Saturday, 5 July 2014

முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை'
முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்த "ஆறிலிருந்து அறுபது வரை'' படம், மகத்தான வெற்றி பெற்று, சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.

வில்லனாகவும், ஆன்டி ஹீரோவாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும், ஸ்டைல் மன்னனாகவும் ஜொலித்து வந்த ரஜினியை, முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைக்க பட அதிபரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் முடிவு செய்தார்.

அதற்காக அவர் உருவாக்கிய கதைதான் "ஆறிலிருந்து அறுபது வரை.''

குடும்பப் பாசம்

சிறு வயதிலேயே பெற்றோரை இழக்கும் ஒரு சிறுவன், கஷ்டப்பட்டு தன் தம்பிகளையும், தங்கையையும் படிக்க வைக்கிறான். குடும்பத்துக்காக தன்னை மெழுகுவர்த்திபோல் அழித்துக் கொள்கிறான்.

ஆனால், 60 வயதாகும் தருணத்தில் அவருடைய குடும்பத்தினர் நன்றி விசுவாசத்தோடு நடந்து கொள்ளவில்லை.

இன்றைய உலக நடப்பை யதார்த்தமாகச் சித்தரிக்கும் கதை. வசனத்தையும் பஞ்சு அருணாசலம் எழுதினார்.

மாறுபட்ட வேடம்

இந்தப் படத்தில், ரஜினிக்கு சண்டை இல்லை, ஸ்டைல் இல்லை. குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்யும் நல்லவராக நடித்திருந்தார். 25 வயது முதல் 60 வயது வரையுள்ள பல தோற்றங்களில் தோன்றினார்.

ரஜினியுடன் படாபட் ஜெயலட்சுமி, சங்கீதா, ஜெயா, மல்லிகா, திலக், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தார்கள். பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசை அமைத்திருந்தார். டைரக்ஷன்: எஸ்.பி.முத்துராமன்.

புதிய தோற்றத்தில் ரஜனியை அவருடைய ரசிகர்கள் ஏற்பார்களா? படம் வெற்றி பெறுமா? என்று பலரும் சந்தேகப்பட்டார்கள்.

ரஜினியும், படத்தின் ரிசல்ட்டை ஆவலுடன் எதிர்பார்த்தார்.


16-9-1979-ல் வெளிவந்த இந்தப்படம், `ஓகோ' என்று ஓடியது. நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

`சிவாஜிகணேசன் நடிக்கும் குடும்பப் பாங்கான வேடங்களிலும் நன்கு நடிக்கக் கூடியவர் ரஜினி' என்பது, இப்படத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டது.

அந்த ஆண்டின் சிறந்த படமாக இதை சினிமா ரசிகர்கள் சங்கம் தேர்ந்தெடுத்தது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்கும், சிறந்த டைரக்டருக்கான விருது எஸ்.பி.முத்துராமனுக்கும் கிடைத்தது.

இப்படம், "ஓ இண்டி கதா'' என்ற பெயரில் தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது. தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடியது.

எஸ்.பி.முத்துராமன்

"ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தின் டைரக்டரான எஸ்.பி.முத்துராமன், அந்தப் படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி

கூறியதாவது:-"ரஜினி, ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும்போதும், அது பற்றிய முழு விவரத்தையும் கேட்டறிந்து, கதையை உள்வாங்கிக்கொண்டு, தான் நடிக்க வேண்டிய காட்சியை நன்கு சிந்தித்து ஜீரணித்துக்கொண்டு நடிப்பார்.

"ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தின் படப்பிடிப்பின்போது, ரஜினிக்கு ஒரு சந்தேகம் வந்தது. "குடும்பத்துக்கே தன்னை தியாகம் செய்யும் அண்ணனிடம், உடன் பிறந்தவர்கள் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்வார்களா?'' என்று கேட்டார்.

"பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதுதான் யதார்த்தம்'' என்று கதாசிரியர் பஞ்சு அருணாசலமும், நானும் விளக்கினோம். இருப்பினும், ரஜினி முழுவதுமாக திருப்தி அடையவில்லை.

இதன் காரணமாக பஞ்சு அருணாசலம் ஒரு முடிவுக்கு வந்தார். 5 ஆயிரம் அடி வரை படத்தை எடுத்து ரஜினிக்கு போட்டுக் காட்டுவது, அது அவருக்குப் பிடித்திருந்தால் தற்போதுள்ள கதையை தொடர்ந்து படமாக்குவது, இல்லாவிட்டால் கதையின் போக்கை மாற்றுவது - இதுதான் பஞ்சு அருணாசலத்தின் முடிவு.


இதை ரஜினியிடம் தெரிவித்தோம். அவர் ஒப்புக்கொண்டார்.

அதன்படி, 5 ஆயிரம் அடி வரை படம் எடுத்தோம். எடிட் செய்து, ரஜினிக்குப் போட்டுக்காட்டினோம்.

அவருக்கு முழு திருப்தி ஏற்பட்டது. "படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. படத்தை இதே மாதிரி தொடருங்கள்'' என்றார்.

அதேபோல் படத்தை எடுத்து முடித்தோம்.

விநியோகஸ்தர்களிடம், "படத்தின் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் வசூல் பற்றி கவலைப்படாதீர்கள். அதுபற்றி எங்களுக்குத் தகவலும் தெரிவிக்காதீர்கள். திங்கட்கிழமை வசூலைப் பாருங்கள். பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறதா என்று கவனியுங்கள். அதை எங்களுக்குத் தெரிவியுங்கள்'' என்றோம்.

