Monday, 16 June 2014

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை
தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு


ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தகவல், தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

1979 மார்ச் 11-ந்தேதியன்று விஜயா நர்சிங் ஹோமில் ரஜினி சேர்க்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், "நல்லவேளை, சரியான நேரத்தில் கொண்டு வந்தீர்கள். இன்னும் 10 நாட்கள் இப்படியே விட்டு வைத்திருந்தால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமë'' என்று கூறினார்கள்.

பரபரப்பு

ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி, தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. திரை உலகத்தில் அதுபற்றித்தான் பேச்சு.


"சீக்கிரம் சரியாகி விடுவார். முன்போலவே, சுறுசுறுப்பாக நடிப்பார்'' என்று பலர் நினைத்தாலும், ஒருசிலர் "அவர் கதை அவ்வளவுதான். இனி அவரால் நடிக்க முடியாது'' என்றார்கள்.

ஆனாலும், அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்று நல்ல உள்ளங்கள் பிரார்த்தனை செய்தன.

ஓய்வு எடுக்காமல், இரவு - பகலாக உழைத்ததுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்பதை டாக்டர்கள் மட்டுமல்ல, ரஜினியுடன் பழகியவர்களும் கூறினார்கள்.

சுஜாதா

ரஜினிகாந்த் நடித்த "ப்ரியா'' படத்தின் கதாசிரியரான பிரபல எழுத்தாளர் சுஜாதா கூறியதாவது:-

"ப்ரியா'' படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் எனக்குப் பழக்கமானார். அப்போது அவர் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். இருந்தும் என்னை விமானத்திலோ, படப்பிடிப்பிலோ சந்தித்தால் தனியாக மதிப்புக் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பார்.



ரஜினிகாந்துக்கு தற்காலிக "நெர்வ்ஸ் பிரேக் டவுன்'' (நரம்பு மண்டல பாதிப்பு) ஏற்பட்ட காரணங்களை, அப்போதே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

பெங்களூரில் இரவு எட்டரை மணிக்குப் பாலசந்தர் படத்தின் படப்பிடிப்பில் (தப்புத்தாளங்கள் என்று நினைக்கிறேன்) சைக்கிள் செயின் சுழற்றிக் கொண்டிருக்கிறார்.

எட்டு நாற்பத்தைந்துக்கு, ஏணியை விலக்குவதற்கு இரண்டு நிமிஷம் முன்னால் பெங்களூரில் விமானம் ஏறி, சென்னை போய், அங்கேயிருந்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன் பிடித்து சிங்கப்பூர் போய், அதிகாலையில் அங்கே `ப்ரியா' சூட்டிங். மூன்று நாள் கழித்துத் திரும்பிப் பெங்களூர் வந்து சைக்கிள் செயின் சுழற்றி விட்டு மறுபடி சிங்கப்பூர்! இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட "நெர்வ்ஸ் ப்ரேக் டவுன்'' வந்து விடும்.''

இவ்வாறு சுஜாதா கூறினார்.

பஞ்சு அருணாசலம்

ரஜினியின் திரையுலக முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் பஞ்சு அருணாசலம் அப்போது ஒரு பேட்டியில் கூறியதாவது:-

"உடல் நலம் சரி இல்லாதபோதும், படப்பிடிப்பை ரத்து செய்யாமல் நடித்தவர் ரஜினி. இதற்காக அவரை நான் கடிந்து கொண்டது உண்டு.



அப்போதெல்லாம், "சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டாமா சார்! தூக்கம் என்ன வேண்டிக் கிடக்கிறது!'' என்பார்.

தயாரிப்பாளர், டைரக்டர்களின் மனதை வருத்தக்கூடாதே என்று தன் உடலை வருத்திக்கொண்டார்.

ஓய்வே இல்லாமல் நடித்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது. அவரைப்போல் பரபரப்பான - சுறுசுறுப்பான நடிகரைப் பார்ப்பது அபூர்வம்.''

இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்




1979-ம் ஆண்டு, ரஜினிக்கு சோதனையான ஆண்டு. இரவு - பகல் பாராமல் தொடர்ந்து படங்களில் நடித்ததால், அவர் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டன.

உடல் சோர்வை போக்கிக்கொள்ள மது அருந்தினார்; ஜரிதா பீடா, ஜாதிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டார்.

நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால் எதைக் கண்டாலும் எரிச்சல். யாரைக்கண்டாலும் கோபம்.

மயக்கம்

1979 மார்ச் முதல் தேதி. பஞ்சு அருணாசலத்தின் "ஆறிலிருந்து அறுபதுவரை'' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தபோது, மயக்கம் போட்டு விழுந்தார்.

உடனடியாக டாக்டர் வந்து பரிசோதித்தார். "ஓய்வு - ஒழிச்சல் இன்றி, தூக்கம் இன்றி நடித்ததால் ஏற்பட்ட மயக்கம் இது. நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று டாக்டர் கூறினார்.

டாக்டர் சொன்னதற்காக ஒரே ஒரு நாள் மட்டும் ஓய்வு எடுத்துக்கொண்டார். மறுநாள் "அன்னை ஓர் ஆலயம்'' படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

பத்திரிகையாளர் புகார்

ரஜினிகாந்தைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் தொடர்ந்து தாக்கி எழுதி வந்தார்.

ஒரு நாள் ரஜினி காரில் சென்றபோது, அந்த பத்திரிகையாளர் முன்னால் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்தார். `ஏன் என்னை சதா தாக்கி எழுதுகிறீர்கள்?' என்று கேட்பதற்காக, காரை அவர் அருகே ஓட்டிச்சென்றார்.

தன் மீது காரை மோதுவதற்கு ரஜினி வருவதாக, பத்திரிகையாளர் நினைத்து, போலீசில் புகார் செய்தார். ரஜினி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக, மார்ச் 8-ந்தேதி பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது.



சிவாஜியின் 200-வது பட விழா

சிவாஜிகணேசனின் 200-வது பட விழா, மார்ச் 10-ந்தேதி மதுரையில் நடந்தது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். சிவாஜியின் காலைத்தொட்டு வணங்கி, வாழ்த்து பெற்றார்.

இதன்பின் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி, 13-3-1979 அன்று பத்திரிகைகளில் கீழ்க்கண்டவாறு செய்திகள் வெளியாயின:-

விமான நிலையத்தில் பரபரப்பு

"மதுரையில் சிவாஜிகணேசனின் 200-வது பட விழாவில் கலந்து கொண்ட நடிகர்-நடிகைகள் சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் சென்றனர். அவர்களுடன் சென்ற ரஜினிகாந்த், விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்றார். "சோடா வேண்டும்'' என்று கேட்டார்.

`சோடா தீர்ந்துவிட்டது' என்று கடை ஊழியர் கூறினார். உடனே ரஜினிகாந்த், அவர் கன்னத்தில் அறைந்தார்.

பிறகு, தன் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை கழற்றி, அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினார். இதைப் பார்த்தவர்கள் பயந்து போய் ஓட்டம் பிடித்தனர்.

இந்த சம்பவத்தின் விளைவாக, ரஜினியை விமானத்தில் ஏற்ற அதிகாரிகள் மறுத்தனர். மற்ற நடிகர்கள் வந்து, "நாங்கள் அவரை பத்திரமாக அழைத்துப் போகிறோம்'' என்று உறுதிமொழி கொடுத்ததால், அனுமதித்தனர்.

விமானத்தில், நடிகர் எம்.என்.நம்பியார், ரஜினிகாந்தின் அருகில் உட்கார்ந்து, அவரை பத்திரமாக அழைத்து வந்தார்.

சென்னை வந்து சேர்ந்த பிறகும், ரஜினிகாந்த் இயல்பான நிலைக்கு வரவில்லை. இதனால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள விஜயா நர்சிங் ஹோமில் சேர்க்கப்பட்டார்.

அவருடன் மேஜர் சுந்தரராஜன், நம்பியார், பாலாஜி, நாகேஷ் ஆகியோரும் சென்றனர்.



சிகிச்சை

ரஜினிகாந்துக்கு, டாக்டர் செரியன் சிகிச்சை அளித்தார்.

பிறகு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன்பின் ரஜினி அயர்ந்து தூங்கினார்.

நிருபர்களிடம் மேஜர் சுந்தரராஜன் கூறியதாவது:-

"கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்த் சரியான தூக்கமின்றி, இரவு பகலாக நடித்து வருகிறார்.

கடந்த ஒரு வருட காலமாகவே அவருக்கு ஓய்வு இல்லை என்றும், தூக்கம் இல்லாததால் அவர் உடல் நிலையும், மன நிலையும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.

அவர் 72 மணி நேரம் (3 நாள்) தொடர்ந்து தூங்க வேண்டும் என்றும், அதன் பிறகுதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.''

இவ்வாறு மேஜர் சுந்தரராஜன் கூறியதாக, பத்திரிகைகளில் வெளியான செய்திகள் கூறின.

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''



புகழேணியில் வேகமாக ஏறிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், சிவாஜிகணேசனுடன் முதன் முதலாக "ஜஸ்டிஸ் கோபிநாத்'' என்ற படத்தில் இணைந்து நடித்தார்.

வள்ளிமணாளன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை யோகானந்த் இயக்கினார்.

இப்படத்தில் கே.ஆர்.விஜயா, சுமித்ரா, ஏ.சகுந்தலா, அபர்ணா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர்.

வசனத்தை வியட்நாம் வீடு சுந்தரம் எழுத, பாடல்களை வாலி எழுதினார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

16-12-1978-ல் இந்தப்படம் வெளிவந்தது. சிவாஜி, ரஜினி ஆகியோரின் திறமையை சரிவர பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால், படம் சுமாராகவே ஓடியது.

வெள்ளி விழா படம் - "ப்ரியா''

ரஜினி நடித்து அடுத்து வெளிவந்த "ப்ரியா'', 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. எஸ்.பி.தமிழரசியின் எஸ்.பி.டி. பிலிம்ஸ், தமிழிலும், கன்னடத்திலும் ஒரே சமயத்தில் இக்கதையை படமாக்கியது.

தமிழ்ப் படத்துக்கு திரைக்கதை, வசனம், பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுதினார். எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார். இசை இளையராஜா.

இந்தப் படத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி என்றாலும், அவர் ரஜினிக்கு ஜோடி அல்ல!

படத்தில், அவர் ஒரு நடிகை. அவர் அம்ரிஷை காதலிக்கிறார். அதற்கு வில்லன் மேஜர் சுந்தரராஜன் முட்டுக்கட்டை போடுவதுடன், பல விதத்திலும் தொந்தரவு கொடுப்பார்.

ஸ்ரீதேவிக்கு உதவும் துப்பறியும் அதிகாரியாக ரஜினி நடித்தார். அவருடைய காதலியாக அஸ்னா என்ற சிங்கப்பூர் நடிகை நடித்தார்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் முதலிய நாடுகளில் நடந்தது. பாபுவின் படப்பிடிப்பு, பிரமாதமாக அமைந்தது. எல்லாப் பாடல்களும் ஹிட்டாக அமைந்தன.

