்தது, ரஜினிக்கு.

"கவலைப்படாதே. நீ பெற்ற நடிப்பு பயிற்சி, உன்னை கைவிட்டு விடாது'' என்று ஆறுதல் கூறினார், புட்ராஜ்.

சோர்வுடன் வீட்டுக்குச் சென்றார், ரஜினி.

டிஸ்மிஸ் ஆன செய்தியை சொல்வதற்காகத்தான் அவசரமாக அழைத்திருக்கிறார்கள் என்பதை ரஜினி தெரிந்து கொண்டார்.

அன்று இருந்த மன நிலை பற்றி ரஜினி எழுதியிருப்பதாவது:-

"நடிப்பு பயிற்சி முடிந்ததும், பட அதிபர்கள் என்னை ஒப்பந்தம் செய்ய கிï வரிசையில் நிற்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது பலிக்கவில்லை.

கண்டக்டர் வேலை பார்க்கலாம் என்று ஊர் திரும்பினால், அந்த வேலையும் போய்விட்டது. ரொம்பவும் சோர்ந்து போய்விட்டேன், வாழ்க்கையில் முதல் தடவையாக.

பஸ் டெப்போவுக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை பரிதாபமாகப் பார்த்தார்கள். பத்து குண்டுகள் பாய்ந்தாலும் தைரியமாகத் தாங்கிக் கொள்வேன். ஆனால் பரிதாபத்தோடு பார்க்கிற ஒரு பார்வையைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.



முன்பெல்லாம் என்னை புகழ்ந்து பேசியவர்கள் இப்போது, "நடிகனாகவேண்டும் என்று மெட்ராஸ் போனான். இவன் மூஞ்சிக்கு நடிகனாக முடியுமா? யார் - யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கணும்!'' என்று என் காதுபடவே பேசினார்கள்.

அப்போதே நான் முடிவு செய்தேன். `நம்மிடம் இருக்கும் ஒரே ஆஸ்தி - தன்மானம். மீண்டும் சென்னைக்குத் திரும்பவேண்டும். நடிகனாகாமல் பெங்களூருக்குத் திரும்பக்கூடாது!' என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.

அன்று இரவே சென்னைக்கு ரெயில் ஏறினேன்.''

இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

ரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை
பாலசந்தருடன் முதல் சந்திப்பு




சென்னை நடிப்பு பயிற்சி கல்லூரியில், ரஜினியின் படிப்பு முடிவடைவதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், அங்கு டைரக்டர் கே.பாலசந்தர் வந்து, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்போகிறார் என்று அறிவித்தார்கள்.

அதைக் கேட்டதும் ரஜினிக்கு உற்சாகம் தாங்கவில்லை. பாலசந்தரின் "மேஜர் சந்திரகாந்த்'' படத்தை பார்த்தது முதல், அவருடைய பரமரசிகராகியிருந்தார். பாலசந்தர் படங்களை ஒன்று விடாமல் பார்க்கலானார்.

பாலசந்தரைப் பார்க்கப் போகிறோம் என்று அறிந்தபோது தனக்கு ஏற்பட்ட உணர்ச்சி பற்றி ரஜினி கூறுகிறார்:

பிரமிப்பு

"பாலசந்தரின் அரங்கேற்றத்தை பார்த்தபோது, சிரித்திருக்கிறேன்; அழுதிருக்கிறேன்; உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன்; பிரமித்துப் போயிருக்கிறேன்.

பிறகு "அவள் ஒரு தொடர்கதை'' படத்தை தொடர்ந்து 4 தடவை பார்த்தேன். அவர் போட்டோவை பத்திரிகையிலே பார்த்திருந்தேன். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தேன். அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான், பிலிம் இன்ஸ்டிட்டிïட்டுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வந்தது. எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவரைச் சந்திக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.

அந்த நாளும் வந்தது. பிரின்சிபால் ராஜாராம்தாஸ் வேகமாக வந்து, "பாலசந்தர் சார் இருபது நிமிடம் உங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். இங்கே இருபது நிமிடம்தான் இருப்பார். ஆகவே, நிறைய கேள்விகளைக் கேட்காதீர்கள். நல்ல கேள்விகளை மட்டும் கேளுங்கள்'' என்று கூறினார்.

எல்லோரும் ஆவலாக காத்திருந்தோம். இரண்டு பேர் வேகமாக வந்தார்கள். எங்கள் பிரின்சிபால்தான் பாஸ்ட் (வேகம்) என்றால், அதைவிட `பாஸ்ட்' பாலசந்தர் சார்! எனக்கு வேகம்தான் பிடிக்கும் - சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி! எங்க அப்பா கொடுத்த பயிற்சி அப்படி!

பாலசந்தர் சார், பார்க்க சின்னப்பையன் மாதிரி இருந்தார். நான் அவரைப் பார்த்து அசந்து போய்விட்டேன். என் கண்கள் மட்டும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தன. மனம் அவர் படங்களை நினைத்துக் கொண்டிருந்தது.

என் பெயரைக் கேட்டார். அது எனக்குக் கேட்கவில்லை. ஏனென்றால் என் மனம் அங்கே இல்லையே! பிறகு சட்டென்று உணர்வு வந்தது. சிலிர்த்து எழுந்து `சிவாஜிராவ்' என்றேன்.

அவர் மெல்ல சிரித்துக் கொண்டார்.

நான் கேட்ட கேள்வி

எல்லோரும் கேள்விகள் கேட்டார்கள். நானும், ஏதாவது கேட்கவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் என் ஸ்டைலில் வேகமாக ஒரு கேள்வி கேட்டேன். "ஒரு நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்பதுதான் நான் கேட்ட கேள்விக்கு தமிழ் அர்த்தம்.