நாங்கள் எண்ணியபடி திங்கட்கிழமை முதல், பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தைப் பார்த்தார்கள். வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது.

படம் பெரிய வெற்றி பெற்றதுடன், ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது.''

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு
சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்
கே.ஆர்.விஜயா சொந்தமாகத் தயாரித்த "நான் வாழவைப்பேன்'' படத்தில், சிவாஜிகணேசனுடன் ரஜினி இணைந்து நடித்தார். மிகப் பிரமாதமாக நடித்து, சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்.

"நினைத்தாலே இனிக்கும்'' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்த படம் "தர்மயுத்தம்.'' இதை, சாருசித்ரா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டி.ஆர்.சீனிவாசன் தயாரித்தார்.

ஸ்ரீதேவி

இதில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி. மற்றும் லட்சுமிஸ்ரீ, சச்சு, புஷ்பலதா, தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் நடித்தனர்.

கதை-வசனத்தை பீட்டர் செல்வகுமார் எழுத, கண்ணதாசன், எம்.ஜி.வல்லபன், ஹரிராம் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசை அமைத்தவர்: இளையராஜா.


படத்தை ஆர்.சி.சக்தி டைரக்ட் செய்தார்.

தங்கை மீது பாசம் உள்ள தொழில் அதிபராக ரஜினி நடித்தார். சற்றே மாறுபட்ட வேடம். மிகச்சிறப்பாக நடித்து ரசிகர்களைக்

கவர்ந்தார்.இந்தப் படத்தில், ரஜினிக்காக மலேசிய வாசுதேவன் பாடிய, "ஒரு தங்க ரதத்தில்...'' என்று தொடங்கும் பாடல், பெரிய `ஹிட்' ஆயிற்று.

"தர்மயுத்தம்'', அதே பெயரில் தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது.

நான் வாழவைப்பேன்

ரஜினிகாந்தின் திரை உலகப் பயணத்தில், ஒரு மைல் கல் "நான் வாழவைப்பேன்.'' இதில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார்.

நடிகை கே.ஆர்.விஜயாவும், அவர் கணவர் வேலாயுத நாயரும் தயாரித்த படம்.

அமிதாப்பச்சனும், வில்லன் பிரானும் நடித்த "மஜ்பூர்'' என்ற இந்திப் படத்தை தழுவி தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயா, புஷ்பமாலா, ஏ.சகுந்தலா, ஜெய்கணேஷ், தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், வி.கே.ராமசாமி, செந்தாமரை ஆகியோரும் நடித்தனர்.

திரைக்கதை - வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். யோகானந்த் டைரக்ட் செய்தார்.

வியக்க வைத்த நடிப்பு

படத்தில், இடைவேளைக்குப் பிறகுதான் ரஜினிகாந்த் வருவார். வில்லன் போன்ற கேரக்டர் என்றாலும், சிவாஜியைக் காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்யும் குணச்சித்திர வேடம்.

இப்படத்தில், ரஜினியின் நடிப்பு புதிய பரிமாணத்துடன், சிகரத்தைத் தொட்டது. தன்னுடைய குருவான சிவாஜிகணேசன் முன்னிலையிலேயே அபாரமாக நடித்து, அவருடைய பாராட்டைப் பெற்றார்.

சிவாஜி சொன்னது என்ன?

இந்தப்படம் தயாரானபோது தன் வேடம் பற்றியும், ரஜினி வேடம் பற்றியும் சிவாஜி என்ன சொன்னார்? ரஜினியின் நடிப்பை பார்த்துவிட்டு, அவர் கூறிய கருத்து என்ன?

- இதுபற்றி, அப்படத்தின் வசனகர்த்தாவும், சிவாஜியின் நெருங்கிய நண்பருமான ஆரூர்தாஸ் கூறியதாவது:-


இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில் சிவாஜிகணேசனும், `பிரான்' நடித்த பாத்திரத்தில் ரஜினிகாந்தும் நடிக்க ஏற்பாடாயிற்று.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அந்த இந்திப்படத்தை சிவாஜியும் நானும் பார்த்தோம். பார்த்து முடித்ததும் சிவாஜி என்னிடம் இப்படிக் கூறினார்.

"ஆரூரான்! `ஹீரோ' அமிதாப் நடிச்சிருக்கிறது வெறும் "டம்மி'' ரோல். அதில் நடிப்புக்கு `ஸ்கோப்' இல்லே. பிரான் ரோல்தான் "ஆக்டிங் ரோல்'' அதுதான் ஆடியன்ஸ் மனசுல நிக்கும். கெஸ்ட் ரோலா அதைச் செய்யலாமான்னு நினைக்கிறேன்.''

இவ்வாறு சிவாஜி கூறியதும் நான் சொன்னேன்:

"உங்களையும் ரஜினியையும் வச்சிக்கிட்டு, ரஜினி ஹீரோ, நீங்க `சைடு ரோல்'னு சொன்னா சரியா இருக்குமா? தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வாரா என்பதையும் யோசிங்க.''

"ஆமா. உண்மைதான். செய்தா, விஜயா - வேலாயுதம் இரண்டு பேருக்காக இந்தப் படத்துல நான் நடிக்கணும். இல்லேன்னா

விட்டுடணும்.''"நீங்க நடிச்சா நல்லாயிருக்கும்.''