16-12-1978-ல் வெளிவந்த இந்தப்படம் 25 வாரம் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. கன்னடப்படமும் வெற்றிகரமாக அமைந்தது.

"ப்ரியா'' தமிழ்ப்பதிப்பு, "அஜெயுடு'' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. அந்தப் படமும் வெற்றி பெற்றது.

இந்த ஆண்டில் வெளிவந்த ரஜினியின் மற்றொரு படம் "என் கேள்விக்கு என்ன பதில்.'' அபிராமி பட நிறுவனத்தின் சார்பில், டி.கே.கோபிநாத் தயாரித்த படம். கவிஞர் கண்ணதாசன், முத்துலிங்கம் ஆகியோர் பாடல்களை எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். வசனம்: பாலமுருகன்.



ஸ்ரீபிரியா, விஜயசந்திரிகா, விஜயகுமார், எம்.என்.நம்பியார், மனோரமா, சுருளிராஜன் ஆகியோர் இதில் நடித்தனர்.

படம் சுமாராகவே அமைந்தது.

கால்ஷீட் பிரச்சினை

பட அதிபர்கள் ஏக காலத்தில் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டு மொய்த்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாமல் ரஜினி தவித்தார். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு அவர் ஏற்கனவே தேதி கொடுத்து விட்டார். புதுப்படங்களில் நடிக்க வந்த பல அழைப்புகளை ஏற்கமுடியவில்லை.

தன்னைத் தேடி வரும் பட அதிபர்களின் எண்ணிக்கையை குறைக்க, தன் ஊதியத்தை உயர்த்தினார். அதையும் சிலர் குறை கூறினர். `நேற்று வந்தவர் இவ்வளவு பணம் கேட்கிறாரே!' என்று சொன்னார்கள்.

இதுபற்றி அப்போது ஒரு பேட்டியில் ரஜினி கூறியதாவது:-

"அதிகப் படங்களில் நடிப்பதை தவிர்க்க எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. நான் வாங்குகிற ரேட்டை உயர்த்துவதுதான் அந்த ஐடியா. அதனால், வேறு வழியின்றி ரேட்டை உயர்த்தினேன். அதையும் சிலர் குறை கூறினார்கள். அவர்களுக்குத் தெரியுமா, என் அவஸ்தை!

இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், `ஏன் நடிக்க வந்தோம்' என்று தோன்றுகிறது! அந்த அளவுக்கு `கால்ஷீட்' பிராபளம்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. தென்னாட்டில் பிரபலமான நட்சத்திரமாக நான் மதிக்கப்படுகிறேன். எந்த நடிகருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் பயமாக இருக்கிறது. `கிடைத்த பேரை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே' என்ற பயம்தான் அது.

இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

பாலசந்தர் தமாஷ்

இந்த சந்தர்ப்பத்தில் டைரக்டர் பாலசந்தரை சந்தித்த ரஜினிகாந்த், தனக்குள்ள "கால்ஷீட்'' பிரச்சினை பற்றி தெரிவித்தார்.



பாலசந்தர் சிரித்துக்கொண்டே, "உன்னை அறிமுகப்படுத்திய நானே, உன்னுடைய கால்ஷீட்டுக்கு ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும் போல் இருக்கிறதே!'' என்றார்.

அந்த அளவுக்கு `பிசி'யாக இருந்தார், ரஜினிகாந்த்.

மார்லன் பிராண்டோ

ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவின் படங்கள் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும். இந்தக் காலக்கட்டத்தில் அவருடைய புகழ் பெற்ற படமான "காட்பாதர்'' மும்பையில் திரையிடப்பட்டது. இடைவிடாமல் படப்பிடிப்பு இருந்தாலும், விமானத்தில் மும்பைக்குப் பறந்து சென்று, அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் போய் வந்தார்.

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி
`தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்




டைரக்டர் கே.பாலசந்தரால் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பிறகு பாலசந்தரின் டைரக்ஷனில் நடித்த படம் "தப்புத்தாளங்கள்.''

"முள்ளும் மலரும்'' படத்திற்குபின் ரஜினி நடித்த படம் ஏ.பீம்சிங் டைரக்ஷனில் உருவான "இறைவன் கொடுத்த வரம்.''

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஆர்.பாலகிருஷ்ணன் எழுதியிருந்தார்.

ரஜினிகாந்துடன் விஜயகுமார், ஸ்ரீகாந்த், சோ, சுமித்ரா, படாபட் ஜெயலட்சுமி, ஜெயதேவி, எம்.பானுமதி ஆகியோர் நடித்திருந்தனர்.

22-9-1978-ல் வெளியான இப்படம், பெரிதாக வெற்றிபெறவில்லை.

தப்புத்தாளங்கள்

டைரக்டர் பாலசந்தர் 1978-ல் "தப்புத்தாளங்கள்'' என்ற கதையை உருவாக்கி, தமிழிலும், கன்னடத்திலும் ஒரே சமயத்தில் தயாரிக்க முடிவு செய்தார்.

அதில் பிரதான கதாபாத்திரமான ரவுடி கேரக்டரில், ரஜினியை நடிக்க வைக்க எண்ணினார். அதே சமயத்தில், "ரஜினி இப்போது மிக உயர்ந்த உயரத்துக்குப்போய் விட்டார். நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். கால்ஷீட் கிடைக்குமோ, கிடைக்காதோ?'' என்ற சந்தேகமும் இருந்தது.

ஆயினும், அவர் ரஜினிக்கு போன் செய்ததும், தப்புத்தாளங்களில் நடிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

படப்பிடிப்பு ஆரம்பமாயிற்று. கதாநாயகியாக (தாசி வேடத்தில்) சரிதா நடித்தார். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம்.

பாலசந்தர் தயக்கம்

ரஜினியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியதுடன், மூன்று படங்களில் நடிக்க வைத்தவர், பாலசந்தர். அந்தக் காலக்கட்டத்தில் ரஜினியை அவர் ஒருமையில் அழைப்பது வழக்கம். "டேய், சிவாஜி! இங்கே வா!'' என்றெல்லாம் அழைத்திருக்கிறார்.

"இப்போது ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராகி விட்டார். அவரை முன்போல் ஒருமையில் அழைக்கலாமா! அவர் அதை தவறாக எண்ணுவாரா? நடிப்பில் திருப்தி இல்லாவிட்டால், மீண்டும் `டேக்' எடுக்கலாமா? கண்டித்து திருத்தலாமா?'' என்றெல்லாம் இப்போது பாலந்தர் எண்ணினார்.



தன் மனதில் உள்ள சந்தேகத்தை ரஜினியிடம் சொன்னார். அதைக்கேட்டதும், ரஜினிகாந்த் விழுந்து விழுந்து சிரித்தார்.

"என்ன சார் சொல்றீங்க! இந்த வாழ்க்கை நீங்க போட்ட பிச்சை! என்னை திருத்தவோ, கண்டிக்கவோ மட்டுமல்ல, அடிக்கக்கூட உரிமை உள்ள ஒரே டைரக்டர் நீங்கள்தான்! என்னைப்போய் இப்படி வித்தியாசமாக நினைக்கலாமா சார்!'' என்றார், ரஜினி. அப்போது அவர் கண்களில் நீர் துளிர்த்தது.

பாலசந்தரும் கண்கலங்கிவிட்டார்.

"ரஜினி, மை பாய்! நீ என்றைக்கும் என்னுடைய ரஜினியாகவே இருப்பது கண்டு நிஜமாகவே ரொம்பப் பெருமைப்படுகிறேன்'' என்றார், நெகிழ்ச்சியுடன்.

இந்தப் படத்தில் முரட்டுத்தனமான கேரக்டரில் ரஜினி திறமையாக நடித்தார். சரிதா நடிப்பும் சிறப்பாக இருந்தது.

கன்னட "தப்பித தாளா'' 6-10-1978-லும், தமிழ் "தப்புத் தாளங்கள்'' 30-10-1978-லும் வெளியாயின. படம் "பிரமாதம்'' என்று சொல்லும்படி அமையாவிட்டாலும், ரசிக்கும்படி இருந்தது. இந்தப் படத்திற்காக, சிறந்த வசன கர்த்தா விருது, பாலசந்தருக்குக் கிடைத்தது.

அவள் அப்படித்தான்

தயாரிப்பாளர், டைரக்டர் ருத்ரையாவின் "அவள் அப்படித்தான்'' படத்தில், ரஜினி, கமல் இணைந்து நடித்தனர். ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்தப் படத்தில் ஒரு விசேஷம். இதில் நடித்த அனைவரும் "மேக்கப்'' இல்லாமல் நடித்தனர்.

30-10-1978 அன்று வெளிவந்த இப்படம் "வித்தியாசமான படம்'' என்று புகழ் பெற்றது.

தேவர் படத்தில் ரஜினி

சாண்டோ சின்னப்ப தேவர் படத்தில் எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்து வந்தார். முதல்- அமைச்சரான பிறகு, படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

எனவே, ரஜினிகாந்தை வைத்து படங்களைத் தயாரிக்க தேவர் முடிவு செய்தார்.

தேவரின் "தண்டாயுதபாணி பிலிம்ஸ்'' பேனரில் ரஜினி நடித்த முதல் படம் "தாய் மீது சத்தியம்.'' இதில் ரஜினிகாந்தின் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார்.

வசனத்தை தூயவன் எழுத, சங்கர்-கணேஷ் இசை அமைத்தனர். தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.

தேவர் மறைவு

படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஒரு பாடல் காட்சியை படமாக்க தேவரும் மற்றவர்களும் ஊட்டிக்குச் சென்றனர்.



அங்கு தேவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஊட்டியிலிருந்து கோவைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி 8-9-1978 அன்று தேவர் மரணம் அடைந்தார்.

அதன் பிறகு, மீதி இருந்த காட்சிகளை படமாக்கி, 1978 தீபாவளி அன்று படத்தை ரிலீஸ் செய்தனர்.

தேவருக்காக ரஜினி நடித்த முதல் படமான "தாய் மீது சத்தியம்'' வெற்றிப்படமாக அமைந்து, நூறு நாட்களைக் கடந்து ஓடியது.

தேவர் பிலிம்ஸ்சில் எப்படி எம்.ஜி.ஆருக்கு ஒரு நிரந்தர இடம் இருந்ததோ, அதே மாதிரியான நிரந்தர இடத்தை ரஜினி பெற்றார்.

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!'

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!'
மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!


"முள்ளும் மலரும்'' படத்தின் கதாநாயகனாக ரஜினிகாந்தை நடிக்க வைக்கலாம் என்று டைரக்டர் மகேந்திரன் கூறிய யோசனைக்கு, பட அதிபர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மகேந்திரன், ஆரம்பத்தில் "துக்ளக்'' பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அப்போது, சினிமா விமர்சனங்கள் எழுதி வந்தார். தமிழ்ப் படங்களின் தரத்தைப்பற்றி, `கிழி கிழி' என்று கிழிப்பார்.

