"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்''
டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்
"மூன்று முகம்'' படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சுவையான சம்பவங்களை, டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் வெளியிட்டார்.
"சண்டைக் காட்சிகளில் எல்லோரையும் ரஜினி அசர வைத்தார்'' என்று அவர் கூறினார்.
டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் பத்திரிகையாளராக இருந்து, டைரக்டராக உயர்ந்தவர். எம்.ஜி.ஆர். நடித்த "இதயக்கனி'' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர்.
"மூன்று முகம்'' படத்தை இயக்கியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
"பீட்டர் செல்வகுமார் எழுதிய மூன்று முகம் கதையை படமாக்குவது என்று சத்யா மூவிஸ் முடிவு செய்ததும், பட வேலைகள் தொடங்கின.
ரஜினி கேட்ட கேள்வி
படத்தின் டைரக்டர் யார் என்று ஆர்.எம்.வீ.யிடம் ரஜினி கேட்டிருக்கிறார். அவர் எனது பெயரை சொல்லியிருக்கிறார். "அவர் இயக்கிய படம் எதையும் இதுவரை நான் பார்த்ததில்லையே!'' என்று சொல்லியிருக்கிறார், ரஜினி.

உடனே ஆர்.எம்.வீரப்பன், "எங்கள் சத்யா மூவீசுக்கு எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர் ஜெகந்நாதன்'' என்று கூறியிருக்கிறார்.
"நான் இதயக்கனி படத்தை பார்க்க வேண்டுமே'' என்று ரஜினி சொல்ல மறுநாளே "இதயக்கனி'' படத்தை ரஜினிக்கு காட்ட ஏற்பாடு செய்தார், ஆர்.எம்.வீ.
ரஜினி, நான், சத்யா மூவிசின் மானேஜர் பழனியப்பன் மூவரும் படம் பார்த்தோம். படம் முடிந்ததும், "இந்தப்படத்தை எந்த வருஷம் இயக்கினீர்கள்?'' என்று ரஜினி கேட்டார். "1974-ம் வருஷம் எடுக்கப்பட்டு 1975-ல் ரிலீசானது'' என்றேன்.
உடனே ரஜினி, 1974-ல் நான் சினிமாவுக்கு வரவில்லை. அப்போதே எம்.ஜி.ஆர். சாரை வைத்து படம் இயக்கியிருக்கிறீர்கள். நான் நடிக்கும் இந்தப் படத்தை நீங்கள் இயக்குவதில் எனக்கு மகிழ்ச்சிதான்'' என்றார்.
பிரமிக்க வைத்த ஸ்டைல்கள்
படத்தில் நடிக்கும்போது, ரஜினியிடம் நான் கண்ட வேகம் பிரமிப்பானது. காக்கி சீருடையில் அலெக்ஸ் பாண்டியனாக அவர் காட்டிய கம்பீரம், செட்டில் நடக்கும்போது வெளிப்பட்ட அந்த மிடுக்கு, போலீஸ் நிலையத்தில் ஒரு குற்றவாளியிடம் பேசிக்கொண்டே இன்னொரு ரவுடியை உதைக்கும் ஸ்டைல் என படம் முழுக்க அதிரடி ஸ்டைல்களை வெளிப்படுத்தினார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சென்னை துறைமுகத்துக்கு வந்திருந்த சரக்கு கப்பலில் 3 நாள் அனுமதி பெற்று எடுத்தோம். இந்த கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த பட அதிபர் ஏவி.எம்.சரவணன் பாராட்டியபோது, "மூன்றே நாளில் எடுத்து முடித்தோம்'' என்று சொன்னோம். அவருக்கு ஒரே ஆச்சரியம். "எப்படியும் ஒரு வாரமாவது ஆகியிருக்கும் என்று நினைத்தேன் என்று கூறினார்.
புதுமையான சண்டைக்காட்சி
இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் ஒரு புதுமை செய்தேன். ரஜினி பறந்து வந்து ரவுடிகளை அடித்து உதைப்பதாக வரும் காட்சியில், ஒரு தடவை `ஜம்ப்' செய்யும்போதே, 4 பேரை உதைப்பது போல் காட்சி அமைத்தேன்.
இந்த சண்டைக்காட்சியை பார்த்ததும் ரஜினி ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தார். "நீங்கள் சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்'' என்று பாராட்டினார்.

படம் ரிலீசாகி 150 நாட்களுக்கு மேல் ஓடியது. படத்துக்கான பாராட்டு விழா மதுரையில் நடந்தபோது போலீஸ் டி.ஐ.ஜி. ஒருவர் தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, "போலீஸ் துறையில் பயிற்சி எடுப்பவர்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுத்து உருவாக்குகிறோம். இதுவரை அப்படிச் செய்தோம். இனி பயிற்சி அவசியமில்லை. `மூன்று முகம்' படத்தை அவர்களுக்கு போட்டுக் காட்டினாலே போதும். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது'' என்று பாராட்டினார்.
ஒரு பிடி சோறு
சண்டைக் காட்சிகளில் நடிக்க நேரும்போது ரஜினி சரிவர சாப்பிட மாட்டார். இப்படித்தான் ஒரு நாள் மதிய சாப்பாட்டு நேரம் வந்தது. ரஜினி வீட்டில் இருந்து மணக்க மணக்க மீன் குழம்பு சாப்பாடு வந்திருந்தது. மதியம் `பிரேக்' டைமில் ரஜினி என்னிடம், "சார்! இன்றைக்கு என்னோடு சாப்பிட வாங்க'' என்று கேட்டுக்கொண்டார்.
சாப்பாட்டு நேரத்தில் ரஜினி `லஞ்ச் பாக்சை' திறந்தார். மீன் குழம்பு வாசனை தூக்கியடித்தது. அந்த வாசனையை முகர்ந்தவர், மொத்த சாப்பாட்டையும் என் பக்கம் திருப்பி வைத்து, "இது உங்களுக்குத்தான்'' என்றார். ஒரு கரண்டி அளவுக்கு சாதம் எடுத்து அதில் கொஞ்சமாய் ரசம் மட்டும் ஊற்றி சாப்பிட்டார்.
ஒரு கை சாதம் மட்டும் அவர் சாப்பிட்டதில் எனக்கு அதிர்ச்சி. "ஏன் இப்படி?'' என்று கேட்டேன். அதற்கு அவர், "சண்டைக் காட்சியில் நடிக்கும்போது நிறைய சாப்பிட்டால் ரசிகர்கள் விரும்புகிற மாதிரி காட்சி அமையாது'' என்றார்.