"அதுமட்டுமில்லை. அந்தப் பையன் (ரஜினி) நல்லா வளர்ந்துகிட்டு வர்றான். அந்த வளர்ச்சிக்கு இந்தப் படமும் அவனுக்குப் பயன்படட்டுமே. நான்தான் எல்லாம் செய்திட்டேனே. இப்படித்தான் அப்போ ஜெமினிகணேசனும், நானும் சேர்ந்து நடிச்ச "பெண்ணின் பெருமை'' படத்துல நான் விட்டுக்கொடுத்து வில்லன் பாத்திரத்தை எடுத்துக்கிட்டேன். ஓகே! செய்வோம்'' என்றார், சிவாஜி.


பாராட்டு

"நான் வாழ வைப்பேன்'' படப்பிடிப்பெல்லாம் முடிந்து, முதல் பிரதியை சிவாஜி பார்த்தார். நானும் அவருடன் இருந்தேன். உச்சக்கட்ட காட்சியில் ரஜினியின் நடிப்பைப் பார்த்துக் கொண்டே பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம் சிவாஜி சொன்னார்:

"பாத்தியா! அன்றைக்கு நான் என்ன சொன்னேன்? கடைசியில் அந்த ரோல்தான் நிக்கும்னு சொன்னேன்ல. ரஜினியும் நல்லா நடிச்சிருக்கான் பாரு! படம் முடிஞ்சு ஜனங்க போகும்போது, ரஜினிதான் அவுங்க மனசுல நிப்பான். தெரிஞ்சதுதானே! பரவாயில்லை. படம் நல்லா வந்திருக்கு. எனக்கு அதுதான் வேணும்.''

இவ்வாறு சிவாஜி கூறினார்.

பிறர் நன்றாக நடித்தால், மனந்திறந்து பாராட்டும் பண்பாளர் சிவாஜி.

10-8-1979-ல் வெளியான "நான் வாழவைப்பேன்'' நூறு நாள் ஓடிய வெற்றிப்படம்.

இவ்வாறு ஆரூர்தாஸ் கூறினார்.

புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


ஓயாத உழைப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த், நன்றாக குணம் அடைந்து, புதுப்பொலிவுடன் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

எதையும் எரித்து பஸ்பமாக்கிவிடக்கூடிய சூரியனையே, கிரகணம் பிடித்து விடுகிறது! ஆயினும் சில மணி நேரம்தான். பிறகு கிரகணத்தின் பிடியிலிருந்து சூரியன் விடுபட்டு மீண்டும் பிரகாசிக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியையும் கிரகணம் கவ்வியது. ஆனால், சில நாட்களிலேயே கிரகணத்தின் பிடியில் இருந்து விடுபட்டு, மீண்டும் வெற்றி பவனி வரத்தொடங்கினார், ரஜினி.

படப்பிடிப்பு இடையில் நின்று போன படங்களை எல்லாம் முடித்துக்கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து ரஜினியின் படங்கள், வரிசையாக வெளிவரத்தொடங்கின.

நினைத்தாலே இனிக்கும்

கமலும், ரஜினியும் இணைந்து நடிக்க, கே.பாலசந்தரின் திரைக்கதை, வசனம், டைரக்ஷனில் உருவான "நினைத்தாலே இனிக்கும்'' படம், 1979 தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் (14-4-1979) வெளிவந்தது.

எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, மசாலாத்தனம் இல்லாமல், இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது. பிரேமாலயா வெங்கட்ராமன் தயாரித்த இந்தப்படத்தில், ஜெயப்பிரதா, ஜெயசுதா, கீதா, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரும் நடித்திருந்தனர். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்கள்: கண்ணதாசன், கண்மணிசுப்பு.

படத்தின் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது.

கதை இதுதான்:

இசைக்குழு ஒன்றை நடத்துபவர், கமல். அதில் கிடார் வாசிப்பவர் ரஜினி. இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

மர்ம மங்கை

இந்த இசைக்குழுவினர், 10 நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்த சிங்கப்பூருக்கு செல்கிறார்கள். போகும்போது ஒரு மர்ம மங்கையை (ஜெயப்பிரதா) சந்திக்கிறார், கமல்.

அந்த மர்ம மங்கை, இரண்டுவிதமான தோற்றங்களில் வந்து கமலை குழப்புவார். கேட்டால், "நான் அவள் இல்லை'' என்பார். சமயத்துக்கு தக்கபடி அவர் பொய் பேசுவதாக கமல் நினைப்பார். ஆனாலும் அவரை காதலிப்பார்.

இடையிடையே ஜெயப்பிரதாவை ஒரு "பயங்கர மனிதன்'' துரத்துவது போன்ற தோற்றம் வந்து போகும்.

பல திருப்பங்களுக்குப்பின், உண்மை வெளிப்படும்.


ஜெயப்பிரதாவுக்கு ரத்தப்புற்று நோய். சில நாட்களில் இறந்துவிடக்கூடிய நிலையில் இருப்பவர். கடைசி காலத்தை சந்தோஷ மாகக் கழிக்க விரும்புவதாகக் கூறி, கமலின் இசைக்குழுவில் சேருகிறார்.

பல ஊர்களுக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தும்போது, ஒருமுறை ரத்தவாந்தி எடுப்பார். அவரை பரிசோதிக்கும் டாக்டர்கள், "உங்கள் ஆயுள் இன்னும் மூன்று நாட்கள்'' என்று கூறுவார்கள்.

இதை அறியும் கமல், தன் தாயார் முன்னிலையில் ஜெயப்பிரதாவை மணந்து கொள்வார். இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள். பிறகு, ஜெயப்பிரதாவை துரத்திக்கொண்டிருந்த "பயங்கர மனிதனிடம்'' (மரணம்) அவர் சிக்கிவிடுவார்.