நான் வேகமாகக் கேட்டதால், அவருக்குப் புரியவில்லை.

"சாரி. புரியவில்லை'' என்றார்.

நான் நிறுத்தி - நிதானமாக மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

பாலசந்தர் சிரித்துக்கொண்டே, "நடிகன் வெளியே நடிக்கக்கூடாது'' என்றார்.

இந்தப் பதிலைக் கூறிவிட்டு, மீண்டும் என் பெயரைக் கேட்டார். "சிவாஜிராவ்'' என்று கூறினேன்.

20 நிமிடங்கள் முடிந்தன. பாலசந்தர் புறப்பட்டார். அவர் என்னை நோக்கி கையை நீட்டினார். நானும் கை நீட்டினேன். அவர் கையில் என் கை! அவர் கையில்தான் என்ன பிடிப்பு! அருகிலிருந்து பார்க்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறார்!

எங்கள் ஆசிரியர் திரு. கோபாலி அப்போது வந்தார். என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். "சார்! உங்கப்படம் என்றால் இவனுக்கு உயிர். அவள் ஒரு தொடர்கதையை 6 தடவை பார்த்திருக்கிறான்!'' என்று அவர் பாலசந்தரிடம் கூறினார்.

பாலசந்தர் சிரித்தபடி, "உனக்கு தமிழ் தெரியுமா?'' என்று கேட்டார்.

"கொஞ்சம் கொஞ்சம் தெரியும்'' என்று தமிழில் சொன்னேன்.

"உனக்குத் தமிழ் தெரியாது என்பது உன் பேச்சில் இருந்தே தெரிகிறது!'' என்று பாலசந்தர் சார் சொன்னார்.

பிறகு, "நான் வருகிறேன்'' என்று விடைபெற்றுக்கொண்டார். கோபாலியுடன் பேசிக்கொண்டே காருக்குச் சென்றார். "எம்.எஸ்.எல் 363'' எண் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

அவர் போனதும் கோபாலி என்னிடம் வந்தார். "பாலசந்தர் சார் உன்னை பார்க்க விரும்புகிறார்'' என்றார்.

எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. "பாலசந்தர் சார் எதற்காக என்னை பார்க்க விரும்புகிறார்? பட சான்ஸ் தேடி வருகிறதோ'' என்று மனம் குறுகுறுத்தது.

பாலசந்தர் சாரின் அழைப்பு வரும் என்று ஆவலோடு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அழைப்பு ஏதும் வரவில்லை.

முன்பு இருந்த உற்சாகம் இப்போது இல்லை. எல்லோரும் சொல்கிற மாதிரி, ஒரு பேச்சுக்காக அப்படி சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். அந்த விஷயத்தை அத்துடன் மறக்க முயன்றேன்.''

இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.



அவசர அழைப்பு

இந்த சமயத்தில் பெங்களூரில் இருந்து ரஜினிக்கு ஒரு கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வா!'' என்று அதில் அவர் அண்ணன் எழுதியிருந்தார்.

என்றைக்கும் இவ்வளவு அவசரமாக ரஜினியை அவர் அழைத்தது இல்லை. ஆகவே, என்னவோ, ஏதோ என்று எண்ணியபடி, பிருந்தாவன் எக்ஸ் பிரசில் பெங்களூருக்குப் புறப்பட்டார்.

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

ரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை
திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி


பெங்களூரில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்த ரஜினிகாந்த், நீண்ட விடுமுறையில் சென்னைக்கு வந்து, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, 2 ஆண்டுகள் நடிப்புப் பயிற்சி பெற்றார்.

நடிப்பு, டைரக்ஷன், ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை - வசனம் எழுதுதல் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதற்காக, முதன் முதலாக புனேயில் "திரைப்படக் கல்லூரி''யை மத்திய அரசு தொடங்கியது.

அதேபோல், சென்னையில் "பிலிம் இன்ஸ்டிடிïட்'' 1973-ல் தொடங்கப்பட்டது. இதற்கு தலைவராக பி.நாகிரெட்டியும், நிர்வாகி (கரஸ்பான்டெண்ட்) ஆக டி.வி.எஸ். ராஜ×வும் இருந்தனர். ராஜாராம்தாஸ் முதல்வராக இருந்தார்.

விளம்பரம்

இந்த பிலிம் `இன்ஸ்டிடிïட்' விளம்பரம் ஒருநாள் பத்திரிகைகளில் வெளியாயிற்று. நடிப்பு, டைரக்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு முதலியவற்றில் பயிற்சி பெற, விண்ணப்பம் அனுப்பலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இந்த விளம்பரத்தை ரஜினி பார்த்தார். `நடிப்பு பயிற்சி பெற்றால், சினிமாவில் சுலபமாக நுழைந்து விடலாம்'' என்று நினைத்தார். விண்ணப்பம் அனுப்பினார்.

சில நாட்களில், நேர்காணலுக்கு வருமாறு கடிதம் வந்தது.

நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, சென்னைக்கு ரெயில் ஏறினார். குறிப்பிட்ட நேரத்தில், நேர்காணலுக்கு பிலிம் `இன்ஸ்டிடிïட்'டுக்குச் சென்றார். அங்கு சினிமா பற்றி பல கேள்விகள் கேட்டனர். கேள்விகளுக்கு தன்னம்பிக்கையுடனும், புத்திசாலித்தனத்துடனும் பதில் சொன்னார்.