பிறகு அவர் சிவாஜியின் "தங்கப்பதக்கம்'' படத்தின் மூலம், திரைப்பட கதை-வசன கர்த்தா ஆனார்.

முள்ளும் மலரும்



எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய "முள்ளும் மலரும்'' நாவல் அவரை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக அதில் வரும் காளி கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

எனவே, அக்கதைக்கான திரைக்கதையை மனதில் உருவாக்கி வைத்திருந்தார்.

இந்த சமயத்தில், ஆனந்தி பிலிம்ஸ் பட அதிபர் வேணு செட்டியார், மகேந்திரனைத் தேடி வந்தார். "படம் தயாரிக்கலாம் என்றிருக்கிறேன். ஒரு கதை சொல்'' என்று கேட்டார்.

"என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அண்ணன் - தங்கச்சி கதை'' என்றார், மகேந்திரன்.

உடனே, வேணு செட்டியார் மகிழ்ந்து போனார். மீண்டும் ஒரு பாசமலர் கதையை மகேந்திரன் உருவாக்கி விடுவார் என்று எண்ணி, "இது போதும். மேற்கொண்டு கதை எதுவும் சொல்ல வேண்டாம். படத்தை நீயே டைரக்ட் செய்!'' என்று கூறினார்.

அதன் பின்னர் நடந்தது பற்றி மகேந்திரன் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

"அண்ணன் காரெக்டருக்கு யாரைப் போடலாம்?'' என்று உற்சாகமாக கேட்டார், வேணு செட்டியார்.

"ரஜினிகாந்த்'' என்றேன். அவர் முகம் கறுத்துவிட்டது.

"என்ன விளையாடுறியா? வில்லனா நடிக்கிற ஆளு! நல்ல கருப்பு வேற! வேணவே வேணாம். வேறே யாரையாச்சும் சொல்லு'' என்றார்.

"இதுலே எந்த மாற்றமும் இல்லை. காளி காரெக்டருக்கு அவர்தான் நூறு சதவிகிதம் பொருத்தமாக இருப்பார். வேறு எந்த நடிகரையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை'' என்று நான் உறுதியாகப் பதில் அளித்தேன்.

"உனக்கு ரஜினிகாந்த் நெருக்கமான நண்பர் என்பதால் இப்படி அடம் பிடிக்கிறாயா?'' என்று செட்டியார் கேட்டார்.

அவர் அப்படிக் கேட்டதில் தப்பில்லை. எங்கள் இருவரின் நட்பு எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால், எங்கள் நட்பு காரணமாகவா `முள்ளும் மலரும்' படக்கதையின் முக்கிய கதாபாத்திரமான அந்த அண்ணன் `காளி' வேடத்தில் ரஜினிதான் நடித்தாக வேண்டும் என்று உறுதியாய் நின்றேன்? இல்லை.

அவருக்குள்ளிருந்த அற்புதமான குணச்சித்திர நடிகனுக்குரிய ஆற்றலை நான் தெரிந்து வைத்திருந்தேன். அவர் எனது நண்பராய் இல்லாதிருந்தாலும் கூட அவரைத்தான் அந்தக் `காளி' பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பேன் என்பதே உண்மை.

நான் தீர்மானமானத்தோடு "அவர்தான். அவரேதான் நடிக்க வேண்டும்'' என்று பிடிவாதமாய் நின்றேன். "முதலில் ஒரு டைரக்டருக்கு வேண்டியது முழுமையான சுதந்திரம். அதையே மறுக்கிற நீங்கள், என்னை டைரக்டராக நினைத்திருக்க வேண்டாமே. இந்த மாதிரியான டைரக்டர் ஸ்தானம் எனக்கு வேண்டவே வேண்டாம்'' என்று என் முடிவை தெளிவாகச் சொன்னேன்.

இறுதியில் செட்டியார் சம்மதித்தார்.

இருவரும் சென்று நண்பர் ரஜினியைப் பார்த்தோம். நான் முதன் முதலாக படம் இயக்கப் போகிறேன் என்று அறிந்து மனம் மகிழ்ந்த ரஜினி, அவர்தான் படத்தின் `ஹீரோ' என்று சொன்னதும், "எப்படி... எப்படி... அந்தக் காரெக்டர் எப்படி?'' என்று பரபரவென ஆர்வமாகிவிட்டார்.

செட்டியாரை வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் அவரிடம் `முள்ளும் மலரும்' திரைக்கதையை முழுமையாகச் சொன்னேன். அவருக்குள் அப்பொழுதே அந்த `காளி' பிரவேசித்து விட்டான்.

பிறகு நான் மனதில் உருவகப்படுத்தியிருந்தபடியே இதர கதாபாத்திரங்களுக்காக ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு எல்லோரும் கிடைத்தார்கள்.

கர்நாடகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றி அலைந்து, `சிருங்கேரி' என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்த தீர்மானித்தோம்.

உச்சகட்டம்

படத்தின் இறுதிக்கட்டம்- உச்சகட்டம் - அண்ணனை விட்டுப் பிரிந்து தன்னை மணக்கப்போகும் என்ஜினீயரோடு செல்லும் வள்ளி, அண்ணன் காளியிடமே மீண்டும் ஓடி வருவாள். கட்டிப்பிடித்து அழுவாள். "எனக்கு நீதான் முக்கியம்'' என்பதைத் தனது அழுகையாலே உணர்த்துவாள்.

அண்ணன் காளிக்கு (ரஜினிகாந்த்) பெருமை பிடிபடாது. தங்கையை அழைத்துக்கொண்டு மணமகனிடம் (சரத்பாபு) வருவார். உலகத்தில் அண்ணனே தனக்கு எல்லாம் என தன் தங்கை நிரூபித்து விட்ட மகிழ்ச்சியைக் கூறுவார். "இப்ப என் தங்கச்சியை உங்களுக்கு மனைவியாக்க நான் சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலே சார்...'' என்பார். அதுதான் காளியின் விசேஷ குணாதிசயம்.

வழக்கமான தமிழ் சினிமாக்களில் `காளி' போன்ற காரெக்டர் கடைசியில் என்ஜினீயரிடம் சமரசமாய்ப் போய்விடுவது போலக் காட்டிவிடுவார்கள். இங்கேயோ தங்கையை மணக்கப்போகிறவனைப் பார்த்து, கடைசியில் கூட "இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலே சார்'' என்கிறான்.

சரத்பாபுவை காணோம்!

இந்தக் காட்சியை படமாக்கும்போது, திடீரென சரத்பாபு காணாமல் போய்விட்டார். கடைசியில் அவரை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து இழுத்து வந்தார் தயாரிப்பாளர். "அது எப்படி, இப்பக்கூட என்னைப் பிடிக்கலைன்னு இந்த ஆள் சொல்லலாம்?'' என்று என்னிடம் சரத்பாபு கோபப்பட்டபோது நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்: "சரத்... கதைப்படி, காட்சிப்படி காளி என்கிற காரெக்டர்தான் என்ஜினீயரை வெறுக்கிறான் இப்படிக் கடைசி வரைக்கும். ஆனா, காளியா நடிக்கிற ரஜினிகாந்த் என்ஜினீயரா நடிக்கிற சரத்பாபுவை வெறுக்கலே!'' என்று விளக்கிய பிறகுதான், அவருக்கு "சினிமா வேறு, வாழ்க்கை வேறு'' என்று புரிந்தது.

சரத்பாபு தனிப்பட்ட முறையில் ஒரு அற்புதமான மனிதர். அவரை `ஜென்டில்மேன்' என்றுதான் குறிப்பிடுவேன். `முள்ளும் மலரும்' அவருக்கு ஆரம்பகட்டம். குழந்தைபோல நடந்து கொண்டார்.

பட அதிபர் ஆவேசம்



படம் தயாராகி முடிந்தது. அதன் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பட அதிபர் வேணு செட்டியார், என்னைப் பார்த்ததும், "அடப்பாவி! என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே! படத்துலே வசனமே இல்லை. அங்கே ஒண்ணு, இங்கே ஒண்ணு வருது! படமா எடுத்திருக்கே!'' என்று என்னை ஆவேசமாய்த் திட்டித் தீர்த்து விட்டுப் போய்விட்டார்.

நான் சிறிதும் கோபப்படவில்லை. அவர் வழக்கமான கமர்ஷியல் புரொடிïசர். அவர் எதிர்பார்த்தது, வழக்கமான சினிமா நாடக பாணி வசனம். குறைந்த வசனங்களை நான் எழுதியிருந்ததால் அவருக்கு அப்படி கோபம் வந்தது.

இளையராஜா முதன் முதலாக பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் "முள்ளும் மலரும்.''

படம் வெளியானது. முதல் மூன்று வாரங்கள் படம் பார்த்தவர்கள் மவுனமாகவே கலைந்து சென்றார்கள். செட்டியாரோ "படம் அவ்வளவுதான். நம்ப கதை முடிஞ்சு போச்சு!'' என்றார்.

நானும் நண்பர் ரஜினியும் பதை பதைக்கிறோம்... "இந்தப் பரீட்சார்த்த திரைக்கதை மக்களிடம் ஜெயிக்க வேண்டுமே'' என்ற ஏக்கம் எனக்கு. தனது குணச்சித்திர நடிப்பிற்கு, இந்தப்படம் திருப்புமுனையாக அமைய வேண்டுமே என்ற ஆதங்கம் ரஜினிக்கு.

"படத்திற்கு இன்னும் நன்றாய் பப்ளிசிட்டி பண்ணுங்கள்'' என்று செட்டியாரிடம் மன்றாடினோம். "ஓடாத படத்திற்கும் பப்ளிசிட்டி தேவை இல்லை; ஓடுகிற படத்திற்கும் பப்ளிசிட்டி தேவை இல்லை... அது தெரியுமா, உங்களுக்கு?'' என்றார் செட்டியார்.

அப்புறம் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. நான்காவது வாரத்திலிருந்து தியேட்டரில் திரண்டது கூட்டம். ஆரவாரம்... கைதட்டல், பிளாக்கில் டிக்கெட்... பாராட்டு மழை... நூறாவது நாள் வரை ஓயவில்லை.

படத்தின் வெற்றியைக் கண்ட வேணு செட்டியார் நான்காவது வாரமே என் வீட்டிற்கு வந்தார். "மகேந்திரா! உன்கிட்டே நான் கோபப்பட்டதுக்கு என்னை மன்னிச்சிருப்பா. இந்தா பிளாங்க் செக். எவ்வளவு தொகை வேணுமானாலும் எழுதிக்கொள்'' என்று செக்கை நீட்டினார்.