ரஜினி காமெடி

இந்தப் படத்தில் ரஜினியின் பங்களிப்பு கணிசமானது. ஓட்டல்களிலும், பக்கத்தில் இருப்பவர்களிடமும் சின்னச்சின்ன பொருள்களை (கண்ணாடி, ஸ்பூன், மதுபாட்டில் போன்றவற்றை) திருடுவது அவர் காரக்டர். நிறைய தமாஷ் செய்வார்.

ஒருநாள், அவருக்கு ஒரு ஆடியோ டேப் வரும். அதில், "அன்பரே! உங்களைக் கண்டதும் காதல் கொண்டேன். என்னை சந்திக்க வருகிறீர்களா?'' என்று ஒரு பெண் பேசுவாள். முகவரியை, தெளிவில்லாமல் பதிவு செய்திருப்பாள்.

ரஜினி, அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க டேப் ரிக்கார்டருடன் சிங்கப்பூர் முழுவதும் அலைவார். கடைசியில் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்பார். அவள் ஒரு "லூஸ்'' என்று அறிந்து அதிர்ச்சி அடைவார்.

சிகரெட்டை தூக்கிப்போட்டு உதட்டில் பிடிக்கும் ரஜினி ஸ்டைல் ரொம்பப் பிரபலமானது, இந்தப் படத்தில்தான். அவர் ஸ்டைலைப் பார்த்த பூர்ணம் விஸ்வநாதன், "தொடர்ந்து இப்படி 10 முறை சிகரெட்டைத் தூக்கிப்போட்டு பிடிக்க முடியுமா? அதில் நீ ஜெயித்தால், ஒரு காரை பரிசளிக்கிறேன்'' என்று சவால் விடுவார்.

ரஜினி அந்த சவாலை ஏற்றுக்கொள்வார்.

"பந்தயத்தில் வெற்றி பெற்றால் உனக்கு கார். தோற்றுவிட்டால், நீ உன்னுடைய சுண்டு விரலை வெட்டிக்கொடுத்து விடவேண்டும்!'' என்று பூர்ணம் விஸ்வநாதன் பயமுறுத்துவார்.

"வந்தால் ஒரு கார்! போனால் ஒரு விரல்தானே!'' என்று நண்பர்கள் உற்சாகப்படுத்தியதால், சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்க ஆரம்பிப்பார், ரஜினி. 9 முறை வெற்றிகரமாக இப்படி செய்து விடுவார். பிறகு, அவருடைய சுண்டு விரல் அவரை பயமுறுத்தும். "சார்! உங்களுக்கு கார் முக்கியம். எனக்கு விரல் முக்கியம். யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் போட்டியை இதோடு முடித்துக் கொள்வோமே!'' என்று கூறிவிடுவார்!


அதாவது, தமாஷ் வேடம் என்பதால் காட்சி இப்படி முடிந்தது! இன்று இந்த மாதிரி காட்சி அமைக்கப்பட்டால், ரஜினி 10 தடவை என்ன, 100 தடவை கூட சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடித்து விடமாட்டாரா!

"மன்மதன் வந்தானா, நம்ம சங்கதி சொன்னானா?'', "யாதும் ஊரே யாவரும் கேளிர்'', "சயோனரா'', "இனிமை நிறைந்த உலகம் இருக்கு'', "பாரதி கண்ணம்மா'' உள்பட எல்லாப் பாடல்களும் ஹிட்.

ரஜினிக்காக, எம்.எஸ்.வி. பாடிய "சம்போ... சிவசம்போ...!'' பாடல் வெகு பிரபலம்.

பாலசந்தரின் நுட்பமான டைரக்ஷன், கமல் - ரஜினி ஆகியோரின் நடிப்பு, இனிமையான பாடல்கள், கண்ணுக்கு குளிர்ச்சியான சிங்கப்பூர் காட்சிகள் ஆகியவற்றால், படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்


ரஜினிகாந்த் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டிருந்த காலக் கட்டத்தை, "இருண்ட காலம்'' என்று டைரக்டர் கே.பாலசந்தர் குறிப்பிட்டார்.

ரஜினிகாந்தின் திரையுலகப் பிரம்மாவான டைரக்டர் பாலசந்தர், ரஜினிக்கு அந்த கறுப்பு நாட்களில் ஏற்பட்ட குழப்பத்தைப் பற்றியும், நரம்புத் தளர்ச்சி பற்றியும் அவ்வப்பொழுது கூறியவை வருமாறு:-

மாற்றங்கள்

"தப்புத்தாளங்கள் படத்திற்கு அடுத்த படம் `நினைத்தாலே இனிக்கும்.' அதன் படப்பிடிப்பு முடியும் தறுவாயில், நான் ரஜினிகாந்திடம் பல மாற்றங்களைக் கண்டேன். அதை ஓர் "இருண்ட காலம்'' என்றே சொல்வேன்.

ரஜினிகாந்த் புது வீட்டிற்குக் குடியேறியிருந்தபோது, என்னை அழைத்திருந்தார். அவ்வளவு பெரிய வீட்டில் என் புகைப்படத்தை மட்டும் பெரியதாக மாட்டி வைத்திருந்தார்.

அந்தப் படத்தை திடீர் என்று ஒரு நாள் கழட்டி எறிந்திருக்கிறார். `அதை ஏன் கழட்டிவிட்டீர்கள்' என்று யாரோ கேட்டிருக்கிறார்கள். `இந்தப் புகழுக்கெல்லாம் பாலசந்தர்தானே காரணம்' என்று உதவியாளர்களிடம் சத்தம் போட்டிருக்கிறார். ரஜினியின் நண்பர் வீட்டில் என்னிடம் வந்து சொல்லி `ஏன் இப்படியெல்லாம் வினோதமாகச் செயல்படுகிறார் என்று புரியவில்லை. நீங்கள் வந்து அவரிடம் கொஞ்சம் பேசுங்கள்' என்றும் சொன்னார்.