கேள்விகளை அவர் எதிர்கொண்ட முறை, ஸ்டைலாக பதில் சொன்ன விதம், தேர்வு செய்யும் அதிகாரிகளைக் கவர்ந்தன. நடிப்பு பயிற்சி பெற ரஜினியை அவர்கள் தேர்வு செய்தனர்.

ரஜினிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பெங்களூருக்கு திரும்பிச் சென்றார். தந்தையிடமும், அண்ணன்களிடமும் விஷயத்தைச் சொன்னார்.

ரஜினி நடிப்புப் பயிற்சி பெறுவதில், தந்தைக்கு விருப்பம் இல்லை. அண்ணன்கள் அரைகுறை மனதுடன் சம்மதித்தார்கள். "கண்டக்டர் வேலையை விட்டு விடாதே! நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு, நடிப்புப் பயிற்சிக்கு போ!'' என்றார்கள்.

ரஜினியின் நண்பர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. "எதிர்காலத்தில் பெரிய நடிகனாக வருவாய்!'' என்று வாழ்த்தினார்கள். ரெயில் நிலையத்துக்குப் பெரும் திரளாக வந்து வழியனுப்பினார்கள்.

36 மாணவர்கள்

பிலிம் இன்ஸ்டிடிïட்டில் நடிப்புப் பயிற்சி பெறுவதற்காக ரஜினி உள்பட மொத்தம் 36 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் 17 பேர் அமிஞ்சிக்கரையில் இருந்த அருண் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தனர். (அருண் ஓட்டல் இடிக்கப்பட்டு இப்போது அங்கு பிரமாண்டமான ஓட்டல் கட்டப்படுகிறது)



இவர்கள் தினமும் பஸ் மூலம் பிலிம் இன்ஸ்டிடிïட்டுக்கு சென்று வருவது வழக்கம்.

சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும், எப்படி வசனம் பேசவேண்டும் என்றெல்லாம் அங்கு பயிற்சி அளித்தார்கள்.

உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை எல்லாம் அங்கு போட்டுக்காட்டுவார்கள். சார்லஸ் லாப்டன், கிளார்க் கேபிள், மார்லன்பிராண்டோ, கிரிகிரிபெக் முதலான நடிகர்கள் நடித்த படங்களை எல்லாம் ரஜினி பார்த்தார். நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை அறிந்து கொண்டார்.

சினிமா உலகைச் சேர்ந்த நடிகர் - நடிகைகள், டைரக்டர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அடிக்கடி பிலிம் இன்ஸ்டிடிïட்டுக்கு வந்து உரை நிகழ்த்துவார்கள். பயிற்சி பெறுகிறவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள்.

பயிற்சி பெறுகிறவர்களை திரைப்படக் கல்லூரி நிர்வாகிகள் சினிமா ஸ்டூடியோக்களுக்கு அழைத்துச்சென்று, அங்கு நடைபெறும் படப்பிடிப்புகளை பார்க்கச் செய்வார்கள்.

காலம் வெகு வேகமாக ஓடியது. பயிற்சி முடிய இன்னும் 3 மாதங்களே பாக்கி. அந்தக் காலக்கட்டம் பற்றி ரஜினி நினைவு கூறுகிறார்:-

"நாங்கள் 36 பேரும் பிலிம் சேம்பர் அலுவலகம், சபையர், புளு டைமண்ட் தியேட்டர்கள், அமெரிக்க தூதரகம், சோவியத் கல்சுரல் சென்டர், டிரைவ் இன் ஓட்டல்... இப்படி சுற்றிச் சுற்றி வந்தாலும், எங்களுக்கு ஒரு தனி உலகம் இருந்தது. அதுதான் கனவு உலகம்!

சுவாரஸ்யமான வாழ்க்கை. வித்தியாசமான வாழ்க்கை. பொறுப்பு இருந்தும் பொறுப்பில்லாதமாதிரியான போலி வாழ்க்கை. கனவு வாழ்க்கை. ஓ... அந்தக் கனவில்தான் எத்தனை சுகம்!

காலை 10 மணிக்குக் கூடுகிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, "ஹலோ... ஹாய்'' என்கிறோம். நகரில் ஓடும் சினிமாப் படங்களை எல்லாம் பார்க்கிறோம். வீட்டில் இருந்து வரும் பணத்தை ஜாலியாக செலவு பண்ணுகிறோம்.

காலம் போவது தெரியவில்லை. இதோ, படிப்பு முடியப்போகிறது!



வெகு தூரத்தில் ஒரு சொர்க்கம் தெரிகிறது. அந்த சொர்க்கம் ஏது? அதுதான் சினிமா உலகம். அங்கே புகுந்துவிடவேண்டும்.

இன்னும் மூன்றே மாதம். படிப்பு முடிந்து விடும். அதன் பிறகு என்ன செய்வது? எப்படி சினிமா உலகில் சான்ஸ் பிடிப்பது? எல்லோருடைய முகத்திலும் எதிர்காலம் பற்றிய கவலை தெரிகிறது.

வீட்டில் சொன்னதைக் கேட்காமல் இன்ஸ்டிடிïட்டில் சேர்ந்தோம். பயிற்சி பெற்றோம். ஆனால் வேலைக்கு என்ன உத்திரவாதம்? மனம் குழம்புகிறது...''

- இப்படியெல்லாம் ரஜினி எண்ணினாலும், அவருடைய உள்மனதில் தன்னம்பிக்கை சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. `வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்' என்று அவருடைய இதயம் இடைவிடாமல் கூறிக்கொண்டிருந்தது.