நான் அன்போடும், நன்றியோடும் மறுத்து, "இப்படி ஒரு வித்தியாசமான படம் இயக்கும் வாய்ப்பைத் தந்ததே பல்லாயிரம் கோடிகளுக்குச் சமம். இந்த செக்கை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறினேன்.

"முள்ளும் மலரும்'' படத்தை, பத்திரிகைகள் அனைத்தும் முழு மனதோடு பாராட்டின. "சினிமா என்பது செவிக்கு விருந்தளிப்பதல்ல. கண்ணுக்கு விருந்தளிப்பது என்பதை நிரூபித்த தமிழ்ப்படம்'' என்று விமர்சித்தன.''

இவ்வாறு மகேந்திரன் கூறியுள்ளார்.

தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்''
தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்


மகேந்திரன் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த "முள்ளும் மலரும்'' படம் மிகச்சிறந்த படமாகவும் மாபெரும் வெற்றிப் படமாகவும்

அமைந்தது.ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்துக்குப்பிறகு, துரை டைரக்ஷனில் "சதுரங்கம்'' படத்தில் ரஜினி நடித்தார். இதில் அவருக்கு புதுமையான வேடம். பெண்களைக் கண்டாலே கூச்சப்படும் சுபாவம். அதே சமயம் குடும்ப கவுரவத்தை கட்டிக்காக்கும் நல்லவர்.



இப்படத்தில் ரஜினிக்கு ஜோடி பிரமிளா.

ஸ்ரீகாந்தும், ஜெயசித்ராவும் இன்னொரு ஜோடி.

கதை-வசனத்தை விசு எழுதினார்.

30-6-1978-ல் வெளிவந்த இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது.

வணக்கத்துக்குரிய காதலியே

ரஜினியின் அடுத்த படம் "வணக்கத்துக்குரிய காதலியே.'' டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய படம்.

எழுத்தாளர் ராஜேந்திரகுமார் எழுதிய நாவல்தான், அதே பெயரில் படமாகியது. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார்.

விஜயகுமார், ஸ்ரீதேவி பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

14-7-1978-ல் வெளிவந்த இப்படம், நடுத்தரமாக ஓடியது.

முள்ளும் மலரும்

இதன்பின் 1978 சுதந்திர தினத்தன்று வெளிவந்த "முள்ளும் மலரும்'', மெகா ஹிட் படமாக அமைந்தது.

அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சிவாஜியும், சாவித்திரியும் நடித்த "பாசமலர்'' எப்படி ஒரு வாடா மலராக விளங்குகிறதோ, அதேபோல ரஜினியும், ஷோபாவுமë நடித்த "முள்ளும் மலரும்'' ஒரு குறிஞ்சி மலராக போற்றப்படுகிறது.

நாவல் போட்டி ஒன்றில், எழுத்தாளர் உமா சந்திரன் எழுதி முதல் பரிசு பெற்றதுதான் "முள்ளும் மலரும்.'' அதற்கு திரைக்கதை - வசனம் எழுதி இயக்கினார், "தங்கப்பதக்கம்'' புகழ் மகேந்திரன்.



கதை இதுதான்:

இளமையிலேயே தாய் - தந்தையரை இழந்த ரஜினி, கழைக் கூத்தாடியாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் `டிராலி' டிரைவராக உயர்கிறார்.

அவருடைய ஒரே தங்கை ஷோபா. தங்கை மீது உயிரையே வைத்திருக்கிறார், ரஜினி.

அந்த ஊருக்கு புதிதாக வரும் என்ஜினீயர் (சரத்பாபு), கண்டிப்பானவர். அவர், ரஜினியை வேலையை விட்டு நீக்கி விடுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் ரஜினி, அளவுக்கு மீறி குடிக்கிறார். அதனால், விபத்தில் சிக்கி, ஒரு கையை இழக்கிறார்.

ரஜினியிடம் அடைக்கலம் தேடி வரும் `படாபட்' ஜெயலட்சுமி, அவரை மணக்கிறார்.

இதற்கிடையே சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் காதல் ஏற்படுகிறது. சரத்பாபுவை தன் எதிரியாக நினைக்கும் ரஜினி, இந்தக் காதலை ஏற்கவில்லை. வேறு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்.

திருப்பம்

அண்ணன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தாலும், சரத்பாபுவை மணக்க தீர்மானிக்கிறார், ஷோபா.

சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருக்கிறது.

கல்யாணத்துக்கு சில நிமிடங்களே இருக்கும்போது, ஷோபா மனம் மாறி ரஜினியிடம் ஓடி வருவார். "அண்ணா! நீதான் எனக்கு வேண்டுமë'' என்று கதறுவார்.

தங்கை தன் மீது கொண்டிருக்கும் ஆழமான பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போவார், ரஜினி.

சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் திருமணத்தை நடத்தி வைப்பார்.

அற்புத நடிப்பு

இந்தப்படத்தில் ரஜினியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. "சூப்பர் ஸ்டார்'' பட்டத்துக்கு ஏற்ப, காளி என்ற கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டினார்.

ஷோபாவின் நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்தது.

சரத்பாபு, `படாபட்' ஜெயலட்சுமி ஆகியோரும், பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.

பாலசந்தர் பாராட்டு

"முள்ளும் மலரும்'' படத்தில் ரஜினியின் நடிப்பைப் பார்த்த டைரக்டர் பாலசந்தர் பிரமித்துப்போனார்.

உடனடியாக ரஜினிக்கு பாராட்டுக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தை ஒரு பொக்கிஷமாக இன்றும் பாதுகாத்து வருகிறார், ரஜினி.



மகத்தான வெற்றி

மகேந்திரன், ஏற்கனவே சிவாஜியின் "தங்கப்பதக்கம்'' படத்துக்கு வசனம் எழுதியிருந்தாலும், டைரக்ட் செய்த முதல் படம் "முள்ளும்

மலரும்.''இந்தப்படம், தரத்தில் மிக உயர்ந்ததாக விளங்கியது. வெள்ளி விழாப் படமாகவும் அமைந்தது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. படப்பிடிப்பு, மேல்நாட்டுப்படங்களுக்கு இணையாக விளங்கியது.

இசை அமைத்தவர் இளையராஜா. கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.

"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்'', "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு'', "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....'' உள்பட எல்லாப் பாடல்களும் இனிமையாக ஒலித்தன.

"முள்ளும் மலரும்'', பல பரிசுகளை வென்றது. "காலத்தால் அழிக்க முடியாத காவியம்'' என்று ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் போற்றப்படும் படங்களில் ஒன்று "முள்ளும் மலரும்.''
ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது'
ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்


ஸ்ரீதர் டைரக்ஷனில் ரஜினிகாந்தும், கமலஹாசனும் இணைந்து நடித்த "இளமை ஊஞ்சலாடுகிறது'' வெள்ளி விழா படமாக அமைந்தது.

ஒவ்வொரு படத்திலும், வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் நடித்து வந்த ரஜினிகாந்தையும், நடிப்பில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருந்த கமலஹாசனையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க ஸ்ரீதர் முடிவு செய்தார். அவர்கள் இருவருக்கும் சமமான வாய்ப்பு தர விரும்பி, அதற்கேற்றபடி கதையை அமைத்தார். அதுதான் "இளமை ஊஞ்சலாடுகிறது.''



விறுவிறுப்பான கதை

எதிர்பாராத திருப்பங்களும், உணர்ச்சி மயமான சம்பவங்களும் நிறைந்த கதை.

ரஜினிகாந்த் பெரிய தொழில் அதிபர். அனாதையான கமலஹாசனை தன் உடன்பிறவா சகோதரனாக கருதுகிறார். தன் தொழிற்சாலையின் ஜெனரல் மானேஜராக நியமிக்கிறார்.

ஆபீசுக்குள்தான் அவர்களுக்குள் முதலாளி - மானேஜர் உறவு. வெளியே, "போடா, வாடா'' என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு

நட்பு.கமலஹாசனின் காதலி ஸ்ரீபிரியா. இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள்.

ஸ்ரீபிரியாவின் தோழி ஜெயசித்ரா விதவை. அவர் கமலஹாசன் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். மனதுக்குள் கமலை எண்ணி

ஏங்குகிறார்.ஸ்ரீபிரியாவும், ஜெயசித்ராவும் கிராமத்துக்கு செல்கிறார்கள். ஒரு நாள் திருவிழா பார்க்க அடுத்த கிராமத்துக்கு ஸ்ரீபிரியா செல்கிறார். வீட்டில் ஜெயசித்ரா மட்டும் தனியாக இருக்கிறார்.

ஸ்ரீபிரியாவை பார்க்க வரும் கமல், அன்றிரவு ஜெயசித்ராவுடன் தங்க நேரிடுகிறது.

தனிமை இருவரையும் சலனப்படுத்துகிறது. ஜெயசித்ராவின் இளமை, கமலின் மனதை ஊஞ்சலாடச் செய்கிறது. இருவரும் தங்களை மறந்து ஐக்கியமாகிறார்கள்.

பொழுது விடியும் வேளையில், கமலஹாசனை மனச்சாட்சி உறுத்துகிறது. "என்னை மன்னித்து விடு'' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறுகிறார்.



வெளிïர் சென்றிருந்த ஸ்ரீபிரியா, திரும்பி வருகிறார். ஜெயசித்ரா தூங்கிக் கொண்டிருப்பதையும், அவர் அருகே ஒரு கடிதம் இருப்பதையும் பார்க்கிறார்.

கடிதத்தைப் படிக்கும் அவர் மனம் எரிமலையாகிறது. கமல் தனக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணிக் குமுறுகிறார். ரஜினியை மணக்க சம்மதிக்கிறார். நிச்சயதார்த்தமும் நடைபெறுகிறது.

இந்த சமயத்தில், ஜெயசித்ராவிடம் இருந்து ஸ்ரீபிரியாவுக்கு ஒரு கடிதம் வருகிறது. தான் கர்ப்பமாக இருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

கமலை ஸ்ரீபிரியா சந்தித்து, ஜெயசித்ராவை மணந்து கொண்டு அவருக்கு வாழ்வு அளிக்கும்படியும், செய்த பாவத்துக்கு அதுதான் பிராயச்சித்தம் என்றும் கூறுகிறார்.

அதன்படி கமல் பெங்களூருக்கு சென்று, ஒரு விபத்தில் சிக்கி மரணப்படுக்கையில் இருக்கும் ஜெயசித்ராவை சந்திக்கிறார். தாலி கட்டி மனைவியாக ஏற்கிறார். சுமங்கலியாகி விட்ட மகிழ்ச்சியுடன், ஜெயசித்ரா உயிர் துறக்கிறார்.

எதிர்பாராத `கிளைமாக்ஸ்'

இதன் பிறகு கமலும், ஸ்ரீபிரியாவும் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ரஜினி அங்கு வருகிறார். கமல் மீது சந்தேகப்பட்டு, ஆவேசத்துடன் தாக்குகிறார்.