குழந்தை போல அழுதார்

ரஜினியை சந்தித்து நான் கேட்டேன்.

ரஜினி சொன்னார்: "நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க? திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்'' என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் அழுதார். அவரது பேச்சு தொடர்பில்லாமல் இருந்தது. ரஜினியை அந்த சூழ்நிலையில் பார்த்த என் கண்கள் கலங்கின.

நினைத்தாலே இனிக்கும் படத்தின் டப்பிங் ஏ.பி.என் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் டப்பிங் பேச மறுப்பதாக என் உதவி டைரக்டர் கண்மணிசுப்பு, எனக்கு போன் செய்தார். நான் உடனே அங்கு சென்று ரஜினியை தனியே அழைத்து, "ஏன் டப்பிங் பேச மறுக்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"கால் முடமானவனை ஓடச்சொல்லி வேடிக்கை பார்ப்பது ஆறறிவு படைத்த மனிதன் செய்கிற வேலையா? உடல் நலம் குன்றி இருக்கும் ஒரு மனிதனிடம் வேலை வாங்குவது நியாயமா?'' என்று சொன்னார்.

இப்படியெல்லாம் ரஜினி என்னிடம் பேசமாட்டார். மனநிலை சரியில்லாமல்தான், இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரிந்து கொண்டேன்.

உடனே டப்பிங்கை கேன்சல் செய்துவிட்டு, டாக்டர் ஆர்.எஸ்.ராஜகோபால் அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.

இடைவிடாத உழைப்பால் அதிக அளவில் ரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறி, ஓய்வெடுத்துக் கொள்ளும்படி கூறினார் டாக்டர். வெலிங்டன் மருத்துவமனையில் சேர்த்து கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லி, தினம் காலையிலும் மாலையிலும் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டது.

இந்த நேரத்தில் பலர் பலவிதமாகப் பேசினார்கள். இத்தோடு அவர் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என்றும், அவரது பெயரைக்கூட சொல்லாமல் சிலர் `மெண்டல்' என்று குறிப்பிடுகின்ற துர்பாக்கியமான நிலைமை ஏற்பட்டிருந்தது. ரஜினியின் நலனில் அக்கறையுள்ளவர்கள் என்று பலர் கூறிக்கொள்ளலாம். அவர்களெல்லாம் என்ன சொன்னார்கள் என்பது என் காதுகளுக்கு மட்டும் கொண்டு வரப்பட்ட விஷயங்கள்.

ஐ.வி. சசி அவர்கள் கமலஹாசனையும், ரஜினியையும் வைத்து "அலாவுதீனும் அற்புத விளக்கும்'' என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். மிகப்பெரிய செட் போட்டு, நெப்டிïன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்தார். படப்பிடிப்பு அன்று ரஜினி ஸ்டூடியோவுக்கு சென்று மேக்கப்பும் போட்டுக்கொண்டார்.

ஷாட் ரெடியானதும் ரஜினியை உடை மாற்றிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். ரஜினி மறுத்துவிட்டார். எல்லோரும் போய் கேட்டிருக்கிறார்கள். யார் சொல்லியும் அவர் கேட்கவில்லை. கமலஹாசனும், நூற்றுக்கணக்கான ஜுனியர் ஆர்டிஸ்ட்களும் காத்திருக்கிறார்கள்.


டைரக்டர் ஐ.வி. சசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எனக்கு போன் செய்தார். "யார் சொல்லியும் ரஜினி கேட்க மறுக்கிறார். இன்றோடு செட் பிரிக்கப்பட வேண்டும். இங்கு ஸ்டூடியோவிற்கு வந்துவிட்டு போகமுடியுமா?'' என்று அழாக்குறையாகக் கேட்டார். நானும் உடனே போனேன். ரஜினியை மேக்கப் அறையில் சந்தித்தேன். `ஏன் ரஜினி! டிரஸ் போட்டுக்க வேண்டாமா? ஷாட் ரெடியா இருக்குல்ல!' என்று நான் சற்று அதட்டிச் சொல்வது போல் சொன்னதும், டிரஸ் போட ஆரம்பித்தார்.

ஐ.வி.சசியிடம் சென்று, "ரஜினி டிரஸ் போட்டுகிட்டிருக்காரு. இன்னும் 5 நிமிடத்துலே வந்துடுவாரு. அப்ப நான் கிளம்பவா?'' என்று கேட் டேன்.

ஐ.வி.சசி அவர்கள் கெஞ்சாத குறையாக, "அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ நீங்களும் இங்கேயே இருந்துட்டுப்போங்க. நான் அதுக்குள்ள கமலோட இருக்கிற காம்பினேஷன் ஷாட் எல்லாம் எடுத்து முடிச்சுக்கிறேன்'' என்று சொன்னார். அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. சரியென்று ஒப்புக்கொண்டேன்.

படப்பிடிப்பு நடக்க ஆரம்பித்தது. அது கத்திச்சண்டை காட்சி. நானும் பார்வையாளராக உட்கார்ந்து கொண்டே இருந்தேன். ஐ.வி.சசி அவர்களும் மள மளவென்று ஷாட்டுகளை எடுத்துக்கொண்டே இருந்தார். மதிய உணவுக்காக விடுகின்ற `பிரேக்' வரையில் இருந்துவிட்டு, நான் வந்துவிட்டேன்.