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

ரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை
சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?





பஸ் கண்டக்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த், நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். அதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

ரஜினிகாந்த் சினிமா பார்க்கப்போனால் `கிï'வில் நிற்பதில்லை. ஒரு "ஜம்ப்'' செய்தால் போதும்; டிக்கெட் கொடுக்கப்படும் இடத்திற்கு போய்விடுவார்! காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய் படம் பார்ப்பார்.

ரஜினி இப்படி `ஜம்ப்' செய்து தாவும்போது, கிïவில் நிற்பவர்கள் எதிர்ப்பு காட்டாமல், `கப்சிப்' என்று இருப்பார்கள். எதிர்ப்பு தெரிவித்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த வட்டாரத்தில் ரஜினி அவ்வளவு "பிரபலம்!''

நாடோடி மன்னன்

ஒரு சமயம் "நாடோடி மன்னன்'' படம் பார்க்க ரஜினியின் நண்பர்கள் கிளம்பினார்கள். ரஜினியின் கையில் பணம் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

அடுத்த சில நிமிடங்களில், வீட்டில் இருந்த ஒரு வெள்ளி டம்ளர், மார்வாடி கடைக்கு இடம் பெயர்ந்தது! ரஜினிக்கு ஐந்து ரூபாய் கிடைத்தது. நண்பர்களுடன் போய், நாடோடி மன்னன் படம் பார்த்தார்.

பஸ் கண்டக்டர்

இந்த சமயத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக கர்நாடகா போக்குவரத்து நிறுவனத்தில், பஸ் கண்டக்டர் வேலை கிடைத்தது. ரஜினிக்கு ஏக சந்தோஷம். கலெக்டர் வேலை கிடைத்தது போல் மகிழ்ந்து போனார்.

மகாராணி பெண்கள் கல்லூரி உள்ள சிவாஜி நகர் - சாம்ராஜ்பேட்டை ரூட்டில், 134-ம் நெம்பர் பஸ்சில்தான் கண்டக்டராக வேலை பார்த்தார், ரஜினி.

பஸ்சில் அவரை பார்ப்பவர்கள் கண்டக்டர் என்றே நம்பமாட்டார்கள். அந்த அளவுக்கு `டிப்டாப்' ஆக உடை அணிவார். பயணிகளுக்கு `டிக்கெட்' கிழித்துக் கொடுப்பதும், "ரைட்... ரைட்'' என்று கூறுவதும் தனி ஸ்டைலாக இருக்கும்.

கல்லூரி மாணவிகளும், இளம் பெண்களும், "ஆள் கறுப்பு என்றாலும், அந்த கண்டக்டர் படு ஸ்டைலுடி!'' என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்வார்கள்!

எங்கேயோ கேட்ட குரல்!

ஒருநாள், வேலை முடிந்து ரஜினிகாந்த் வீட்டுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். ஒரு தெருவில் போகும்போது, "ஐயோ! என்னைக் கொன்னுடாதே! விட்டு விடு!'' என்று ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது.

யாரோ ஒருவன், ஒரு பெண்ணை கெடுக்க முயற்சிக்கிறான் என்று நினைத்தார், ரஜினி. குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார். ஒரு பெரிய சுவருக்கு மறுபக்கத்தில் இருந்து அக்குரல் கேட்டது. `ஜம்ப்' செய்து மறுபக்கம் குதித்தார்.

அங்கே ஒரு ரவுடியின் கையில் சிக்கி, இளம் பெண் ஒருத்தி துடித்துக் கொண்டிருந்தாள். ரவுடியின் கையில் கத்தி பளபளத்தது.

"டேய், ராஸ்கல்!'' என்று பாய்ந்தார், ரஜினி.

கையில் இருந்த கத்தியை கீழே போட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தான், ரவுடி.

"இது என்ன புதுக்குழப்பம்!'' என்று கேட்டபடி, ஒருவர் ரஜினியிடம் வந்தார்.



அவர் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் இருந்தது!

அது நாடக வசனப் புத்தகம் என்பதும், அங்கு நடந்து கொண்டிருந்தது நாடக ஒத்திகை என்பதும் ரஜினிக்கு உடனே புரிந்து விட்டது.

விழுந்து விழுந்து சிரித்தார்.

"இந்த நிகழ்ச்சியினால் எனக்கு நாடகத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நாடகங்கள் போடத் தூண்டியது'' என்று கூறுகிறார், ரஜினி.

சிவாஜி வேடம்

இதன்பின் ஒரு நாடகக் குழுவை ரஜினி அமைத்தார். "ஜ×வாலை'' என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.

அந்த நாடகம் மராட்டிய
மாவீரர் சத்ரபதி சிவாஜியைப் பற்றியது. சிவாஜி வேடத்தில் ரஜினி நடித்தார். சிவாஜிகணேசன் பாணியைப் பின்பற்றி நடித்தார்.

கையில் தீப்பந்தத்தை பிடித்துக்கொண்டு வீராவேசமாக சிவாஜி பேசுவது போல் ஒரு கட்டம். சிவாஜிகணேசன் பாணியிலேயே சிம்ம கர்ஜனை செய்தார், ரஜினி. கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

உற்சாகம் அடைந்த ரஜினி, தீப்பந்தத்தை மேலும் தூக்கிப் பிடித்தபடி, வீரவசனத்தைத் தொடர்ந்து பேசினார்.

நாடகத் திரையில் தீப்பந்தம் பட்டு, தீ பிடித்துக்கொண்டது!