நடந்த உண்மைகளை ஸ்ரீபிரியா வெளிப்படுத்துகிறார். கமலும், ஸ்ரீபிரியாவும் முன்னாள் காதலர்கள் என்பதை அறியும் ரஜினி, அவர்கள் இருவரையும் இணைத்து வைக்கிறார்.

வெள்ளி விழா



9-6-1978-ல் வெளியான இந்தப்படம், 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

பாரதிராஜாவின் "16 வயதினிலே'' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நிவாஸ், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

இளையராஜா இசை அமைப்பில் பாடல்கள் எல்லாம் `ஹிட்' ஆயின.

கமல், ரஜினி இருவரும் பொருத்தமான வேடங்களில், போட்டி போட்டு நடித்தனர்.

ஸ்ரீதர் தன் முத்திரையை முழுமையாகப் பதித்திருந்தார்.

ரஜினியும், கமலும் இணைந்து நடித்த படங்களில் மறக்க முடியாத படம் "இளமை ஊஞ்சலாடுகிறது.''

"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!''

"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!''
ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்'' என்று ரஜினிகாந்த் கூறினார். ஆனால் ரசிகர்கள் விடாப்பிடியாக `சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கவே, அவர் பெயருடன் அந்தப் பட்டம் இரண்டறக் கலந்து விட்டது.

ரஜினிகாந்த் முழுக் கதாநாயகனாக நடித்த முதல் படம் "பைரவி.'' இதை கலைஞானம் தயாரித்தார்.

"கலைப்புலி'' தாணு

இப்போது பிரபல பட அதிபராக விளங்கும் "கலைப்புலி'' தாணு அந்தக் காலக் கட்டத்தில் எஸ்.தாணு என்ற பெயரில், திரைப்பட விநியோகஸ்தராக விளங்கினார்.



"பைரவி'' படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அவர் பெற்றிருந்தார்.

அண்ணா சாலையில் "பைரவி'' படம் திரையிடப்பட்ட பிளாசா தியேட்டரில், ரஜினியின் 35 அடி உயர `கட் அவுட்' வைத்தார். தியேட்டர் உயரத்துக்கு மேலே, அந்த `கட் அவுட்' நிமிர்ந்து நின்றது.

இத்துடன் 3 விதமான போஸ்டர்களை அச்சடித்து, சென்னை நகரம் முழுவதும் ஒட்டினார். அதில், படமெடுத்தாடும் நல்ல பாம்பை கையில் பிடித்தபடி ரஜினி தோன்றும் போஸ்டர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

சூப்பர் ஸ்டார்

போஸ்டர்களில் ரஜினிகாந்தை `சூப்பர் ஸ்டார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஜினிகாந்த் முதன் முதலாக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டது அப்போதுதான்.

அதன்பிறகு நடந்த நிகழ்ச்சிகள் பற்றி தாணு கூறியதாவது:-

"ரஜினியின் நடிப்பு, அவருக்கே உரித்தான ஸ்டைல் எல் லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனவே, அவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த "பைரவி'' படத்தின் விநியோக உரிமையை வாங்க விரும்பினேன். எஸ்.மகாலிங்கம், ஆர்.பி.ஜெயகுமார் என்ற 2 நண்பர்களை பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டு, பைரவி படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை வாங்கினேன்.



படத்தை பொதுமக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள, ராஜகுமாரி தியேட்டருக்கு பகல் காட்சிக்கு ரஜினி வந்தார். அவருடன் கலைஞானம், பஞ்சு அருணாசலம், கே.என்.சுப்பு ஆகியோரும் வந்தார்கள்.

போஸ்டர்களை ரஜினி பார்த்தார். `சென்னை நகர டிஸ்டிரிபிïட்டர் யார்?' என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டார். சிலர் என்னிடம் வந்து, `ரஜினி சார் உங்களை பார்க்க விரும்புகிறார்' என்றார்கள்.

நான் ரஜினியிடம் சென்றேன். `பென்டாஸ்டிக் போஸ்டர்! பிïட்டிபுல் பப்ளிசிட்டி' என்று என் கையைப் பிடித்துக் குலுக்கினார். நான் மகிழ்ந்து போனேன்.



பிளாசா டாக்கீசில் வைத்திருந்த பெரிய `கட் அவுட்'டையும் அவர் பார்த்தார். அதன் பிறகு அவரை நான் சந்தித்தபோது, `உங்கள் விளம்பரங்கள் எனக்குள் ஒருவித வைப்ரேஷன் (அதிர்வுகள்) உண்டாக்குகின்றன' என்றார்.

"பட்டம் வேண்டாம்''

இதன்பின் பட அதிபர் கலைஞானம், டைரக்டர் எம்.பாஸ்கர் இருவரும் என்னை ஒரு நாள் வந்து பார்த்தார்கள்.

"ரஜினி அனுப்பி, உங்களை வந்து பார்க்கிறோம். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகிய மூத்த கலைஞர்கள் இருக்கும்போது, தன்னை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதை ரஜினி விரும்பவில்லை. அப்படி விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிடச் சொன்னார்'' என்றார்கள்.

ஆனால், இதற்குள் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பிரபலமாகி விட்டது. ரஜினியை பார்க்கும்போதெல்லாம் ரசிகர்கள் `சூப்பர் ஸ்டார்' என்று குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

எனவே, நான் துணிந்து `கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்தேன்.



தன்னடக்கத்தின் காரணமாக, தன்னை `சூப்பர் ஸ்டார்' என்று அழைக்க வேண்டாம் என்று ரஜினி கூறினார். என்றாலும், ரசிகர்கள் மத்தியில் `சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் நிலைத்து விட்டது.

`நடிகர் திலகம்' என்றால் அது சிவாஜிகணேசன் ஒருவரை மட்டும் குறிப்பிடுவது மாதிரி, `சூப்பர் ஸ்டார்' என்றால் அது ரஜினி ஒருவரை மட்டும் குறிப்பிடும் சொல்லாகிவிட்டது.''

இவ்வாறு தாணு கூறினார்.

ரஜினிகாந்த் ஆரம்பத்தில் "ஸ்டைல் மன்னன்'' என்று அழைக்கப்பட்டார். "பைரவி'' படத்துக்குப்பின், "சூப்பர் ஸ்டார்'' என்றே குறிப்பிடப்படுகிறார்.

கதாநாயகனாக நடித்த முதல் படம்

கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி''
கலைஞானம் தயாரித்த படம்



ரஜினியின் கலைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படம் "பைரவி''. அதுவரை பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினி நடித்திருந்தாலும், தனி ஹீரோவாக நடித்த முதல் படம் "பைரவி''. கலைஞானம் கதை எழுதி, வள்ளிவேலன் மூவிஸ் சார்பில் தயாரித்த படம்.

வசனத்தை மதுரை திருமாறன் எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எம்.பாஸ்கர் டைரக்ட் செய்தார். பாடல்களை கண்ணதாசனும், சிதம்பரநாதனும் எழுதினர்.

ரஜினியுடன் ஸ்ரீபிரியா, ஸ்ரீகாந்த், சுருளிராஜன், மனோரமா, ஒய்.விஜயா நடித்தனர்.

கலைஞானம் பேட்டி

ரஜினிகாந்துடன் ஏற்பட்ட அனுபவம் பற்றி கலைஞானம் கூறியதாவது:-

"நான் `ஆறுபுஷ்பங்கள்' படத்துக்கு கதை-வசனம் எழுதிக்கொண்டிருந்தபோது, தயாரிப்பாளரும், டைரக்டர் கே.எம்.பாலகிருஷ்ணனும் எனக்கு ஒரு கண்டிஷன் போட்டார்கள். படம் எடுத்து முடியும்வரை கூடவே இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

அதற்கு ஒப்புக்கொண்டேன். இதனால் ஷூட்டிங் நடைபெறும்போதெல்லாம் நானும், ரஜினிகாந்த் அவர்களும் நெருக்கமாக பழக நேர்ந்தது. இரண்டாவது ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்தார்.

நீண்ட வசனம் பேசும்போதெல்லாம் அவர் சற்று சிரமப்படுவது எனக்கு தெரியவந்தது. வசனத்தை வாங்கி, சற்று குறைக்க முற்படுவேன். அப்போது ரஜினிகாந்த் "கலைஞானம் சார்! எப்படியும் பேசிவிடுவேன். வசனத்தை குறைக்க வேண்டாம்!'' என்பார்.

அதே போல தனியாக அமர்ந்து பலமுறை பேசிப்பேசி பழகி, ஒரே டேக்கில் "ஓகே'' செய்து விடுவார்.

`முடியாது' என்பதே அவருடைய அகராதியில் இல்லை.

ஹீரோ

ரஜினியின் வித்தியாசமான நடிப்பைப் பார்த்து என் மனதுக்குள்ளேயே ஒரு திட்டம் போட்டேன். `ரஜினியை ஹீரோவாக போட்டு நாம் ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது?' என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அந்த எண்ணம் ஒரு நாள் நிறைவேறியது. அதுதான் அவர் முதல் முறையாக ஹீரோவாக நடித்த "பைரவி.''

ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று, "நான் முதன் முறையாக தயாரிக்க இருக்கும் படத்தில், நீங்கள்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்றேன். அவர் மகிழ்ச்சி அடைந்தார். `கதை என்ன?' என்று கேட்டார். உடனே கதையை சொன்னேன்.



அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. "நாளைக்கு வந்து அட்வான்ஸ் கொடுக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

மறுநாள் எப்படியோ சமாளித்து ரூ.5 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தேன். அவர் அதைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கோடு, என் கையைப் பிடித்து குலுக்கினார். உடனடியாக அவருடைய நண்பர் நடராஜ் அவர்களை அழைத்து, "கலைஞானம் சார் கேட்கிற தேதிகளை குறித்துக்கொள்ளுங்கள்'' என்றார். அதன்படி நடராஜ் கால்ஷீட் தேதிகள் கொடுத்தார்.

அதன் பிறகு ஸ்ரீபிரியாவிடமும் கால்ஷீட் வாங்கி இருவர் பெயர்களையும் குறிப்பிட்டு, வியாபாரமë செய்து முடித்தேன்.

பூஜைக்கு முன்பே வியாபாரம்

இதில் அதிசயம் என்னவென்றால், பூஜைக்கு முன்பே விநியோகஸ்தர்களிடம் கதை சொல்லியே வியாபாரம் செய்து விட்டேன்.

முதலில் இளையராஜா இசையில் பாடல் பதிவு நடந்தது. முதல் பாடல், `நண்டூறுது, நரிïறுது' என்ற பாடல். அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார்.

ஏதோ ஒரு படப்பிடிப்பிலிருந்த ரஜினி, இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே ஏவி.எம்.ஸ்டூடியோவுக்கு வந்தார். டி.எம்.சவுந்தரராஜன் பாடுவதை கேட்டு மெய்மறந்து என் கையை பிடித்துக்கொண்டு, "கலைஞானம் சார்! டி.எம்.எஸ். பாடி, அதை படத்தில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை!'' என்று பெருமகிழ்ச்சியுடன் கூறினார்.