ரஜினி மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நடந்தபோது மணமக்களை நானும் வாழ்த்தினேன். என்னைப் பார்த்ததும் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவிடம், "இவர் மூன்று முகம் படத்தின் டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் '' என்று அறிமுகப்படுத்தினார். மூன்று முகத்துடன் என் முகமும் அவருக்குள் பதிந்து போனதை, அந்த நேரம் எனக்குள் பெருமிதமாக உணர்ந்தேன்.''
இவ்வாறு டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் கூறினார்.
("கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி - நாளை)
ரஜினி நடித்த திரைப்படங்கள்
81 அந்தா கானூன் (இந்தி) 07-04-1983 டி.ராமராவ்
82 தாய்வீடு 14-04-1983 ஆர்.தியாகராஜன்
83 சிவப்பு சூரியன் 27-05-1983 முக்தா சீனிவாசன்
84 ஜீத்ஹமாரி (இந்தி) 17-06-1983 ஆர்.தியாகராஜன்
85 அடுத்த வாரிசு 07-07-1983 எஸ்.பி.முத்துராமன்
86 தங்கமகன் 04-11-1983 எஸ்.ஏ.ஜெகநாதன்
87 மேரி அதாலத் (இந்தி) 13-01-1984 ஏ.டி.ரகு
88 நான் மகான் அல்ல 14-01-1984 எஸ்.பி.முத்துராமன்
89 தம்பிக்கு எந்த ஊரு 20-04-1984 ராஜசேகர்
90 கை கொடுக்கும் கை 15-06-1984 மகேந்திரன்
91 இதோ நா சவால் (தெலுங்கு) 16-06-1984 புரட்சிதாசன்
92 அன்புள்ள ரஜினிகாந்த் 02-08-1984 கே.நட்ராஜ்
93 கங்குவா (இந்தி) 14-09-1984 ராஜசேகர்
94 நல்லவனுக்கு நல்லவன் 22-10-1984 எஸ்.பி.முத்துராமன்
95 ஜான் ஜானி ஜனார்த்தன் (இந்தி) 26-10-1984 டி.ராமராவ்
96 நான் சிவப்பு மனிதன் 12-04-1985 எஸ்.ஏ.சந்திரசேகர்
97 மகா குரு (இந்தி) 26-04-1985 எஸ்.எஸ்.ரவிச்சந்திரன்
98 உன் கண்ணில் நீர் வழிந்தால் 20-06-1985 பாலுமகேந்திரா
99 வா பாதர் (இந்தி) 19-07-1985 தாசரி நாராயணராவ்
100 ஸ்ரீராகவேந்திரா 01-09-1985 எஸ்.பி.முத்துராமன்
மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்த "மூன்று முகம்'', அவருடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தியது.
குறிப்பாக, அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்காகவும், கம்பீரமாகவுமë பேசி எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.
ஆர்.எம்.வீரப்பனின் "சத்யா மூவிஸ்'' தயாரித்த சூப்பர் ஹிட் படம் இது. கதையை பீட்டர் செல்வகுமார் எழுத, ஆர்.எம்.வி. திரைக்கதை அமைத்தார். பிறகு செல்வகுமார் வசனம் தீட்டினார். ஏ.ஜெகந்நாதன் டைரக்ட் செய்தார்.
கதை
திருப்பங்களும், நெஞ்சைத் தொடும் சம்பவங்களும் நிறைந்த படம் "மூன்று முகம்.''
நேர்மையும், கண்டிப்பும் நிறைந்த போலீஸ் "டி.எஸ்.பி'' அலெக்ஸ் பாண்டியன், தனது எல்லைக்குள் நடமாடும் கள்ளச்சாராய கோஷ்டிகளை களையெடுக்கிறார். இதனால் லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கும் கள்ளச்சாராய கும்பலின் தலைவன் (செந்தாமரை) டி.எஸ்.பி.யை கொல்ல முடிவெடுக்கிறான். அதற்கான தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான்.
மர்மக்குரல்
அலெக்ஸ் பாண்டியனìன் மனைவி ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலி எடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாÖë. மனைவியை பார்க்க ஆஸ்பத்திரி வரும் வழியில் அலெக்ஸ் பாண்டியனுக்கு போன் வருகிறது. போனில் பேசிய பெண், ஒரு பாழடைந்த பங்களாவில் தன்னை அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள்'' என்று பதட்டமாய் கூறியவள், தான் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் பங்களா இருக்கும் இடத்தையும் கூறி தன்னைக் காப்பாற்ற வரும்படி கதறுகிறாள்.
இந்தப் போனுக்குப் பின்னணியில் தன்னை கொல்ல வகுக்கப்பட்டிருக்கும் சதித்திட்டம் பற்றி அறியாத அலெக்ஸ் பாண்டியன், தனியாளாய் அந்த பங்களாவுக்குள் போகிறார். அவருக்காக காத்திருந்த சாராயக்கும்பலின் தலைவனும், அவனது அடியாட்களும் அலெக்ஸ் பாண்டியனை தாக்கி கொன்று விடுகிறார்கள்.
இரட்டைக் குழந்தைகள்
அலெக்ஸ் பாண்டியன் இறந்த அதே நேரத்தில் அவரது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டுமே ஆண் குழந்தைகள்.
குழந்தை பிறந்த அதே நேரம் `ஜன்னி' வந்து தாயும் உயிர் விடுகிறாள்.
பிரசவத்துக்கு துணையாக வந்த அலெக்ஸ் பாண்டியனின் தாயார் சகாயமேரி, மகன் - மருமகள் இருவரும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைகிறார். குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறாள்.
அதே ஆஸ்பத்திரியில் பணக்காரர் ஒருவரின் மனைவியும் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை குழந்தை இறந்தே பிறந்ததால், இம்முறையாவது குழந்தை உயிருடன் பிறக்கவேண்டுமே என்ற கவலை. ஆனால் இம்முறையும் குழந்தை இறந்தே பிறக்க, அது தெரியாமல் அவள் மயக்க நிலையில் இருக்கிறாள்.
சகாயமேரியிடம் இருக்கும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை பணக்காரர் கேட்கிறார். தனது குழந்தை உயிருடன் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே மனைவியை உயிரோடு பார்க்க முடியும் என்று கண்களில் நீர் மல்க அவர் சொன்னதால், இரண்டு ஆண் குழந்தைகளில் ஒன்றை பணக்காரரிடம் சகாயமேரி கொடுக்கிறாள்.
சகாயமேரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, அவளிடம் இருக்கும் மற்றொரு குழந்தையை வளர்க்க மாதந்தோறும் பணம் அனுப்பி வைக்கிறார்.
சகாயமேரியின் பொறுப்பில் வளரும் குழந்தை `ஜான்' என்ற பெயரிலும், பணக்காரரிடம் வளரும் குழந்தை `அருண்' என்ற பெயரிலும் வளர்கிறார்கள். ஜான் அதிரடி, அடிதடி, ஜாலி என்று உருவாக, அருண் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறான்.

பிறந்த நாள்
படிப்பை முடித்து ஊருக்கு வரும் அருண் தனது 25-வது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடுகிறான். இந்த விழாவுக்கு கள்ளச்சாராய தலைவனின் அடியாளாக இருந்து இப்போது தொழிலதிபர் அந்தஸ்தில் இருக்கும் சங்கிலிமுருகனும் அழைக்கப்பட்டு இருக்கிறார்.
பிறந்த நாள் `கேக்'கை வெட்ட அருண் கத்தியை கையில் எடுக்கும்போது, கேக்கில் ஒரு காட்சி அருண் கண்ணுக்கு தெரிகிறது. அலெக்ஸ் பாண்டியனை கள்ளச்சாராய கும்பலின் தலைவன் செந்தாமரை கத்தியால் குத்துவதாக விரியும் அந்தக் காட்சியை பார்த்த அருண், ஆவேசமாகிறான். தொழிலதிபர் சங்கிலிமுருகனின் சட்டையைப் பிடித்து இழுத்து உலுக்கியவன், "எங்கேடா உங்க பாஸ்?'' என்று கேட்கிறான்.
இந்த தகவல் செந்தாமரைக்குப்போக, அவர் துப்பறிந்து அலெக்ஸ் பாண்டியன் சாய லில் இருக்கும் அருண், பணக் காரரின் மகனல்ல, அலெக்ஸ் பாண்டியனின் மகனே என்பதை அறிந்து கொள்கிறார். இதனால் அவனையும் கொன்றுவிட திட்டம் தீட்டுகிறார். இதற்குள் அருணுக்கும் தனக்குள் தோன்றிய அந்த திடீர் உணர்வுக்கு விடை கிடைக்கிறது. தங்கள் அலுவலக பொறுப்பை மேற்கொள்ளும் அருண், சகாயமேரி என்ற பெண்ணுக்கு தனது அப்பா மாதாமாதம் பணம் அனுப்பி வரும் தகவலை தெரிந்து கொள்கிறான். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு சகாயமேரியின் இருப்பிடம் வருகிறான். அங்கே வந்த பிறகுதான், அலெக்ஸ் பாண்டியனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் தானும் ஒருவன் என்ற உண்மை தெரியவருகிறது.
பழிக்குப்பழி
இரட்டை சகோதரர்கள் தங்கள் தந்தையை கொன்ற செந்தாமரை கும்பலை பழிவாங்க புறப்படுகிறார்கள். இதில் ஜான் முந்திக்கொண்டு, கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த செந்தாமரையின் ஆட்களை வெறியுடன் கொல்கிறான். விபரீதம் உணர்ந்த செந்தாமரை, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஜானை கத்தியால் குத்தி சாய்க்கிறார். அந்தக் கத்தியை பிடுங்கி செந்தாமரையின் வயிற்றில் கத்தியை பாய்ச்சுகிறான் ஜான்.
செந்தாமரை உயிரை விட்டுவிட, குற்றுயிராய் கிடக்கும் ஜானை தனது மடி மíது தூக்கி வைத்து கதறுகிறான் அருண். தனது தந்தையை கொன்ற கும்பலை பழிதீர்த்த நிம்மதியில், தம்பி அருணின் மடியில் உயிரை விடுகிறான், ஜான்.
மூன்று வேடங்களில் நடித்த ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். அலெக்ஸ் பாண்டியனுக்கு ராஜலட்சுமி, அருணுக்கு ராதிகா. ஜானுக்கு ஜோடி இல்லை.
வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த இந்தப்படம் மகத்தான வெற்றி பெற்றது. மூன்று வேடங்களையும், வெகு எளிதாக ஊதித்தள்ளி, ரசிகர்களைக் கவர்ந்தார், ரஜினி.
இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர்கள் சங்கர்-கணேஷ்.
ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்'
படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்! 
ஸ்டைல் மன்னனாகவும், சூப்பர் ஸ்டாராகவும் மதிக்கப்பட்ட ரஜினிகாந்தை, ஒரு மகா நடிகராக உயர்த்திய படம் "எங்கேயோ கேட்ட குரல்.''
"பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்'' பேனரில் பஞ்சு அருணாசலம் தயாரித்த படம் இது. கதை-வசனத்தை அவரே எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.
மாறுபட்ட படம்
ரஜினிகாந்த் நடித்த படங்களில் முற்றிலும் மாறுபட்டது "எங்கேயோ கேட்ட குரல்.'' படம் முழுக்க நான்கு முழ வேட்டியுடனும், சாதாரண சட்டையுடனும் தோன்றினார். ஆரம்பத்தில் இளைஞன். படம் முடியும்போது முதியவர்.
இதற்குமுன், "ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும், அது குடும்பக் கதை. இது, மாறுபட்ட கதை; யதார்த்தமான கதை; கம்பி மீது நடப்பது போன்ற கனமான கதை. படம் முழுவதும் கிராமத்திலேயே தயாரிக்கப்பட்டது.
பஞ்சாயத்து தலைவர் டெல்லி கணேஷ் - கமலா காமேஷ் ஆகியோருக்கு அம்பிகா, ராதா இருவரும் மகள்கள். பொன்னி (அம்பிகா) படித்தவள். நாகரீகத்தை விரும்புகிறவள். வீட்டு வேலை எதுவும் தெரியாது. அந்த ஊர் பெரியவருக்கு (வி.எஸ்.ராகவன்) செல்லப்பிள்ளை. காமாட்சி (ராதா) குடும்பப் பொறுப்புகளை உணர்ந்தவள்.
இவர்களுக்கு முறை மாப்பிள்ளை ரஜினிகாந்த்.
விருப்பம் இல்லாமலேயே ரஜினியை மணக்கிறார், அம்பிகா. ரஜினி அன்புடன் நெருங்கி வரும்போது, "போய் குளித்து விட்டு வாருங்கள். ஒரே வியர்வை நாற்றம்'' என்பார்.