கூடியிருந்தவர்கள் "தீ... தீ...'' என்று கத்திக்கொண்டே சிதறி ஓடினார்கள்.

அப்போதுதான் வீர வசனத்தை நிறுத்தினார், ரஜினி!

துரியோதனன்

ஒருநாள் இப்படி தீ விபத்து ஏற்பட்டாலும், தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வந்தார், ரஜினி.

"குருசேத்திரம்'' என்ற நாடகத்தில், துரியோதனன் வேடத்தில் நடித்தார். அவர் நடிப்புக்கு ஏக வரவேற்பு.

நாடகம் முடிந்ததும், முன்னிலை வகித்த கர்நாடகா போக்கு வரத்து அதிகாரி, மேடைக்கு வந்தார்.

"நம்முடைய சிவாஜிராவ் (ரஜினி) பிரமாதமாக நடித்தார். விரைவில் அவர் சினிமாவில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அவர் நடிப்பு பிரமாதம்!'' என்று புகழ்ந்தார்.

இதைக் கேட்டு பூரித்துப் போனார், ரஜினி.

தொடர்ந்து நாடகங்கள் நடத்தினார். அவர் நடிப்பை சக ஊழியர்கள் புகழ்ந்தனர்.

ஆனால், ரஜினியின் அப்பாவுக்கு மட்டும், மகன் நாடகத்தில் நடிப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. "மாலை நேர கல்லூரியில் சேர்ந்து படி. போலீசில் சேர்ந்து பெரிய அதிகாரியாகலாம்!'' என்று கூறிக்கொண்டிருந்தார்.



ஆனால், ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, நாளுக்கு நாள் வளர்ந்தது. சிலர், அவருடைய கறுப்பு நிறத்தை கேலியாகக் குறிப்பிடுவார்கள். ஆனால், ரஜினி அதையெல்லாம் பொருட்படுத்துவது இல்லை. சினிமாவில் சேர்ந்தே தீரவேண்டும், நடிகனாக வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

இதுபற்றி தன்னுடைய நெருங்கிய நண்பரான புட்ராஜிடம் தெரிவித்தார்.

"சினிமாவில் நடித்தால் நீ நிச்சயம் பெரிய நடிகனாக வருவாய். உன் ஸ்டைல் உனக்கு ரொம்ப உதவும்'' என்றார், புட்ராஜ்.

`கண்டக்டர் வேலைக்கு எப்போது முழுக்குப் போடுவது, எப்போது சினிமாவில் சேருவது' என்று சதா யோசித்தபடி இருந்தார், ரஜினி.

அதற்கான வாய்ப்பு, எதிர்பாராமல் வந்தது.

கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார்

ரஜினிகாந்த் வாழ்க்கைப் பயணம்
படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார்
கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார்
தந்தையின் விருப்பப்படி கல்லூரியில் சேர்ந்த ரஜினிகாந்த், படிக்கப் பிடிக்காமல் வேலை தேடி சென்னைக்கு ஓடிவந்தார். பல கஷ்டங்களை அனுபவித்தார். கிடைத்த சம்பளத்தில் சினிமா பார்த்து விட்டு, பட்டினி கிடந்தார்.

பெங்களூர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்தபோது ரஜினிக்கு வயது 16. அரும்பு மீசை வளரத் தொடங்கிய பருவம்.

"சும்மா ஊர் சுற்றிக் கொண்டிருந்தால், பையன் கெட்டுப்போய் விடுவான். கல்லூரியில் சேர்ந்து படிக்கட்டும்'' என்று, ரஜினியின் தந்தை முடிவு செய்தார்.

தந்தையின் வற்புறுத்தல் காரணமாக, வேறு வழியின்றி கல்லூரியில் "பி.யு.சி'' வகுப்பில் சேர்ந்தார், ரஜினி. சில மாதங்கள்தான் படித்தார். படிப்பு வேம்பாய்க் கசந்தது. கல்லூரியில் சம்பளம் கட்டுவதற்காகக் கொடுத்த 200 ரூபாயை எடுத்துக்கொண்டு, சென்னைக்கு ரெயில் ஏறிவிட்டார்.

இந்தக் காலக்கட்டத்தில், ரஜினி சினிமாப் படங்கள் பார்ப்பது உண்டு என்றாலும், சினிமாவில் நடிக்கும் ஆசை வரவில்லை. ஏதாவது வேலை தேடலாம் என்ற எண்ணத்தில்தான் சென்னைக்கு வந்தார்.

ஆனால், பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்கவில்லை. பணம் கரையக் கரைய, பயம் ஏற்பட்டது. கடைசியில் ஒரு தச்சுப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார்.

அங்கு போதிய வருமானமும் இல்லை; வேலையும் பிடிக்கவில்லை. எனவே, பெங்களூருக்குத் திரும்பிச் சென்றார்.

மீண்டும் சென்னை

பெங்களூரில் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். சில நாட்கள்தான் வேலை பார்த்தார். அதன்பின் வேலை பிடிக்காமல் மீண்டும் சென்னைக்கு வந்தார்.

சென்னையில் வேலை தேடி அலைந்தார். அப்போது மிட்லண்ட் தியேட்டரில் கே.பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த "எதிர்நீச்சல்'' படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தை போய்ப்பார்த்தார்.

மறுநாள், ஒரு கட்டிட காண்டிராக்டரிடம் சித்தாள் வேலை கிடைத்தது. அங்கு கிடைக்கும் சம்பளத்தில் நிறைய சினிமா படங்கள் பார்த்தார். சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. குணச்சித்திர வேடங்களில் சிவாஜியின் நடிப்பையும், வீரதீரச் செயல்கள் நிறைந்த காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடிப்பையும் கண்டு பிரமித்தார்.