1978 ஜனவரி 14-ந்தேதி படப்பிடிப்பு ஆரம்பமானது. அவருடைய ஷாட் முடிந்ததும் எங்கேயாவது ஒரு மூலையில் தூசியாக இருந்தாலும், கிழிந்த சோபாவாக இருந்தாலும் போய் படுத்துக்கொள்வார். அவரிடம் பந்தா கிடையாது. தனக்கு இன்ன இன்ன வசதி வேண்டும் என்று கேட்கமாட்டார். சாப்பாடு என்ன கொடுத்தாலும் சந்தோஷமாக சாப்பிடுவார்.

சதா சிந்தித்துக்கொண்டே இருப்பார். `ஹீரோவாக நடிக்கிறோம். இதில் எப்படியும் வெற்றி பெறவேண்டும்' என்பதே அந்த சிந்தனை. அனாவசியமாக பேசமாட்டார். பேசினாலும் இரண்டே வார்த்தைகள்தான்.

பாராட்டு குவிந்தது

1978 ஜுன் 2-ந்தேதி படம் வெளியானது. ராஜகுமாரி தியேட்டரில் மாட்னி ஷோ. பத்திரிகையாளர்களையும் அழைத்துப் பார்க்க வைத்தேன். இடைவேளையில் ரஜினிகாந்த் வந்தார். பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் அவரை வானளாவப் பாராட்டினார்கள்.

நானும், டைரக்டர் எம்.பாஸ்கரும் ஒரு ஓரத்தில் நின்று, இதையெல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம்.

பட அதிபர் சின்னப்பதேவர் என்னைப் பாராட்டியதோடு, `எப்படியாவது ரஜினிகாந்திடம் சொல்லி என் கம்பெனி படத்தில் நடிக்கச் செய்' என்றார்.



`நீங்களே அவருக்குப் போன் செய்யுங்கள்' என்றேன். அதேபோல், தேவர் கம்பெனி போன் ரஜினிகாந்த் வீட்டில் ஒலித்த ஐந்து நிமிடத்தில் தேவரை வந்து பார்த்து, அவரிடம் ஆசி பெற்றார். தேவர், ரஜினியை மிகவும் பாராட்டி, "இரண்டு படம் எனக்கு செய்து கொடுங்கள்'' என்று கூறி அட்வான்ஸ் கொடுத்தார்.

நாளுக்கு நாள் புகழ், பொருள் அனைத்திலும் பெரும் வளர்ச்சி கண்ட ரஜினி, தர்ம சிந்தனையிலும் வளர்ச்சி பெற்று வருகிறார். `வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது' என்பார்கள். ரஜினிகாந்த் கொடுக்கும் தர்மம், இரண்டு கைகளுக்குமே தெரியாது.

`உதவி' என்று யாராவது கேட்டால், கேட்டவர் வீட்டிற்கு உதவி வந்து சேரும்.

சிறு வயதில், அவர் பட்ட கஷ்டங்கள் கணக்கில் அடங்காது. அதுவே அவரை பக்குவப்படுத்தி, அவரை கருணை உள்ளத்தோடும், மனித நேயத்தோடும் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.''

இவ்வாறு கலைஞானம் கூறினார்.

இரவு - பகலாக நடித்தார்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்!
இரவு - பகலாக நடித்தார்




1978-ல் ரஜினிகாந்த் மிக `பிசி'யாக இருந்தார். இரவு - பகலாக ஓய்வில்லாமல் நடித்தார். காலையில் விமானம் மூலம் பெங்களூர் சென்று படத்தில் நடித்துவிட்டு, மாலையில் விமானம் மூலம் சென்னை திரும்பி, தொடர்ந்து படத்தில் நடித்தார்.

1978-ல், ரஜினி நடித்து வெளிவந்த படங்கள் 20. அவற்றின் விவரம்:-

1. சங்கர் சலீம் சைமன்

2. கில்லாடி கிட்டு (கன்னடம்)

3. அன்னதம்முல சவால் (தெலுங்கு)

4. ஆயிரம் ஜென்மங்கள்

5. மாத்து தப்பித மகா (கன்னடம்)

6. மாங்குடி மைனர்

7. பைரவி

8. இளமை ஊஞ்சலாடுகிறது

9. சதுரங்கம்

10.வணக்கத்துக்குரிய காதலியே

11. வயது பிலிசிந்தி (தெலுங்கு)

12. முள்ளும் மலரும்

13. இறைவன் கொடுத்த வரம்

14. தப்புத்தாளங்கள்

15. தப்பித தாளா (கன்னடம்)

16. அவள் அப்படித்தான்

17. தாய் மீது சத்தியம்

18. என்கேள்விக்கென்ன பதில்

19. ஜஸ்டிஸ் கோபிநாத்

20. ப்ரியா

மாங்குடி மைனர்

10-3-1978-ல் வெளிவந்த "ஆயிரம் ஜென்மங்கள்'' படத்துக்குப் பிறகு வெளிவந்த ரஜினியின் படம் "மாங்குடி மைனர்.''

ஆயா கிரியேஷன்ஸ் தயாரிப்பான இந்தப் படத்தின் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை வி.சி.குகநாதன் ஏற்றிருந்தார்.



இதில் கதாநாயகனாக - எம்.ஜி.ஆர். ரசிகனாக - விஜயகுமார் நடித்தார். ரஜினி முக்கிய வேடத்தில் நடித்தார். மற்றும் ஸ்ரீபிரியா, எம்.என்.ராஜம், சகுந்தலா ஆகியோர் நடித்தனர்.

குகநாதன் அனுபவம்

இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி டைரக்டர் குகநாதன் கூறியதாவது:-

"இந்தியில் வெளியான `ராம்பூர்-கா-லட்சுமண்' என்ற படத்தை பார்த்தேன். அதில் சத்ருகன் சின்கா புதுமாதிரியாக நடித்திருந்தார். அந்தக் கதையைத் தமிழில் தயாரித்து, அதில் ரஜினி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினோம்.

அதன்படி, அந்தக் கதையை வாங்கி, "மாங்குடி மைனர்'' என்ற பெயரில் தயாரித்தோம்.

அதுவரை வில்லனாகவும், ஆன்டி ஹீரோவாகவும் நடித்து வந்த ரஜினி, முதன் முதலாக ஆக்ஷன் வேடத்தில் நடித்தார்.

இரவு பகலாக நடித்தார்

இந்த காலக்கட்டத்தில் ஏராளமான படங்களில் ரஜினி நடித்து வந்தார்.

எங்களுக்கு 17 நாட்கள் `கால்ஷீட்' கொடுத்திருந்தார். அதில் 8 நாட்களை மற்ற படங்களுக்கு ஒதுக்க நேர்ந்தது. எங்களுக்கு கிடைத்தது 9 நாட்கள்தான்.

ரஜினி, சிரமம் பாராமல் இரவு பகலாக நடித்தார். அப்போது `மாங்குடி மைனர்' படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. காலை, விமானம் மூலமாக ஐதராபாத்துக்கு வருவார். பகல் முழுவதும் நடிப்பார். மாலை 7 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்குத் திரும்புவார். அங்கு இரவில் "இளமை ஊஞ்சலாடுகிறது'' படப்பிடிப்பு நடக்கும். அதில் விடிய விடிய நடிப்பார்.

எங்களுக்கு அவர் கொடுத்த 9 நாள் கால்ஷீட்டில், அவர் சம்பந்தப்பட்ட எல்லா காட்சிகளையும் நடித்துக் கொடுத்தார். பட அதிபர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, தன்னை வருத்திக்கொள்ள தயங்காதவர், ரஜினி''

இவ்வாறு குகநாதன் கூறினார்.



பிற மொழிகள்

முதன் முதலாக ரஜினி நடித்தது தமிழ்ப்படம் (அபூர்வ ராகங்கள்) என்றாலும், அவருடைய `ஸ்டைல்' தென்னாட்டு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளிலும் நடிக்கும்படி கேட்டு, பட அதிபர்கள் அவர் வீட்டில் முற்றுகையிட்டனர். யாருக்கு கால்ஷீட் கொடுப்பது என்று ரஜினி திணறினார்.

இந்தக் காலக்கட்டத்தில், இந்தியாவிலேயே மிகவும் `பிசி'யான நடிகர் ரஜினிதான்!

ரஜினியின் முதல் வண்ணப்படம்

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்'
ரஜினியின் முதல் வண்ணப்படம்



ரஜினி நடித்த "ஆயிரம் ஜென்மங்கள்'', முக்கியமான படம். அவர் நடித்த முதல் கலர்ப்படம் இதுதான்.

பல்லவி என்டர்பிரைசஸ் சார்பாக பட அதிபர் எம்.முத்துராமன் ("என்.வி.ஆர்''முத்து) தயாரித்த படம் இது. இதில் விஜயகுமார் - லதா ஜோடியாக நடித்தனர். லதாவின் அண்ணனாக ரஜினி நடித்தார்.

இது, ஆவிகள் பற்றிய கதை. மலையாளத்தில், ஷீலா டைரக்ஷனில் "யக்ஷ கானம்'' என்ற பெயரில் பத்திரிகையாளர் மதிஒளி சண்முகம் தயாரித்து வெற்றி கண்ட படம்.

தமிழ்ப்பதிப்புக்கு மதிஒளி சண்முகம் திரைக்கதை - வசனம் எழுத, துரை டைரக்ட் செய்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

புதுமையான கதை

இந்த படத்தின் கதை புதுமையானது.

விஜயகுமாரும், பத்மபிரியாவும் காதலர்கள். இருவருக்கும் திருமணம் நடைபெற சில நாட்கள் இருக்கும் தருணத்தில், பத்மபிரியாவை கற்பழிக்க வில்லன் முயற்சிக்கிறான். அவனிடமிருந்து தப்பி ஓடும்போது, நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறந்து போகிறார், பத்மபிரியா. அதன்பின் ஆவியாக அலைந்து கொண்டிருக்கிறார்.



சில ஆண்டுகளுக்குப்பின், விஜயகுமாருக்கும், லதாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

ஒரு சமயம் லதா தனியாக இருக்கும்போது, அவர் உடலுக்குள் பத்மபிரியாவின் ஆவி புகுந்து கொள்கிறது. லதா ஆவியாகத் திரிகிறார்.

விஜயகுமாரும், பத்மபிரியாவின் ஆவி புகுந்துள்ள லதாவும் தாம்பத்ய உறவு கொண்டால், அந்த ஆவி நிரந்தரமாக லதா உடலிலேயே தங்கி விடும்.