இந்நிலையில் அம்பிகா கர்ப்பமாவார். அதைக் கலைக்க முயற்சிப்பார். தாயாரும், ரஜினியும் தடுத்து விடுவார்கள்.
குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க மாட்டார்.
சலனம்
இந்நிலையில், அம்பிகா மீது அன்பு செலுத்திய பெரியவரின் மகனும், அவர் மனைவியும் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து விடுகிறார்கள்.
"உன் வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. என் வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. நீ என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டால், இரு வரும் சேர்ந்து வாழலாம்'' என்று அம்பிகாவிடம் பெரியவரின் மகன் கூறுகிறார். ஒரு நிமிடத்தில் ஏற்படும் சலனத்தால், அவருடன் சென்னைக்கு செல்கிறார், அம்பிகா.
அங்கு சென்றதுமே அவர் மனம் மாறுகிறது. தன் தவறை உணருகிறார். மயக்கம் அடைந்து விழுகிறார். பிறகு, தீக்குளிக்க முயலுகிறார். சிறு காயத்துடன் தப்புகிறார்.
இதற்கிடையே `ஓடிப்போன' அம்பிகாவை, கிராமத்தை விட்டு பஞ்சாயத்து தள்ளி வைக்கிறது. ரஜினியின் துயரத்தைப் போக்க, ராதாவை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அம்பிகாவின் குழந்தையை (மீனா) தன் குழந்தை போல ராதா வளர்க்கிறார்.
இந்த தகவல், அம்பிகாவை அழைத்துச்சென்ற பெரியவர் மகனுக்குத் தெரிகிறது. அதை அம்பிகாவிடம் கூறுகிறார். `கிராமத்துக்கு வெளியே எனக்கு நìலம் இருக்கிறது. அதை உனக்கு எழுதித் தருகிறேன். அங்கே வீடு கட்டிக்கொண்டு நீ வசிக்கலாம்'' என்று கூறி அனுப்பி வைக்கிறார்.
துறவு வாழ்க்கை
மனதில் சலனம் அடைந்தாலும், உடலில் களங்கப்படாத அம்பிகா, தன் கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசை போட்டுக்கொண்டு தன்னந்தனியே துறவி போல் வாழ்கிறார்.
இப்படியே 13 வருடம் ஓடுகிறது. தன் மகள் பருவப்பெண்ணாய் நடமாடுவதை தூரத்திலிருந்தே பார்த்து கண்ணீர் விடுகிறார், அம்பிகா.
நாளடைவில், உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார். தாய்ப்பாசத்தால், அவரை பார்க்க வருகிறார், கமலா காமேஷ். "அம்மா! நான் ஒரு நிமிட சலனத்தால் வீட்டை விட்டு வெளியேறினாலும், உடலில் களங்கப்படாதவள்'' என்று கூறி, நடந்ததையெல்லாம் கூறுகிறார்.
"நீ என் மகள்! நீ களங்கப்பட்டிருக்க மாட்டாய் என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது'' என்பார், கமலா காமேஷ்.
"அம்மா! சாவதற்கு முன் அவரை (ரஜினி) ஒரு முறை நான் பார்க்க வேண்டும். மன்னிப்பு கேட்கவேண்டும்!'' என்று தாயிடம் கூறுகிறார், அம்பிகா.
கடைசி ஆசை
அம்பிகா களங்கமற்றவர் என்பதை அறியும் ரஜினி, அவரை பார்க்கச் செல்வார். கணவரை பார்த்துக் கதறுவார், அம்பிகா.
"என் மனதில் நீண்ட காலமாக ஒரு சுமை இருந்தது. நீ களங்கப்படவில்லை என்று அறிந்ததும், அந்த சுமை இறங்கி விட்டது. ஒரு சின்ன சபலம் கூட, ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கி விடும் என்பதற்கு உன் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு'' என்பார், ரஜினி.
"நான் அதிக நாளைக்கு உயிர் வாழமாட்டேன். நான் இறந்தால், எனக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நீங்கள் செய்ய வேண்டும். என்னை அனாதைப் பிணமாக விட்டு விடாதீர்கள். இதுதான் என் கடைசி ஆசை'' என்று கண்ணீருடன் யாசிப்பார், அம்பிகா.
"உன் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவேன்'' என்று கூறிவிட்டு நடப்பார், ரஜினி.
அடுத்த நிமிடமே, ரஜினி விட்டுச்சென்ற செருப்பருகே சுருண்டு விழுந்து உயிர் துறப்பார், அம்பிகா.
இதுபற்றி தகவல் தெரிந்ததும், ஊர் பஞ்சாயத்து கூடும். (பஞ்சாயத்து தலைவர் அம்பிகாவின் அப்பாதான்)
அம்பிகா ஏற்கனவே கிராமத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டவர் என்பதால், அவர் உடலை அனாதைப்பிணமாக கருதி தகனம் செய்வது என்று முடிவு செய்யப்படும். தகனச் செலவுகளுக்காக வெட்டியானுக்கு 36 ரூபாய் 50 பைசாவை பஞ்சாயத்து வழங்கும்.
இதை அறியும் ரஜினி, அம்பிகாவின் உடலை தான் தகனம் செய்யப்போவதாக அறிவிப்பார்.
"பஞ்சாயத்தின் கட்டளையை மீறினால், நீங்களும் ஊரை விட்டு வெளியேற வேண்டியதுதான்'' என்று பஞ்சாயத்து தலைவர் கூறுவார்.
அதையும் மீறி, அம்பிகாவின் உடலை தன் இரு கைகளாலும் தூக்கிச்சென்று தகனம் செய்து விட்டு, ஊரை விட்டு வெளியேறுவார், ரஜினி.
ராதாவும், மகளும் அவருடன் செல்வார்கள்.
அம்பிகா நடிப்பு
இப்படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி, அம்பிகாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். ராதா, கமலா காமேஷ், டெல்லி கணேஷ் ஆகியோரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.
படத்தில் தனியாக காமெடி எதுவும் கிடையாது. 14-8-1982 அன்று இப்படம் வெளிவந்தது. முதலில் சில நாட்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பிறகு கூட்டம் அதிகரித்தது. பெண்களை இப்படம் அதிகமாகக் கவர்ந்தது. எனவே நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

எஸ்.பி.முத்துராமன்
இப்படத்தின் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-
"பஞ்சு அருணாசலம் கதையைச் சொன்னதுமே, படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். `பெண்கள் எந்த சபலத்துக்கும் ஆளாகக்கூடாது, மனசால் கூட தப்பு செய்யக்கூடாது என்ற மெசேஜ் இந்தக் கதையில் இருக்கிறது. எனவே இதில் நடிக்கிறேன்' என்றார்.
செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. எல்லோரும் நன்கு நடித்தனர். இளையராஜாவின் `ரீ ரிக்கார்டிங்' (பின்னணி இசை சேர்ப்பு) படத்துக்கு பலமாக அமைந்தது.
இந்தப்படம் வெளிவந்த அதே தேதியில் கமலஹாசன் நடித்த சகலகலா வல்லவனும் வெளிவந்தது. அதுவும் நான் டைரக்ட் செய்த படம்தான். அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தது ஒருவர்தான் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி இரண்டு படங்களும் முற்றிலும் மாறுபட்டவை. இரண்டும் வெற்றிகரமானவை.
"எங்கேயோ கேட்ட குரல்'' படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நினைத்தோம். படம் பார்த்தவர்கள் அப்படித்தான் சொன்னார்கள்.
ஆனால் தேசிய விருது கிடைக்கவில்லை. என்றாலும் மக்களின் பாராட்டு நிறைய கிடைத்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது''
இவ்வாறு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா''
ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' படத்தில், ரஜினிகாந்தும், ராதிகாவும் இணைந்து நடித்தனர்.
"சாண்டோ'' சின்னப்பதேவர் மறைவுக்குப் பிறகு, தேவர் பிலிம்ஸ் பேனரில் அவர் மகன் சி.தண்டாயுதபாணி, திரைப்படங்கள் தயாரித்தார். 1982-ல் அவர் தயாரித்த படம் "ரங்கா.''
ரஜினி - ராதிகா
இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா நடித்தார்.
முக்கிய வேடத்தில் "கராத்தே'' மணி நடித்தார். ரஜினியுடன் இவர் நடித்த இரண்டாவது படம் இது.
ரஜினியின் அக்காவாக கே.ஆர்.விஜயா நடித்தார். மற்றும் `சில்க்' சுமிதா, ரவீந்தர், மாஸ்டர் சுரேஷ், ஹாஜா செரீப், அசோகன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர்.
தேவர் பிலிம்ஸ் கதை இலாகா உருவாக்கிய கதைக்கு, தூயவன் வசனம் எழுதினார். வாலியின் பாடல்களுக்கு, சங்கர் - கணேஷ் இசை அமைத்தனர்.
தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.
குடும்ப சென்டிமெண்டும், சண்டைக்காட்சிகளும் நிறைந்த "ரங்கா'', 14-4-1982-ல் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடியது.
டைரக்டர் பேட்டி
இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, டைரக்டர் ஆர்.தியாகராஜன் கூறியதாவது:-
"ரங்கா படத்தில் ரஜினியின் அக்கா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜெயலலிதா. அவரிடம் கதையைச் சொன்னோம். தனது கேரக்டர் பிடித்துப்போனதால் ஜெயலலிதா ?ஒப்புக்கொண்டார். அவருக்கான "காஸ்ட்ïம்''கள் கூட தயாராகி விட்டன.

படப்பிடிப்பு தொடங்க இரண்டு நாள் இருக்கிற நிலையில், எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்தது. "அம்முவை (ஜெயலலிதா) இந்தப் படத்தில் போடவேண்டாம். அவரை நான் அரசியலில் கொண்டுவர இருக்கிறேன். நான் கே.ஆர்.விஜயாவிடம் பேசிவிட்டேன். அவர் ரஜினிக்கு அக்காவாக நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார்'' என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
அதன் பிறகு, கே.ஆர்.விஜயாவுடன் பேசினோம். எம்.ஜி.ஆர். அவரிடம் ஏற்கனவே பேசிவிட்டதால், எந்தவித தடங்கலுமின்றி ரஜினிக்கு அக்காவாக நடித்தார்.''
இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
புதுக்கவிதை
கே.பாலசந்தரின் "கவிதாலயா'' தயாரிப்பான "புதுக்கவிதை''யில் ரஜினியும், புதுமுகம் ஜோதியும் இணைந்து நடித்தனர்.
`ஒரு படத்தின் வெற்றிக்கு கதை வலுவானதாக இருக்கவேண்டும்' என்று அடிக்கடி ரஜினி கூறுவார். கன்னடத்தில் வெற்றி கண்ட "நா நின்னே மறியல்லாரே'' என்ற படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான் "புதுக்கவிதை.'' இதற்கு வசனம் எழுதியவர் விசு.
ரஜினிக்கு மாறுபட்ட கதை. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் படம் சிறப்பாக அமைந்தது.
சுகுமாரி, சில்க் சுமிதா, தேங்காய் சீனிவாசன், டெல்லி கணேஷ் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர்.
படத்தின் சிறப்பு அம்சம் இளையராஜாவின் இசை. "வெள்ளைப்புறா ஒன்று...'' உள்பட அனைத்துப் பாடல்களும் ஹிட்டாக அமைந்தன.
11-6-1982-ல் வெளிவந்த இந்தப்படம் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது.
"டைகர் ரஜினி'' என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டது.

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா''வில், ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்தனர். இந்தப்படம் 148 நாள் ஓடியது.
இந்தப்படம், "சுட்டலுன்னாரு ஜாக்ரதா'' என்ற தெலுங்குப் படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்டது.
இந்தப்படத்துக்கு, பஞ்சு - அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார். கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுதிய பாடல்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.
முத்துராமன்
ஏவி.எம்.மின் ஆஸ்தான டைரக்டரான எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.
அடிதடி நிறைந்த படம். ரஜினிக்கு ஏற்ற கதை. இரட்டை வேடம். ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்தார்.
இப்படத்தில் ரஜினியுடன் ஸ்ரீதேவி, ராதிகா, மனோரமா, தாம்பரம் லலிதா, முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன், அசோகன் நடித்தனர்.
1982 பொங்கலுக்கு வெளிவந்த இந்தப்படம், 148 நாள் ஓடியது.
பேச்சுத்திறமை
இந்தக் காலக்கட்டத்தில் ரஜினி எப்படி இருந்தார் என்பது பற்றி ஏவி.எம்.சரவணன் கூறியதாவது:-
"இப்போதெல்லாம் மேடைகளில் ரஜினி பிரமாதமாகப் பேசுகிறார். ஆரம்பத்தில் பொது நிகழ்ச்சிகளில் பேசவே கூச்சப்பட்டு, மறுத்து விடுவார்.