கையில் கிடைக்கும் காசில் சினிமா பார்த்துவிட்டு, பல நாள் பட்டினி கிடந்திருக்கிறார்.

ஒருநாள் இப்படி சினிமா பார்த்துவிட்டு, "எல்.ஐ.சி'' கட்டிடத்தின் முன், பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கினார். இரவில் ரோந்து சுற்றிய போலீசார், சந்தேகக் கேசில் அவரைப் பிடித்து "லாக்-அப்''பில் வைத்துவிட்டனர். மறுநாள் காலை விசாரணை நடத்தியதில், அவர் நிரபராதி என்று தெரிந்தது. உடனடியாக விட்டுவிட்டனர்.

போதிய வருமானம் இல்லை. பசி - பட்டினியுடன் எத்தனை நாள் காலம் தள்ளமுடியும்? மீண்டும் பெங்களூருக்குத் திரும்ப முடிவு செய்தார், ரஜினி.

டிக்கெட் வாங்கக்கூட கையில் பணம் இல்லை. `வருவது வரட்டும்' என்று தீர்மானித்து, பெங்களூர் ரெயிலில் ஏறி, பெஞ்சுக்கு அடியில் படுத்துக்கொண்டார்.

நல்லவேளையாக டிக்கெட் பரிசோதகர் எவரும் வரவில்லை. மறுநாள் காலை பத்திரமாக பெங்களூர் போய்ச் சேர்ந்தார்.

வீட்டுக்குப் போனபோது, யாரும் அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டு ஓடியதால், கோபமாக இருந்தார்கள்.

`ஏதாவது வேலை பார்த்தால்தான் இனி மரியாதை கிடைக்கும்' என்று தீர்மானித்த ரஜினி, ஒரு தச்சுப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார்.

சில நாட்கள் கழித்து, ஒரு ஒர்க்ஷாப்பில் சேர்ந்தார்.

அந்த வேலையும் பிடிக்கவில்லை. ஒரு அரிசி மண்டியில் உள்ள லாரி ஷெட்டுக்கு போனார். அங்கு வேலை கிடைத்தது. அதாவது மூட்டை தூக்கும் வேலை! அரிசியைச் சுமந்து, லாரியில் ஏற்றவேண்டும். 60 மூட்டையைத் தூக்கினால் 2 ரூபாய் கூலி.

ரஜினிகாந்த் 180 மூட்டைகளை தூக்கிப்போட்டு, ஒரு நாளைக்கு 6 ரூபாய் சம்பாதித்து விடுவார்.



ரஜினி மீது அவர் அண்ணி தாய்ப்பாசம் வைத்திருந்தார். இரவில் நேரம் கழித்து வந்தாலும், அவருக்கு சாப்பாடு போட்டு விட்டுத்தான் தூங்கப்போவார்.

அண்ணன் விழித்திருந்தால், ரஜினிக்கு `அர்ச்சனை' கிடைக்கும்!

ரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை

ரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை
சின்ன வயதில் நடத்திய லீலைகள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சின்ன வயதில் முரட்டு சுபாவம் உள்ளவராக இருந்தார். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, பெண்களை விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.

மகன், கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, போலீசில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்பது ரஜினியின் தந்தை ஆசை. ஆனால், ரஜினிக்கு படிப்பில் நாட்டமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.

முரட்டுக்காளை

வாலிப வயதில் அடியெடுத்து வைக்கும்போது, பருவத்தின் உந்துதலாலும், நண்பர்களின் பழக்கவழக்கங்களினாலும் தவறு செய்வோர் பலர்.

மகாத்மா காந்தி கூட தமது சுய சரிதையில் இதுபற்றி எழுதியிருக்கிறார். "மாமிசம் சாப்பிட்டால் பலசாலி ஆகலாம் என்று என் நண்பர் சொன்னதைக் கேட்டு, நான் ரகசியமாக மாமிசம் சாப்பிட்டேன். பின்னர் அது தவறு என்பதை உணர்ந்து, என்னை மன்னித்து விடும்படி தந்தைக்குக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, என் தந்தை கண்ணீர் வடித்தார். அந்தக் கண்ணீரில் என் பாவங்கள் கரைந்துவிட்டன'' என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் இளமைப் பருவத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அரும்பிக்கொண்டிருந்த மீசை நன்றாக இருக்க வேண்டும் என்று கருதி, மையினால் மீசை வரைந்து கொள்வார். சிகரெட் பிடிப்பார்.

இதுபற்றி எல்லாம், பேட்டிகளிலும், கட்டுரைகளிலும் ஒளிவு மறைவு இல்லாமல் ரஜினி எழுதியிருக்கிறார்.

ஒரு கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது:-

"பிஞ்சிலே பழுத்தது என்பார்களே, அது மாதிரி நான் வளர்ந்தேன். சின்ன வயதிலேயே `செக்ஸ்' என்றால் என்ன வென்று எனக்குத் தெரியும். என்னைவிட வயதில் மூத்தவர்கள்தான் எனக்கு பிரண்ட்ஸ். அவர்கள் குடித்து விட்டு தாசிகள் வீட்டுக்கு போவார்கள். நின்று பார்த்திருக்கிறேன்.

அந்த சின்ன வயதிலேயே தாங்க முடியாத உதையும் வாங்கியிருக்கிறேன்.