ரஜினி இதைத் தெரிந்து கொள்கிறார். லதாவின் உடலில் இருந்து பத்மபிரியாவின் ஆவியை வெளியேற்றி, மீண்டும் லதாவின் ஆவியை அதன் உடலுக்குள் புகச் செய்ய அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை வைத்து, கதை புதுமையாகவும், விறுவிறுப்பாகவும் பின்னப்பட்டு இருந்தது.

10-3-1978-ல் வெளியான இந்தப்படம், நூறு நாள் ஓடியது. மாறுபட்ட வேடத்தில் ரஜினி சிறப்பாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற "வெண்மேகமே'' என்ற பாடல் மிகப்பிரபலம்.

டைரக்டர் துரை அனுபவம்

ரஜினி நடித்த "ரகுபதி ராகவன் ராஜாராம்'', "ஆயிரம் ஜென்மங்கள்'', "சதுரங்கம்'' ஆகிய மூன்று படங்களை டைரக்ட் செய்தவர், துரை.



ரஜினியுடன் பழகியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, துரை கூறியதாவது:-

"என் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம் "ரகுபதி ராகவன் ராஜாராம்'' அண்ணன் தம்பிகள் மூவரை சுற்றிப் பின்னப்பட்ட கதை. கதாநாயகியின் முறை மாப்பிள்ளையான வீரய்யன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார்.

எஸ்டேட்டில் சைக்கிள் கடை வைத்திருந்த வீரய்யன், யார் வம்புக்கும் போகமாட்டான்; வந்த வம்பையும் விடமாட்டான்!

முறைப்பெண்ணை காதலிக்கும் வீரய்யன், அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதை அறிந்து, ஒதுங்கிக் கொள்வான்.

இந்த நிலையில், முறைப்பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்டான் என்பதை அறியும்போது துடித்துப்போவான். "உன்னைக் கெடுத்தவனை, உயிருடனோ, அல்லது பிணமாகவோ உன் காலடியில் போடும்வரை ஓயமாட்டேன்'' என்று சபதம் செய்துவிட்டு வெளியேறுவான். சொன்னது போலவே, வில்லனை கொன்று, பிணத்தை முறைப்பெண் முன் கொண்டு வந்து போட்டுவிட்டு போலீசில் சரண் அடைவான்.

ஆழியார் அணையில்

"ஆயிரம் ஜென்மங்கள்'' படப்பிடிப்பு ஆழியார் அணைப்பகுதியில் நடந்தது.

அங்கு மூன்று அறைகள்தான் இருந்தன. ஒரு அறை, கதாநாயகி லதாவுக்கு. இன்னொரு அறையில், விஜயகுமார் தங்கினார். மூன்றாவது அறை டைரக்டரான எனக்கும், ரஜினிக்கும் ஒதுக்கப்பட்டது.

அந்த அறையில் ஒரு கட்டில்தான். மற்றொருவருக்காக தரையில் `பெட்' விரிக்கப்பட்டிருந்தது.

"நீங்கள் கட்டிலில் படுத்துக்கொள்ளுங்கள். நான் தரையில் உள்ள படுக்கையில் படுத்துக் கொள்கிறேன்'' என்று கூறினேன்.

அதை ரஜினி ஏற்கவில்லை. "நீங்க கட்டிலில் படுங்க. நான் கீழே படுத்துக்கிறேன்'' என்று கூறி, அப்படியே படுத்துக்கொண்டார்.

அவருடைய பெருந்தன்மை என்னை நெகிழச் செய்துவிட்டது.



அப்பாவி வேடம்

சீரியசான கேரக்டரில் அறிமுகமாகி, ஸ்டைல் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினி, "சதுரங்கம்'' படத்தில், பெண்களைப் பார்த்து பயப்படும் அப்பாவியாக நடித்தார். அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ரஜினி, தொழில் மீது பக்தி மிக்கவர். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து விடுவார். கடும் உழைப்பாளி. படப்பிடிப்பு நேரங்களில், தான் அடுத்து நடிக்க வேண்டிய சீன் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பார்.

அவர் என்னை எங்கு பார்த்தாலும், அன்பாக இரண்டு வார்த்தைகளாவது பேசாமல் போகமாட்டார்.

முன்வைத்த காலை பின்வைக்காமல் வெற்றி நடை போடும் ரஜினி, பல்லாண்டு வாழவேண்டும்.''

இவ்வாறு கூறினார், துரை.

`பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

பாரதிராஜாவின் "16 வயதினிலே''
`பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி




`புவனா ஒரு கேள்விக்குறி'யைத் தொடர்ந்து, ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படம் "16 வயதினிலே.'' இது, பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம்.

"புவனா ஒரு கேள்விக்குறி'' வெளிவந்து 2 வாரம் கழித்து வெளிவந்த இப்படம், ரஜினியின் புகழை மேலும் உயர்த்தியது.

இதில் கதாநாயகன் `சப்பாணி'யாக கமலஹாசன் நடித்தார். அவர் அற்புதமாக நடித்த படங்களில் ஒன்று "16 வயதினிலே.'' கதாநாயகியாக ஸ்ரீதேவி சிறப்பாக நடித்தார்.

பரட்டை

முழுக்க முழுக்க மண்வாசனை கமழ்ந்த இப்படத்தில் `பரட்டை' என்ற முக்கிய வேடத்தில் ரஜினி நடித்தார்.

படத்தின் கதை, புதுமையானது.

படத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி. அவருடைய தாயார் காந்திமதி.

சதா வெற்றிலையை குதப்பிக்கொண்டு, கோணிக் கோணி நடக்கும் `சப்பாணி' கமலஹாசன், `ஆத்தா, ஆத்தா' என்று காந்திமதியிடம் மிகுந்த விசுவாசம் வைத்திருந்தார்.

அந்த ஊருக்கு வரும் ஒரு டாக்டரை (சத்யஜித்) ஸ்ரீதேவி காதலிப்பார். டாக்டர் தன்னைக் காதலிப்பதாக ஸ்ரீதேவி நினைப்பார். ஆனால், `நான் விரும்புவது உன்னுடைய 16 வயதைத்தான்; உன்னை அல்ல' என்று கூறிவிட்டு, வேறு பெண்ணை டாக்டர் கல்யாணம் செய்து கொள்வார்.

நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அரட்டை அடிப்பது, பெண்களை கேலி செய்வது ஆகியவற்றையே தொழிலாகக் கொண்ட `பரட்டை'க்கு (ரஜினி) ஸ்ரீதேவி மீது ஒரு கண்.

ஒருநாள் ஸ்ரீதேவியை அவர் கெடுக்க முயற்சிக்கும்போது, அங்கே வரும் கமல், ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டு, ரஜினியைக் கொன்றுவிடுவார்.

அதுவரை கமலை வெறுத்து வந்த ஸ்ரீதேவியின் மனம் அடியோடு மாறும். தன் கற்பைக் காப்பதற்காக கொலையாளி யாகி ஜெயிலுக்குப் போன கமல், எப்போது விடுதலையாகி வருவார் என்று எதிர்பார்த்து, ரெயில் நிலையத்தில் காத்திருப்பார்.

தமிழ்த்திரைப்பட வரலாற்றில், மிக முக்கிய இடத்தைப் பெற்ற படம் "16 வயதினிலே.'' ஒரு நிஜ கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய படம். நடித்தவர்கள் எல்லோரும், உயிருள்ள பாத்திரங்களாக நடமாடினார்கள். ரஜினி நடித்தது வில்லன் கதாபாத்திரம் என்றாலும், மிகச்சிறப்பாக நடித்திருந்தார். "இது எப்படி இருக்கு?'' என்று கேட்டு அவர் பேசிய வசனங்கள், கைதட்டல் பெற்றன.



நெருப்பு

அஜந்தா கம்பைன்ஸ் தயாரித்த "சகோதர சவால்'' என்ற கன்னடப் படத்தில் ரஜினி, கவிதா, பவானி, ஹாலம், ஜெயமாலினி, ஜெயபாரதி, பிரமிளா, விஷ்ணு வர்த்தன் ஆகியோர் நடித்தனர். இந்தப்படம், "நெருப்பு'' என்ற பெயரில் தமிழிலும், "டில்லர்'' என்ற பெயரில் இந்தியிலும் டப் செய்யப்பட்டது.

ஆடுபுலி ஆட்டம்

சொர்ணாம்பிகை புரொடக்ஷன் தயாரித்த "ஆடுபுலி ஆட்டம்'' என்ற படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நடித்தார், ரஜினி. இந்தப்படம் 30-9-1977 அன்று வெளியாகியது.

மகேந்திரன் கதை-வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்திருந்தார். ஸ்ரீபிரியா, சங்கீதா ஆகியோர் நடித்தனர்.

காயத்ரி

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் "காயத்ரி'' என்ற நாவல், அதே பெயரில் படமாகியது.

இதில் கதாநாயகன் கெட்டவன். பெண்களை திருமணம் செய்து, முதல் இரவின்போது ரகசிய கேமராவைக்கொண்டு, படுக்கை அறை காட்சிகளை புளு பிலிம் எடுத்து வெளிநாடுகளுக்கு விற்றுவிடுவான். அந்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார்.

கதாநாயகி ஸ்ரீதேவி. துப்பறியும் அதிகாரியாக ஜெய்சங்கர் நடித்தார்.

"ஏ'' முத்திரையுடன் படம் வெளிவந்தது.

அந்தக் காலக்கட்டத்தில், இந்தக்கதை, வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும் கருதப்பட்டது. சிலர், "இப்படியெல்லாம் நடக்குமா!'' என்று கூறினார்கள். எனினும், பிற்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்தன.

பஞ்சு அருணாசலம் வசனம் எழுத, இளையராஜா இசை அமைத்தார். டைரக்ஷன்: பட்டாபிராமன்.



கன்னடத்தில் `நெஞ்சில் ஓர் ஆலயம்'

தமிழில் ஸ்ரீதர் டைரக்ஷனில் மாபெரும் வெற்றிபெற்ற "நெஞ்சில் ஓர் ஆலயம்'', "குங்கும ரக்ஷே'' என்ற பெயரில் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டது.

தமிழில் கல்யாண்குமார் நடித்த டாக்டர் வேடத்தில், கன்னடத்தில் ரஜினி நடித்தார். மற்றும் மஞ்சுளா, அசோக் ஆகியோர் நடித்தனர். எஸ்.கே.சாரி டைரக்ட் செய்தார்.

இந்தப்படம் "குறிஞ்சி மலர்'' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது.

ஆறு புஷ்பங்கள்

ரஜினி நடித்த அஷ்டலட்சுமி பிக்சர்ஸ் தயாரித்த "ஆறு புஷ்பங்கள்'', 17-11-1977-ல் வெளியாயிற்று.

இதில், விஜயகுமார் கதாநாயகனாக நடித்தார். ஸ்ரீவித்யா, ஒய்.விஜயா ஆகியோர் இடம் பெற்றனர். கதை-வசனத்தை கலைஞானம், பனசை மணியன் ஆகியோர் எழுதினர். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''

1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த்
திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''




1977-ம் ஆண்டில் மொத்தம் 15 படங்களில் ரஜினிகாந்த் நடித்தார். அவற்றில், "புவனா ஒரு கேள்விக்குறி'' பெரும் திருப்பம் ஏற்படுத்திய படமாகும்.