எங்கள் தயாரிப்பான "போக்கிரிராஜா'' படத்தின் வெற்றி விழாவில் பேசவேண்டும் என்று ரஜினியிடம் முன்கூட்டியே சொன்னபோது அவர் தயங்கி மறுத்துவிட்டார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்தான் அவரிடம், "பயப்படாதீங்க. நீங்கள் என்ன பேசவேண்டும் என்று நான் காகிதத்தில் எழுதிக் கொடுத்து விடுகிறேன். அதை அப்படியே படித்துவிடுங்கள்'' என்று தைரியமூட்ட, ரஜினி பேச ஒப்புக்கொண்டார்.
பேச்சுத்திறன்
எழுதிக்கொடுத்த பேச்சை, நிகழ்ச்சியின்போது ஓர் ஐந்து நிமிடத்துக்குத்தான் படித்திருப்பார். அவ்வளவுதான். அதன் பிறகு, பேச்சு எழுதப்பட்ட பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, தானே தன்னிச்சையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.
இப்போதுகூட, `சாதாரண ஆளான என்னை மேடைப்பேச்சாளராக்கியவர்கள் எஸ்.பி.முத்துராமனும், ஏவி.எம்.சரவணனும்தான்' என்று தவறாமல் தமாஷாகக் குறிப்பிடுவார், ரஜினி''
இவ்வாறு ஏவி.எம்.சரவணன் கூறியுள்ளார்.

தனிக்காட்டுராஜா
இதே ஆண்டு, ரஜினியும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்த மற்றொரு படம் "தனிக்காட்டுராஜா.'' டி.ராமா நாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு.
இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு, டைரக்ஷனையும் கவனித்தவர் வி.சி.குகநாதன்.
வாலியின் பாடல்களுக்கு, இளையராஜா இசை அமைத்தார்.
இப்படத்தில் ஸ்ரீபிரியா, சத்யகலா, ஒய்.விஜயா, ஸ்ரீலட்சுமி, சில்க் சுமிதா, ஜெய்சங்கர், விஜயகுமார், ராஜேஷ், சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, சங்கிலிமுருகன், வி.எஸ்.ராகவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஐசரி வேலன், செந்தாமரை, ஒய்.ஜி.மகேந்திரன், ஐ.எஸ்.ஆர். என்று ஒரே நட்சத்திரக் கூட்டம் நிறைந்திருந்தது.
12-3-1982-ல் வெளியான இப்படம், சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் "டப்'' செய்யப்பட்டது.
வி.சி.குகநாதன்
இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, படத்தின் டைரக்டரும், கதை-வசன கர்த்தாவுமான வி.சி.குகநாதன் கூறியதாவது:-
"பட அதிபர் ராமா நாயுடு தயாரித்த 4, 5 தெலுங்குப் படங்களை நான் டைரக்ட் செய்து, அவை மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன.
அவர் என்னை அழைத்து, "உங்கள் திறமையாலும், உழைப்பினாலும் பல வெற்றிப் படங்களை என்னால் தயாரிக்க முடிந்தது. உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.
நான் வீடு, கார் என்று ஏதாவது கேட்பேன் என்று அவர் நினைத்தார். ஆனால் நான் வேறு விதமாக என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
ரஜினி - கமல்
"தமிழில் உங்களுக்காக ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க விரும்புகிறேன். அதில் ரஜினி, கமல் இருவரும் நடிக்க வேண்டும். அவர்களை `புக்' செய்து கொடுங்கள்'' என்று கூறினேன்.
அதற்கு ராமாநாயுடு சம்மதித்தார். ரஜினி, கமல் இருவருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.
படத்தை "70 எம். எம்''ல் பிரமாண்டமாக எடுக்கத் தீர்மானித்தோம்.

கமல் வாபஸ்
ஆனால், திடீரென்று ஒருநாள் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் வந்து ராமாநாயுடுவை சந்தித்தார். ரஜினியும், கமலும் சேர்ந்து நடிப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்திருப்பதாகவும், அதனால் இப்படத்தில் கமல் நடிக்க இயலாது என்றும் கூறி, அட்வான்சை திருப்பிக் கொடுத்துவிட்டார்.
இதனால் ராமாநாயுடு வருத்தம் அடைந்தார். என்னை அழைத்து, "என்ன செய்யலாம்?'' என்று கேட்டார்.
"பரவாயில்லை. புகழ் பெற்ற நட்சத்திரங்கள் நிறைய பேரை நடிக்க வைத்து படத்தை சிறப்பாகவே தயாரிப்போம்'' என்றேன்.
அதன்படி பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டதுதான் "தனிக்காட்டுராஜா.''
இவ்வாறு குகநாதன் குறிப்பிட்டார்.
அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்''
புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை
ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த "நெற்றிக்கண்'', ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
"கவிதாலயா'' பேனரில் டைரக்டர் கே.பாலசந்தர் தயாரித்த படம் இது.
பொதுவாக, பாலசந்தர் கதை எழுதும் படங்களை அவரே இயக்குவதுதான் வழக்கம். ஆனால், "நெற்றிக்கண்''ணை அவர் டைரக்ட் செய்யவில்லை. ஏற்கனவே, ரஜினியை வைத்து "புவனா ஒரு கேள்விக்குறி'', "முரட்டுக்காளை'' முதலிய வித்தியாசமான படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.
வியப்பு-திகைப்பு
"நெற்றிக்கண்''ணை இயக்குவதற்கு பாலசந்தர் அழைப்பு அனுப்பியபோது, முத்துராமன் வியப்பும், திகைப்பும் அடைந்தார்.
`அவரே பெரிய டைரக்டர். அவர் படத்தை நாம் எப்படி டைரக்ட் செய்வது?' என்ற கேள்வி, அவரை பயமுறுத்தியது.
பாலசந்தரை சந்தித்துப் பேசியபின், அவருடைய பயம் மறைந்தது.
பாலசந்தர் சொன்னார்:-
"நான் வித்தியாசமான கதைகளை, என் பாணியில் டைரக்ட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். என்னிடம் ரசிகர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
"நெற்றிக்கண், ரஜினிக்கு முற்றிலும் மாறுபட்ட கதை. இரட்டை வேடம். இதை கமர்ஷியல் படமாக எடுத்தால்தான் நன்றாக இருக்கும். நீங்கள் ரஜினியை வைத்து, சிறப்பான படங்களை எடுத்திருக்கிறீர்கள். ரஜினி ஓர் நடிப்புச்சுரங்கம். அவரிடம் புதைந்துள்ள நடிப்பை, நீங்கள் இப்படத்தில் சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.