16 வயதில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் சேர்ந்தபோது, இந்த அரகன்ஸ், முரட்டுத்தனம் கொஞ்சம் மட்டுப்பட்டன. பிரேயர், பிராணயாமம் எல்லாம் செய்தபோது, என் சுபாவங்கள் சற்று குறைந்தன.

ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. முடித்தபின் மீண்டும் மூத்த வயது நண்பர்கள் கிடைத்தார்கள். முரட்டுத்தனம் மறுபடியும் வந்துவிட்டது. முரட்டுத்தனம் என்றால் சண்டை மாத்திரம் அல்ல. "நீ ஒரு கிளாஸ் சாராயம் குடிப்பியா? நான் 6 கிளாஸ் சாராயம் குடிப்பேன்' என்று சவால் விடுகிற முரட்டுத்தனம். மற்றவர்கள் பார்வையை நம் மீது திருப்பவேண்டும் என்ற வெறி.''

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.



போலீஸ் பிடித்தது

ஒருமுறை, ஒரு பெண்ணை விரட்டிச் சென்றபோது, அவள் போலீசாரிடம் புகார் செய்ய, போலீசார் ரஜினியையும், அவருடைய நண்பர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

ரஜினியின் தந்தை தலைமை போலீஸ்காரர் என்பதையும், சிறந்த சேவை செய்ததற்காக அரசாங்க விருது பெற்றவர் என்பதையும் அறிந்து கொண்ட போலீசார், ரஜினியை விடுவித்து, வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.

நடந்ததை அறிந்த ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணாவுக்கு கோபம் பொங்கியது. ரஜினியை செம்மையாக அடித்து நொறுக்கினார்.

பூதச்சாமியார்

ரஜினிகாந்த், சிறு வயதிலேயே பயம் இல்லாதவராக - துணிச்சல் மிக்கவராக இருந்தார்.

அவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள காட்டில் பூதச்சாமியார் என்று ஒரு சாமியார் இருப்பதாக மாணவர்கள் பேசிக்கொள்வார்கள். "பூதமாவது! சாமியாராவது!'' என்று ரஜினி கேலி செய்வார்.

"அப்படியானால், நீ காட்டுக்கு தன்னந்தனியாகச் சென்று அந்த சாமியாரைப் பார்த்துவிட்டு வா பார்க்கலாம்!'' என்று மற்ற மாணவர்கள் சவால் விட்டனர்.

சவாலை ஏற்ற ரஜினி, தன்னந்தனியாக காட்டுக்குள் நுழைந்தார். கால் போன போக்கில் வெகு தூரம் சென்றுவிட்டார். சாமியாரைக் காணோம்.

நடு காடு. இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. ஆள் அரவமே இல்லை. ரஜினிக்கு லேசாக பயம் வந்தது.

அந்தச் சமயத்தில், "வா, மகனே வா!'' என்று ஒரு குரல் கேட்டது. ரஜினி திரும்பிப் பார்த்தார். அங்கே ஒரு சாமியார் நின்று கொண்டிருந்தார். வயது சுமார் 60 அல்லது 70 இருக்கும். தலைமுடி, சடை சடையாகத் தொங்கியது.

ரஜினி அவர் அருகில் சென்றார். அவர் ஏதோ மந்திரம் சொல்லி, அதை திருப்பிச் சொல்லும்படி ரஜினியிடம் கூறினார். அதன்படி ரஜினி திருப்பிச் சொன்னார்.



"இப்போது நீ திரும்பிப் போ! நாளைக்கு வா!'' என்று சொன்னார், சாமியார்.

ரஜினி காட்டுக்குள் போய் வெகு நேரமாகத் திரும்பி வராததால், அவருடைய நண்பர்கள் பயந்து போய்விட்டார்கள்.

அப்போது ரஜினிகாந்த், பூதச்சாமியாரை பார்த்துவிட்டேன்'' என்று கூறிக்கொண்டே ஓடிவந்தார்.

"நிஜமாகவா! சாமியாரை பார்த்தாயா!'' என்று நண்பர்கள் வியப்புடன் கேட்டார்கள்.

நடந்த விவரங்களை எல்லாம் அவர்களிடம் ரஜினி கூறினார். தைரியமாக நடுக்காட்டுக்கு போய் சாமியாரைப் பார்த்துவிட்டுத் திரும்பிய ரஜினியை நண்பர்கள் பாராட்டினார்கள்.

மறுநாள் பூதச்சாமியாரை ரஜினி போய்ப்பார்த்தார். தொடர்ந்து சில நாட்கள் சென்று வந்தார். ரஜினிக்கு யோகாவையும், சில மந்திரங்களையும் சாமியார் கற்றுக்கொடுத்தார்.

பிறகு, "எதிர்காலத்தில் நீ பெரிய ஆளாக வருவாய்'' என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார்.

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்கை


அபூர்வமான ஆற்றல், கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால், "சூப்பர் ஸ்டார்'' ஆனவர் ரஜினிகாந்த். இன்று ஜப்பான் உள்பட பல வெளி நாடுகளில் அவருடைய புகழ்க்கொடி மிக உயரத்தில் பறக்கிறது.

ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ். அதை சினிமாவுக்காக "ரஜினிகாந்த்'' என்று மாற்றி வைத்தவர், டைரக்டர் கே.பாலசந்தர்.



பெற்றோர்

ரஜினிகாந்தின் தந்தை பெயர் ரானோஜிராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ராம்பாய்.

"கெய்க்வாட்'' என்பது, குடும்பப் பெயராகும். மராட்டிய மாமன்னர் சிவாஜியின் பரம்பரையில் வந்தவர்கள் "கெய்க்வாட்'' என்று அழைக்கப்பட்டனர்.