ஸ்ரீபிரியா வேண்டுகோள்

இந்தக் காலக்கட்டத்தில்தான் ஒரு முன்னணி நடிகை என் வீட்டிற்கு வந்தார். "சார்! உங்கள் ஒருவரால்தான் ரஜினிகாந்தைச் சரியான பாதைக்குத் திருப்ப முடியும். ஒரு நல்ல நடிகரை தமிழ்த் திரைக்கு அளித்தீர்கள். ரஜினிகாந்தின் இழப்பைத் தடுக்க நீங்கள்தான் முயற்சி எடுக்கவேண்டும்'' என்று மனம் விட்டுப் பேசினார்.

`கதை முடிந்தது' என்று பலர் முடிவுரை எழுதிக்கொண்டிருந்தபோது, அது தொடர்கதை ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல உள்ளமும் இருக்கிறதே என்று அறிந்ததும் என் கண்களில் நீர் திரையிட்டது. அவர்தான் நடிகை ஸ்ரீபிரியா. அவரது உயர்ந்த உள்ளத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.

மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, நாகேஷ் ஆகியோரோடு கலந்தாலோசித்து, விஜயா நர்சிங் ஹோமில் ரஜினியை சேர்த்தோம். டாக்டர் செரியனின் கண்காணிப்பில் 15 நாள் பரிபூரண ஓய்வெடுத்துக் கொண்டதால் நலம் பெற்றார், ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் போன்ற கலைஞர்களை இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் காணமுடியும். கைநழுவ இருந்த ஒரு கலைஞனை, திரைப்பட உலகம் திரும்பப் பெற்றதில் நான் பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.''

இவ்வாறு பாலசந்தர் அன்று கூறியிருக்கிறார்.

Monday, 16 June 2014

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை
தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு


ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தகவல், தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

1979 மார்ச் 11-ந்தேதியன்று விஜயா நர்சிங் ஹோமில் ரஜினி சேர்க்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், "நல்லவேளை, சரியான நேரத்தில் கொண்டு வந்தீர்கள். இன்னும் 10 நாட்கள் இப்படியே விட்டு வைத்திருந்தால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமë'' என்று கூறினார்கள்.

பரபரப்பு

ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி, தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. திரை உலகத்தில் அதுபற்றித்தான் பேச்சு.


"சீக்கிரம் சரியாகி விடுவார். முன்போலவே, சுறுசுறுப்பாக நடிப்பார்'' என்று பலர் நினைத்தாலும், ஒருசிலர் "அவர் கதை அவ்வளவுதான். இனி அவரால் நடிக்க முடியாது'' என்றார்கள்.

ஆனாலும், அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்று நல்ல உள்ளங்கள் பிரார்த்தனை செய்தன.

ஓய்வு எடுக்காமல், இரவு - பகலாக உழைத்ததுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்பதை டாக்டர்கள் மட்டுமல்ல, ரஜினியுடன் பழகியவர்களும் கூறினார்கள்.

சுஜாதா

ரஜினிகாந்த் நடித்த "ப்ரியா'' படத்தின் கதாசிரியரான பிரபல எழுத்தாளர் சுஜாதா கூறியதாவது:-

"ப்ரியா'' படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் எனக்குப் பழக்கமானார். அப்போது அவர் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். இருந்தும் என்னை விமானத்திலோ, படப்பிடிப்பிலோ சந்தித்தால் தனியாக மதிப்புக் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பார்.



ரஜினிகாந்துக்கு தற்காலிக "நெர்வ்ஸ் பிரேக் டவுன்'' (நரம்பு மண்டல பாதிப்பு) ஏற்பட்ட காரணங்களை, அப்போதே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

பெங்களூரில் இரவு எட்டரை மணிக்குப் பாலசந்தர் படத்தின் படப்பிடிப்பில் (தப்புத்தாளங்கள் என்று நினைக்கிறேன்) சைக்கிள் செயின் சுழற்றிக் கொண்டிருக்கிறார்.

எட்டு நாற்பத்தைந்துக்கு, ஏணியை விலக்குவதற்கு இரண்டு நிமிஷம் முன்னால் பெங்களூரில் விமானம் ஏறி, சென்னை போய், அங்கேயிருந்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன் பிடித்து சிங்கப்பூர் போய், அதிகாலையில் அங்கே `ப்ரியா' சூட்டிங். மூன்று நாள் கழித்துத் திரும்பிப் பெங்களூர் வந்து சைக்கிள் செயின் சுழற்றி விட்டு மறுபடி சிங்கப்பூர்! இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட "நெர்வ்ஸ் ப்ரேக் டவுன்'' வந்து விடும்.''

இவ்வாறு சுஜாதா கூறினார்.

பஞ்சு அருணாசலம்

ரஜினியின் திரையுலக முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் பஞ்சு அருணாசலம் அப்போது ஒரு பேட்டியில் கூறியதாவது:-

"உடல் நலம் சரி இல்லாதபோதும், படப்பிடிப்பை ரத்து செய்யாமல் நடித்தவர் ரஜினி. இதற்காக அவரை நான் கடிந்து கொண்டது உண்டு.



அப்போதெல்லாம், "சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டாமா சார்! தூக்கம் என்ன வேண்டிக் கிடக்கிறது!'' என்பார்.

தயாரிப்பாளர், டைரக்டர்களின் மனதை வருத்தக்கூடாதே என்று தன் உடலை வருத்திக்கொண்டார்.

ஓய்வே இல்லாமல் நடித்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது. அவரைப்போல் பரபரப்பான - சுறுசுறுப்பான நடிகரைப் பார்ப்பது அபூர்வம்.''

இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்




1979-ம் ஆண்டு, ரஜினிக்கு சோதனையான ஆண்டு. இரவு - பகல் பாராமல் தொடர்ந்து படங்களில் நடித்ததால், அவர் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டன.

உடல் சோர்வை போக்கிக்கொள்ள மது அருந்தினார்; ஜரிதா பீடா, ஜாதிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டார்.

நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால் எதைக் கண்டாலும் எரிச்சல். யாரைக்கண்டாலும் கோபம்.

மயக்கம்

1979 மார்ச் முதல் தேதி. பஞ்சு அருணாசலத்தின் "ஆறிலிருந்து அறுபதுவரை'' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தபோது, மயக்கம் போட்டு விழுந்தார்.

உடனடியாக டாக்டர் வந்து பரிசோதித்தார். "ஓய்வு - ஒழிச்சல் இன்றி, தூக்கம் இன்றி நடித்ததால் ஏற்பட்ட மயக்கம் இது. நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று டாக்டர் கூறினார்.

டாக்டர் சொன்னதற்காக ஒரே ஒரு நாள் மட்டும் ஓய்வு எடுத்துக்கொண்டார். மறுநாள் "அன்னை ஓர் ஆலயம்'' படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

பத்திரிகையாளர் புகார்

ரஜினிகாந்தைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் தொடர்ந்து தாக்கி எழுதி வந்தார்.

ஒரு நாள் ரஜினி காரில் சென்றபோது, அந்த பத்திரிகையாளர் முன்னால் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்தார். `ஏன் என்னை சதா தாக்கி எழுதுகிறீர்கள்?' என்று கேட்பதற்காக, காரை அவர் அருகே ஓட்டிச்சென்றார்.

தன் மீது காரை மோதுவதற்கு ரஜினி வருவதாக, பத்திரிகையாளர் நினைத்து, போலீசில் புகார் செய்தார். ரஜினி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக, மார்ச் 8-ந்தேதி பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது.



சிவாஜியின் 200-வது பட விழா

சிவாஜிகணேசனின் 200-வது பட விழா, மார்ச் 10-ந்தேதி மதுரையில் நடந்தது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். சிவாஜியின் காலைத்தொட்டு வணங்கி, வாழ்த்து பெற்றார்.

இதன்பின் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி, 13-3-1979 அன்று பத்திரிகைகளில் கீழ்க்கண்டவாறு செய்திகள் வெளியாயின:-

விமான நிலையத்தில் பரபரப்பு

"மதுரையில் சிவாஜிகணேசனின் 200-வது பட விழாவில் கலந்து கொண்ட நடிகர்-நடிகைகள் சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் சென்றனர். அவர்களுடன் சென்ற ரஜினிகாந்த், விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்றார். "சோடா வேண்டும்'' என்று கேட்டார்.

`சோடா தீர்ந்துவிட்டது' என்று கடை ஊழியர் கூறினார். உடனே ரஜினிகாந்த், அவர் கன்னத்தில் அறைந்தார்.

பிறகு, தன் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை கழற்றி, அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினார். இதைப் பார்த்தவர்கள் பயந்து போய் ஓட்டம் பிடித்தனர்.

இந்த சம்பவத்தின் விளைவாக, ரஜினியை விமானத்தில் ஏற்ற அதிகாரிகள் மறுத்தனர். மற்ற நடிகர்கள் வந்து, "நாங்கள் அவரை பத்திரமாக அழைத்துப் போகிறோம்'' என்று உறுதிமொழி கொடுத்ததால், அனுமதித்தனர்.

விமானத்தில், நடிகர் எம்.என்.நம்பியார், ரஜினிகாந்தின் அருகில் உட்கார்ந்து, அவரை பத்திரமாக அழைத்து வந்தார்.

சென்னை வந்து சேர்ந்த பிறகும், ரஜினிகாந்த் இயல்பான நிலைக்கு வரவில்லை. இதனால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள விஜயா நர்சிங் ஹோமில் சேர்க்கப்பட்டார்.

அவருடன் மேஜர் சுந்தரராஜன், நம்பியார், பாலாஜி, நாகேஷ் ஆகியோரும் சென்றனர்.



சிகிச்சை

ரஜினிகாந்துக்கு, டாக்டர் செரியன் சிகிச்சை அளித்தார்.

பிறகு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன்பின் ரஜினி அயர்ந்து தூங்கினார்.

நிருபர்களிடம் மேஜர் சுந்தரராஜன் கூறியதாவது:-

"கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்த் சரியான தூக்கமின்றி, இரவு பகலாக நடித்து வருகிறார்.

கடந்த ஒரு வருட காலமாகவே அவருக்கு ஓய்வு இல்லை என்றும், தூக்கம் இல்லாததால் அவர் உடல் நிலையும், மன நிலையும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.

அவர் 72 மணி நேரம் (3 நாள்) தொடர்ந்து தூங்க வேண்டும் என்றும், அதன் பிறகுதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.''

இவ்வாறு மேஜர் சுந்தரராஜன் கூறியதாக, பத்திரிகைகளில் வெளியான செய்திகள் கூறின.

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''



புகழேணியில் வேகமாக ஏறிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், சிவாஜிகணேசனுடன் முதன் முதலாக "ஜஸ்டிஸ் கோபிநாத்'' என்ற படத்தில் இணைந்து நடித்தார்.

வள்ளிமணாளன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை யோகானந்த் இயக்கினார்.

இப்படத்தில் கே.ஆர்.விஜயா, சுமித்ரா, ஏ.சகுந்தலா, அபர்ணா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர்.