முழு சுதந்திரம்
திரைக்கதை, எழுதுவதுடன் என் வேலை முடிந்து விட்டது. படத்தை உங்கள் விருப்பப்படி எடுக்கலாம். எந்த ஒரு கட்டத்திலும் என் தலையீடு இருக்காது. உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு.

படத்தை சிக்கனமாக எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஏவி.எம். படங்களை எப்படி நிறைய செலவு செய்து எடுக்கிறீர்களோ, அதுபோல் எடுங்கள்.''
இவ்வாறு பாலசந்தர் கூறினார்.
இதனால் உற்சாகம் அடைந்த எஸ்.பி.முத்துராமன், "நெற்றிக்கண்''ணை சிறந்த முறையில் உருவாக்கினார்.
அப்பா-மகன்
இதில் அப்பாவாகவும், மகனாகவும் ரஜினி நடித்தார்.
அப்பா ரஜினி உல்லாச பேர்வழி. வேலை கேட்டு வரும் ஒரு பெண்ணை (சரிதா) கெடுத்து விடுவார்.
இது மகன் ரஜினிக்கு தெரிகிறது. அப்பாவை திருத்துவதற்கும், உண்மையை அவர் வாயினாலேயே ஒப்புக் கொள்ளச் செய்யவும், புதிய உத்தியை கையாளுவார். சரிதாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிப்பார்.
இதனால் அப்பா ரஜினிக்கு இக்கட்டான நிலைமை ஏற்படும். அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சியி னால், அவர் இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவிப்பார்.
கடைசியில் உண்மையை ஒப்புக்கொள்வார். சரிதாவை ஏற்றுக்கொள்ளவும் முன்வருவார்.
ஆனால், "உண்மையை நீங்கள் ஒப்புக்கொண்டீர்களே, அதுவே போதும்'' என்று கூறிவிட்டு சரிதா வெளியேறுவார்.
அப்பாவாகவும், மகனாகவும் நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார் ரஜினி. இரண்டு ரஜினிகளும் நடத்திய "மவுனயுத்தம்'', ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
ஒரு ரஜினிக்கு மனைவியாகவும், இன்னொரு ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்த லட்சுமியின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. சரிதாவும் சிறப்பாக நடித்திருந்தார். ரஜினியின் மகளாக விஜயசாந்தி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிய பாலசந்தர், வசனம் எழுதவில்லை. அந்தப் பொறுப்பை விசுவிடம் கொடுத்தார். விசுவின் வசனம் கச்சிதமாக அமைந்திருந்தது.
பாடல்களை கண்ணதாசன் எழுத, இசை அமைத்தவர் இளையராஜா.
1981 ஆகஸ்டு 15-ந்தேதி வெளியான "நெற்றிக்கண்'', நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

இப்படம் தெலுங்கிலும் "டப்'' செய்யப்பட்டு நன்றாக ஓடியது.
ராணுவ வீரன்
அடுத்து ரஜினி நடித்த படம் சத்யா மூவிஸ் தயாரிப்பான "ராணுவ வீரன்.'' இந்தப் படத்தையும் எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார்.
ராணுவத்தில் இருந்து ஊருக்கு திரும்பும் ரஜினி, பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படும் பொதுமக்களுக்கு உதவுவதுதான் கதை.
ரஜினிகாந்த், ஆக்ஷன் ஹீரோவாகத் தோன்றி, அடிதடி சண்டைக் காட்சியில் கைதட்டல் பெற்றார்.
இப்போது தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் சிரஞ்சீவி, இந்தப் படத்தில் ரஜினிக்கு அடுத்த வேடத்தில் நடித்திருந்தார்.
மற்றும் ஸ்ரீதேவி, வசந்தா, நளினி, தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்தவர் "ஓம்சக்தி'' ஜெகதீசன். வசனம்: கிருஷ்ணா.
வாலி, முத்துலிங்கம், புலமைப்பித்தன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு, இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
26-10-1981-ல் வெளியான இப்படமும் நூறு நாள் ஓடியது.
"பந்தி போட்டு சிம்மம்'' என்ற பெயரில் "ராணுவ வீரன்'' தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது.
(ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' - நாளை)
ரஜினி நடித்த திரைப்படங்கள்
படம் வெளியான தேதி டைரக்டர்
41 ப்ரியா (கன்னடம்) 12-01-1979 எஸ்.பி.முத்துராமன்
42 குப்பத்துராஜா 12-01-1979 டி.ஆர்.ராமண்ணா
43 இத்துரு அசாத்யுலே (தெலுங்கு) 25-01-1979 கே.எஸ்.ஆர்.தாஸ்
44 அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்) 14-04-1979 ஐ.வி.சசி
45 நினைத்தாலே இனிக்கும் 14-04-1979 கே.பாலசந்தர்
46 அந்த மைன அனுபவம் (தெலுங்கு) 19-04-1979 கே.பாலசந்தர்
47 அலாவுதீனும் அற்புத விளக்கும் 08-06-1979 ஐ.வி.சசி
48 தர்மயுத்தம் 29-06-1979 ஆர்.சி.சக்தி
49 நான் வாழவைப்பேன் 10-08-1979 டி.யோகானந்த்
50 டைகர் (தெலுங்கு) 05-09-1979 என்.ரமேஷ்
51 ஆறிலிருந்து அறுபது வரை 14-09-1979 எஸ்.பி.முத்துராமன்
52 அன்னை ஓர் ஆலயம் 19-10-1979 ஆர்.தியாகராஜன்
53 அமா எவரிதைன அம்மா (தெலுங்கு) 08-11-1979 ஆர்.தியாகராஜன்
54 பில்லா 26-01-1980 ஆர்.கிருஷ்ணமூர்த்தி
55 ராம் ராபர்ட் ரஹீம் (தெலுங்கு) 31-05-1980 விஜய நிர்மலா
56 அன்புக்கு நான் அடிமை 04-06-1980 ஆர்.தியாகராஜன்
57 காளி 03-07-1980 ஐ.வி.சசி
58 மாயதாரி கிருஷ்ணடு (தெலுங்கு) 19-07-1980 ஆர்.தியாகராஜன்
59 நான் போட்ட சவால் 07-08-1980 புரட்சிதாசன்
60 ஜானி 15-08-1980 மகேந்திரன்
காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார்
ரஜினி-லதா காதலுக்கு வழிவகுத்த "தில்லுமுல்லு'' படம், அவர்களுடைய திருமணத்துக்குப்பின் வெளிவந்து, வெற்றிப்படமாக அமைந்தது.