ரஜினியின் முன்னோர்கள் சிவாஜியின் மெய்க்காப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களில் சிலர் பிற்காலத்தில் கர்நாடகத்திற்கு குடிபெயர்ந்தனர். மற்றும் சிலர், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாச்சிக்குப்பம் என்ற கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.

ரஜினியின் தந்தையான ரானோஜிராவ் பிறந்தது நாச்சிக்குப்பத்தில்தான்.

ரஜினியின் தாயார் ராம்பாய், கோவை மாவட்டத்தின் எல்லையில் உள்ள கொள்ளேகால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர்.

ரானோஜிராவுக்கு கர்நாடக மாநில போலீஸ் இலாகாவில், போலீஸ் உத்தியோகம் கிடைத்ததால், குடும்பத்தோடு பெங்களூரில் குடியேறினார்.

ரானோஜிராவ், தெய்வ பக்தி மிக்கவர். நேர்மையானவர். வேலையில் திறமையானவர். அதனால் படிப்படியாக உயர்ந்து "ஹெட் கான்ஸ்டபிள்'' ஆனார்.

ரஜினி பிறந்தார்

ரானோஜிராவ் - ராம்பாய் தம்பதிகளுக்கு சத்தியநாராயணராவ், நாகேஸ்வரராவ் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு மூன்றாவதாகப் பிறந்தவர் ரஜினிகாந்த்.

1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி இரவு 11-45 மணிக்கு அவர் பிறந்தார். திருவோணம் நட்சத்திரம்; மகர ராசி.

ரஜினிக்கு சத்தியநாராயணராவ் 5 வயதும், நாகேஸ்வரராவ் மூன்று வயதும் மூத்தவர்கள். ரஜினிக்கு ஒரு அக்காள். பெயர் அஸ்வத் பாலுபாய்.

ரஜினிகாந்த் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தாலும், தாய் மொழி மராத்தி.



பள்ளிப்பருவம்

குழந்தையாக இருக்கும்போதே ரஜினி துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் மிகுந்தவராக விளங்கினார்.

ஐந்தாவது வயதில், பசவன்குடியில் உள்ள பிரிமியர் மாடல் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரராக விளங்கினார்.

ரஜினிகாந்த் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது, தாயாரை இழந்தார்.

உடல் நிலை கவலைக்கிடமாகி ஆஸ்பத்திரியில் இருந்த தாயாரைப் பார்க்க, ரஜினியை அவர் அண்ணன் சத்தியநாராயணா அழைத்துச் சென்றார். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த ராம்பாய், ரஜினியை தன் அருகே அழைத்து தலையைக் கோதி விட்டார். கையை எடுத்து முத்தமிட்டார்.

அதுதான் மகனுக்கு அவர் கொடுத்த கடைசி முத்தம். மறுநாள் இறந்து விட்டார்.

விவரம் அறியாத சிறு வயதிலேயே அன்னையை இழந்தார் ரஜினி. தாயார் இறந்து விட்டார், இனி அவரைப் பார்க்க முடியாது என்பதைக்கூட அப்போது அவரால் உணர முடியவில்லை.



இதுபற்றி ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

"சின்ன வயதில் அவன் (ரஜினி) ஒரு விளையாட்டுப் பிள்ளையாகத்தான் இருந்தான். அம்மா இறந்தபோது, அவனுக்கு வயது 9. விவரம் தெரியாத வயது.

அம்மா உடலை, மாலை போட்டு வைத்திருந்தோம். அப்போதுகூட, அம்மா இறந்ததை உணராமல், வீதியில் சைக்கிள் விட்டுக்கொண்டிருந்தான். அம்மா தூங்கிக் கொண்டிருப்பதாக அவனுக்கு நினைப்பு.

மறுநாள், வீட்டில் அம்மா இல்லை என்று தெரிந்ததும், "அம்மா எங்கே? அம்மாவைப் பார்க்கணும்'' என்று அழுதான்.

அன்று முதல் அவனுக்கு அம்மா என் மனைவிதான்.

அண்ணியிடம் ரொம்பவும் பாசமாக இருப்பான். வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வான்.

நான் வீட்டுக்கு வந்ததும், அவன் இருக்கிறானா என்றுதான் முதலில் பார்ப்பேன். அவனைப் பார்க்காமல் ஒருநாள்கூட தூங்கியது கிடையாது.

தினமும் அவன் நண்பர்களுடன் சுற்றிவிட்டு, லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவான். அது எனக்குப் பிடிக்காது. சத்தம் போடுவேன். சில சமயம் அடித்தும் இருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் அவன் பெரிதாக நினைக்கமாட்டான். உடனே சமாதானமாகி, என் பக்கத்தில் வந்து உட்காருவான். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.''

இவ்வாறு சத்தியநாராயணா குறிப்பிட்டுள்ளார்.

தாயார் பற்றி பிறகு ரஜினிகாந்த் கூறுகையில், "அம்மா இறந்தபோது நான் விவரம் அறியாச் சிறுவனாக இருந்தேன். இப்போது, எந்தத் தாயைப் பார்த்தாலும், எங்கம்மாவை நினைத்து ஏங்குகிறேன். `அன்னை ஓர் ஆலயம்' படத்தில் நான் நடித்தபோது, "அம்மா, நீ சுமந்த பிள்ளை'' என்ற பாடல் காட்சியில் நான் நிஜமாகவே என் அம்மாவை நினைத்து அழுதுவிட்டேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.