வசனத்தை வியட்நாம் வீடு சுந்தரம் எழுத, பாடல்களை வாலி எழுதினார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

16-12-1978-ல் இந்தப்படம் வெளிவந்தது. சிவாஜி, ரஜினி ஆகியோரின் திறமையை சரிவர பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால், படம் சுமாராகவே ஓடியது.

வெள்ளி விழா படம் - "ப்ரியா''

ரஜினி நடித்து அடுத்து வெளிவந்த "ப்ரியா'', 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. எஸ்.பி.தமிழரசியின் எஸ்.பி.டி. பிலிம்ஸ், தமிழிலும், கன்னடத்திலும் ஒரே சமயத்தில் இக்கதையை படமாக்கியது.

தமிழ்ப் படத்துக்கு திரைக்கதை, வசனம், பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுதினார். எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார். இசை இளையராஜா.

இந்தப் படத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி என்றாலும், அவர் ரஜினிக்கு ஜோடி அல்ல!

படத்தில், அவர் ஒரு நடிகை. அவர் அம்ரிஷை காதலிக்கிறார். அதற்கு வில்லன் மேஜர் சுந்தரராஜன் முட்டுக்கட்டை போடுவதுடன், பல விதத்திலும் தொந்தரவு கொடுப்பார்.

ஸ்ரீதேவிக்கு உதவும் துப்பறியும் அதிகாரியாக ரஜினி நடித்தார். அவருடைய காதலியாக அஸ்னா என்ற சிங்கப்பூர் நடிகை நடித்தார்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் முதலிய நாடுகளில் நடந்தது. பாபுவின் படப்பிடிப்பு, பிரமாதமாக அமைந்தது. எல்லாப் பாடல்களும் ஹிட்டாக அமைந்தன.

16-12-1978-ல் வெளிவந்த இந்தப்படம் 25 வாரம் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. கன்னடப்படமும் வெற்றிகரமாக அமைந்தது.

"ப்ரியா'' தமிழ்ப்பதிப்பு, "அஜெயுடு'' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. அந்தப் படமும் வெற்றி பெற்றது.

இந்த ஆண்டில் வெளிவந்த ரஜினியின் மற்றொரு படம் "என் கேள்விக்கு என்ன பதில்.'' அபிராமி பட நிறுவனத்தின் சார்பில், டி.கே.கோபிநாத் தயாரித்த படம். கவிஞர் கண்ணதாசன், முத்துலிங்கம் ஆகியோர் பாடல்களை எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். வசனம்: பாலமுருகன்.



ஸ்ரீபிரியா, விஜயசந்திரிகா, விஜயகுமார், எம்.என்.நம்பியார், மனோரமா, சுருளிராஜன் ஆகியோர் இதில் நடித்தனர்.

படம் சுமாராகவே அமைந்தது.

கால்ஷீட் பிரச்சினை

பட அதிபர்கள் ஏக காலத்தில் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டு மொய்த்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாமல் ரஜினி தவித்தார். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு அவர் ஏற்கனவே தேதி கொடுத்து விட்டார். புதுப்படங்களில் நடிக்க வந்த பல அழைப்புகளை ஏற்கமுடியவில்லை.

தன்னைத் தேடி வரும் பட அதிபர்களின் எண்ணிக்கையை குறைக்க, தன் ஊதியத்தை உயர்த்தினார். அதையும் சிலர் குறை கூறினர். `நேற்று வந்தவர் இவ்வளவு பணம் கேட்கிறாரே!' என்று சொன்னார்கள்.

இதுபற்றி அப்போது ஒரு பேட்டியில் ரஜினி கூறியதாவது:-

"அதிகப் படங்களில் நடிப்பதை தவிர்க்க எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. நான் வாங்குகிற ரேட்டை உயர்த்துவதுதான் அந்த ஐடியா. அதனால், வேறு வழியின்றி ரேட்டை உயர்த்தினேன். அதையும் சிலர் குறை கூறினார்கள். அவர்களுக்குத் தெரியுமா, என் அவஸ்தை!

இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், `ஏன் நடிக்க வந்தோம்' என்று தோன்றுகிறது! அந்த அளவுக்கு `கால்ஷீட்' பிராபளம்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. தென்னாட்டில் பிரபலமான நட்சத்திரமாக நான் மதிக்கப்படுகிறேன். எந்த நடிகருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் பயமாக இருக்கிறது. `கிடைத்த பேரை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே' என்ற பயம்தான் அது.

இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

பாலசந்தர் தமாஷ்

இந்த சந்தர்ப்பத்தில் டைரக்டர் பாலசந்தரை சந்தித்த ரஜினிகாந்த், தனக்குள்ள "கால்ஷீட்'' பிரச்சினை பற்றி தெரிவித்தார்.



பாலசந்தர் சிரித்துக்கொண்டே, "உன்னை அறிமுகப்படுத்திய நானே, உன்னுடைய கால்ஷீட்டுக்கு ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும் போல் இருக்கிறதே!'' என்றார்.

அந்த அளவுக்கு `பிசி'யாக இருந்தார், ரஜினிகாந்த்.

மார்லன் பிராண்டோ

ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவின் படங்கள் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும். இந்தக் காலக்கட்டத்தில் அவருடைய புகழ் பெற்ற படமான "காட்பாதர்'' மும்பையில் திரையிடப்பட்டது. இடைவிடாமல் படப்பிடிப்பு இருந்தாலும், விமானத்தில் மும்பைக்குப் பறந்து சென்று, அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் போய் வந்தார்.