இந்தப் படத்தில், ரஜினிகாந்த் நகைச்சுவை நடிப்பில் முத்திரை பதித்தார்.
பாலாஜியின் "தீ''
ரஜினியின் திருமணத்துக்கு முன்னதாக கடைசியாக ரிலீஸ் ஆன படம் "தீ.'' (26-1-1981) இதைத் தயாரித்தவர் கே.பாலாஜி. இவர் பிற மொழிப் படங்களை தமிழில் மீண்டும் தயாரித்து ("ரீமேக்'') வெற்றிமேல் வெற்றி பெற்றவர்.
இப்படி இவர் ரீமேக் செய்த "பில்லா'' பெரிய வெற்றி பெற்றதால், இந்தியில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற "தீவார்'' படத்தை "தீ'' என்ற பெயரில் தமிழில் தயாரித்தார். இதில் ரஜினிக்கு குணச்சித்ர வேடம்.

பாடல்களை கண்ணதாசன் எழுத, வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார்.
ரஜினியுடன் ஷோபா, ஸ்ரீபிரியா, சவுகார்ஜானகி, சுமன், மனோரமா, தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, அசோகன், ஏவி.எம்.ராஜன் நடித்தனர்.
இலங்கை நிறுவனத்துடன் கூட்டாக இந்தப் படத்தை பாலாஜி தயாரித்தார். எனவே, இலங்கையிலும் படப்பிடிப்பு நடந்தது.
ரஜினியின் திருமணத்துக்கு சரியாக ஒரு மாதத்துக்கு முன் வெளிவந்த இந்தப்படம் இலங்கையில் 100 நாள் ஓடியது. தமிழ்நாட்டில் 60 நாள் ஓடியது.
கழுகு
திருமணத்துக்குப்பின் வெளிவந்த முதல் படம் "கழுகு'' (6-3-1981). பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம். வசனத்தையும், பாடல்களையும் பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசை அமைத்தார். டைரக்ஷன்: எஸ்.பி.முத்துராமன்.
ஒரு போலிச்சாமியாரின் அந்தரங்க ரகசியங்களை கண்டுபிடித்து, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகை நிருபர் ஒருவரைப் பற்றியதுதான் கதை. நிருபராக ரஜினி நடித்தார்.
இந்தப் படத்தில், கதாபாத்திரங்களுடன் ஒரு பஸ் முக்கிய இடம் பெற்றிருந்தது. இதற்காக ஒரு பஸ்சை வாங்கி, அதன் சீட்களை நீக்கிவிட்டு, ஒரு வீடு மாதிரி மாற்றி அமைத்தார்கள். சமையல் அறை, பெட்ரூம், பாத்ரூம் எல்லாம் உள்ளேயே அமைக்கப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், "நடமாடும் வீடு'' மாதிரி இருந்தது இந்த பஸ்!
இந்தப்படம் நடுத்தரமாக ஓடியது. ரஜினி படங்களில் "நடுத்தரம்'' என்றால், லாபம் குறையும். அவ்வளவுதான்!
தில்லுமுல்லு

இதன்பிறகு வெளிவந்த படம் "தில்லுமுல்லு.'' கே.பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா தயாரித்த படம். இந்தப் படத்துக்கான வசனங்களை வாசு எழுதினார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
ரஜினி வாழ்க்கையில், "தில்லுமுல்லு'' முக்கியமான படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதுதான், கல்லூரி மாணவியான லதா ரஜினியை பேட்டி காண வந்தார். காதல் அரும்பி, கல்யாணத்தில் முடிந்தது.
இந்தப்படம், "கோல்மால்'' என்ற இந்திப்படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்டதாகும். ரஜினிக்கு ஜோடியாக மாதவி நடித்தார். மற்றும் தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், நாகேஷ், சவுகார்ஜானகி ஆகியோர் நடித்தனர். கமலஹாசனும், லட்சுமியும் கவுரவ வேடத்தில் தோன்றினர்.
நகைச்சுவை
படம் முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்திருந்தன.
ரஜினிக்கு இரட்டை வேடம் இல்லாவிட்டாலும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ரஜினி மீசையோடும், மீசை இல்லாமலும் இரண்டு வித தோற்றங்களில் வருவார். இரண்டு தோற்றங்களிலும் வருவது ஒருவரே என்றாலும், "இருவர்'' என்று கூறி தில்லுமுல்லு செய்வார்.
1-5-1981-ல் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
(தொடரும்)
***
ரஜினி நடித்த திரைப்படங்கள்
21 சங்கர் சலீம் சைமன் 10-02-1978 பி.மாதவன்
22 கில்லாடி கிட்டு (கன்னடம்) 03-03-1978 கே.எஸ்.ஆர்.தாஸ்
23 அண்ண தம்முல சவால் 03-03-1978 கே.எஸ்.ஆர்.தாஸ் (தெலுங்கு)
24 ஆயிரம் ஜென்மங்கள் 10-03-1978 துரை
25 மாத்து தப்பித மகா (கன்னடம்) 31-03-1978 பெக்கட்டி சிவராம்
26 மாங்குடி மைனர் 19-05-1978 வி.சி.குகநாதன்
27 பைரவி 02-06-1978 எம்.பாஸ்கர்
28 இளமை ஊஞ்சலாடுகிறது 09-06-1978 ஸ்ரீதர்
29 சதுரங்கம் 30-06-1978 துரை
30 வணக்கத்துக்குரிய காதலியே 14-07-1978 ஏ.சி.திருலோகசந்தர்
31 வயசு பிலி சிந்தி (தெலுங்கு) 04-08-1978 ஸ்ரீதர்
32 முள்ளும் மலரும் 15-08-1978 மகேந்திரன்
33 இறைவன் கொடுத்த வரம் 22-09-1978 ஏ.பீம்சிங்
34 தப்பித தாளா (கன்னடம்) 06-10-1978 கே.பாலசந்தர்
35 தப்புத்தாளங்கள் 30-10-1978 கே.பாலசந்தர்
36 அவள் அப்படித்தான் 30-10-1978 ருத்ரய்யா
37 தாய்மீது சத்தியம் 30-10-1978 ஆர்.தியாகராஜன்
38 என்கேள்விக்கென்ன பதில்? 09-12-1978 பி.மாதவன்
39 ஜஸ்டிஸ் கோபிநாத் 16-12-1978 டி.யோகானந்த்
40 ப்ரியா 22-12-1978 எஸ்.பி.முத்துராமன்