ரஜினி நடித்து 1977-ல் வெளிவந்த படங்கள் வருமாறு:-

அவர்கள், கவிக்குயில், ரகுபதி ராகவன் ராஜாராம், சிலசும்மா செப்பிந்தி (தெலுங்கு), புவனா ஒரு கேள்விக்குறி.

ஒந்து பிரேமதே கதே (கன்னடம்), 16 வயதினிலே, சகோதர சவால் (கன்னடம்), ஆடுபுலி ஆட்டம், காயத்ரி.

குங்கும ரக்ஷே (கன்னடம்), ஆறுபுஷ்பங்கள், தொலிரேயி கடிசிந்தி (தெலுங்கு), ஆம் மே கதா (தெலுங்கு), கலாட்டா சம்சாரா (கன்னடம்).

கவிக்குயில்

எஸ்.பி.தமிழரசி தயாரித்த இந்தப்படத்தில், சிவகுமார், ஸ்ரீதேவி பிரதான வேடத்தில் நடித்தனர். ரஜினிகாந்துக்கு ஜோடியாக லட்சுமிஸ்ரீ நடித்தார். மற்றும் எஸ்.வி.சுப்பையா, `படாபட்' ஜெயலட்சுமி ஆகியோரும் நடித்தனர்.

ஆர்.செல்வராஜ் எழுதிய கதைக்கு திரைக்கதை - வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம். தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்தனர்.

இளையராஜா இசை அமைப்பில், பாலமுரளிகிருஷ்ணா பாடிய "சின்னக்கண்ணன் அழைக்கிறான்'' என்ற பாடல் பெரிய ஹிட்டாகியது.

ரகுபதி ராகவன் ராஜாராம்

இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜயகுமார், சுமித்ரா, ராம்குமார், ஷோபனா ஆகியோர் நடித்தனர். ராம்-ரஹீம் கதை-வசனம் எழுதிய இப்படத்தை இயக்கியவர் துரை.

முதலில் இப்படத்துக்கு "ரகுபதி ராகவராஜாராம்'' என்று பெயர் வைத்திருந்தனர். தணிக்கை குழுவின் ஆலோசனைப்படி, "ரகுபதி ராகவன் ராஜாராம்'' என்று மாற்றப்பட்டது.

புவனா ஒரு கேள்விக்குறி

ரஜினிகாந்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் "புவனா ஒரு கேள்விக்குறி.''

மகரிஷி எழுதிய கதைக்கு திரைக்கதை - வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம். எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷனில் ரஜினி நடித்த முதல் படம்.



இந்தப் படத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், அதுவரை நல்லவராகவே நடித்து வந்த சிவகுமார் கெட்டவராகவும், கெட்டவராக நடித்து வந்த ரஜினிகாந்த் நல்லவராகவும் நடித்தனர்.

இந்த மாற்றம் நன்றாக `கிளிக்' ஆகியது. மாறுபட்ட வேடங்களையும் தன்னால் நன்றாக நடிக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். சிவகுமாரால் கைவிடப்பட்ட சுமித்ராவுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கும் நல்லவராக அவர் நடித்ததை ரசிகர்கள் வரவேற்றனர்.

ரஜினி பாடுவதுபோல் அமைந்த "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள! ஒரு ராணியும் இல்லை வாழ! என்ற பாடல், பெரிய ஹிட் ஆகியது.

2-9-1977-ல் வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

இந்தப் படத்துக்கு, தமிழக அரசு ரூ.1 லட்சம் மான்யம் வழங்கியது.

எஸ்.பி.முத்துராமன் பேட்டி

"ரஜினிகாந்தை நல்லவராக நடிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?'' என்று இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

"என் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த முதல் படம் "புவனா ஒரு கேள்விக்குறி.''

வில்லன் வேடத்திலும், ஸ்டைல் நடிப்பிலும் அவர் ஏற்கனவே முத்திரை பதித்திருந்தார். அவரை, புதுமையான வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நானும், பஞ்சு அருணாசலமும் முடிவு செய்தோம்.



இந்தப்படத்தில் 2 கதாநாயகர்கள். அதுவரை நல்லவராகவே நடித்து வந்த சிவகுமாரை கெட்டவராகவும், கெட்டவராகவே நடித்து வந்த ரஜினிகாந்தை நல்லவராகவும் நடிக்க வைக்கத் தீர்மானித்தோம்.

இதுபற்றி அறிந்ததும், `ரசிகர்கள் இந்த மாற்றத்தை ஏற்பார்களா?' என்று சிவகுமார் கொஞ்சம் தயங்கினார். ஆனால் பிறகு, அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரத்தை ஏற்று, மிகச்சிறப்பாக நடித்தார்.

புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் ரஜினிக்கு ஏக மகிழ்ச்சி. அற்புதமாக நடித்து, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார்.

இந்தப்படம் வெளியாகும் வரை, சிறந்த வில்லனாகவும், ஸ்டைல் மன்னனாகவும் மட்டுமே ரஜினியை ரசிகர்கள் நினைத்தார்கள். அவர் எல்லாவித பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர் என்பதை எடுத்துக்காட்டிய படம், "புவனா ஒரு கேள்விக்குறி.'' இப்படம், ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.''

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம்


"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம்
"அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தது




கே.பாலசந்தர் டைரக்ட் செய்த "மூன்று முடிச்சு'' படத்தில், முக்கிய வேடம் ஏற்று நடித்தார், ரஜினி. "அவர்கள்'' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

"அபூர்வராகங்கள்'' படம் வெளிவந்த பிறகும், ரஜினிக்கு புதிய படங்கள் எதுவும் `புக்' ஆகவில்லை.

ஆயினும், அவரை முன்னணி நட்சத்திரமாக்க உறுதி கொண்டிருந்த டைரக்டர் கே.பாலசந்தர், ரஜினிகாந்துக்கு முக்கியத்துவம் கொடுத்து "மூன்று முடிச்சு'' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

இந்தப் படத்தில் கமலஹாசன் இடம் பெற்றார் என்றாலும், அது கவுரவ வேடம் போன்றதுதான். படத்தின் தொடக்கத்திலேயே அவர் இறந்து விடுவார்.

படத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்த அவர், கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.

படத்தில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் நண்பர்கள். இருவருமே ஸ்ரீதேவியை காதலிப்பார்கள். ஆனால், ஸ்ரீதேவியின் மனதில் இடம் பெற்றது கமலஹாசன்தான். இதனால், கமல் மீது ரஜினி ஆத்திரம் கொள்வார்.

ஒருநாள், இவர்கள் மூவரும் படகில் சென்று கொண்டிருக்கும்போது, கமலஹாசன் தவறி ஏரியில் விழுந்து விடுவார். அவரை காப்பாற்றும்படி ஸ்ரீதேவி மன்றாடியும், ரஜினி மறுத்துவிடுவார்.

இந்த நிகழ்ச்சி, ஸ்ரீதேவி யின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தி விடும். தன்னை ரஜினி வெறித்தனமாக காதலிப்பதால்தான், அதற்குப் போட்டியாக இருக்கும் கமலஹாசன் சாகட்டும் என்று ஏரியில் மூழ்கச் செய்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார்.

இதற்கு அவரை பழிவாங்கத் தீர்மானிக்கும் ஸ்ரீதேவி, ரஜினியின் தந்தையையே (கல்கத்தா விஸ்வநாதன்) மணந்து கொள்கிறார்.

கடைசியில் ரஜினி மனம் திருந்துவதோடு படம் முடிவடையும்.

ரஜினியின் `மனச்சாட்சி'யாக டைரக்டர் நட்ராஜ் நடித்திருந்தார். ரஜினியுடன் மனச்சாட்சி அடிக்கடி பேசுவதும், பாடுவதும் புதுமையானவை.

`சிகரெட்' ஸ்டைல்

ரஜினிகாந்த் ஆன்டி ஹீரோவாக சிறப்பாக நடித்திருந்தார்.

சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு, வாய்க்கு கொண்டு வரும் ஸ்டைலை இந்தப் படத்தில்தான் ரஜினி அறிமுகம் செய்தார்.

22-10-1976 அன்று இந்தப்படம் ரிலீஸ் ஆயிற்று. படம் பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், நன்றாகவே ஓடியது. ரஜினியின் ஸ்டைல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. `யார் இந்த ரஜினி? புதுமாதிரி நடிக்கிறாரே?' என்று ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர். ரஜினியின் பேட்டிகளும், படங்களும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.

இந்தக் காலக்கட்டத்தில், "கதா சங்கமா'' என்ற கன்னடப்படத்திலும், "அந்துலேனி கதா'' என்ற தெலுங்குப் படத்திலும் ரஜினி நடித்தார். "அவள் ஒரு தொடர்கதை'' படத்தின் தெலுங்குப் பதிப்புதான் "அந்துலேனி கதா.''

"கதாசங்கமா'' படத்தை புட்டண்ணாவும், "அந்துலேனி கதா'' படத்தை கே.பாலசந்தரும் டைரக்ட் செய்தனர்.

"கதாசங்கமா'' படத்தில் ஒரு புதுமை. மூன்று கதைகள், ஒரே படத்தில் இடம் பெற்றன. மூன்றாவது கதையில், ஒரு குருட்டுப் பெண்ணை வில்லன் கற்பழித்து விடுவான். அவளை கதாநாயகன் ஏற்றுக்கொள்வான். இதில், வில்லனாக நடித்தார், ரஜினி.

(இந்த மூன்றாவது கதையை, பிற்காலத்தில் `கை கொடுக்கும் கை' என்ற பெயரில் தமிழில் மகேந்திரன் முழுப்படமாக எடுத்தார். கன்னட மூலத்தில் வில்லனாக நடித்த ரஜினி, தமிழில் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக, ரேவதி நடித்தார்.)

அவர்கள்

இதற்குப்பின் பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் "அவர்கள்.''

பலரும் முக்கோணக் காதல் கதையை படமாக எடுப்பார்கள். அதிலிருந்து மாறுபட்டு, நான்கு கோணங்களில் காதலை படம் பிடித்துக் காட்டினார், பாலசந்தர். திரைக்கதையை மிகத் திறமையாக அமைத்தார்.

கதையின் நாயகி சுஜாதா, இசைக்கலைஞன் ரவிக்குமாரை (புதுமுகம்) காதலிக்கிறார். அவர் எழுதும் கடிதங்கள் ரவிக்குமாருக்கு போய்ச் சேராததால், ரஜினிகாந்துக்கு கழுத்தை நீட்டுகிறார். ரஜினிகாந்த், ராமநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மனைவியை துன்புறுத்தி மகிழும் "சாடிஸ்ட்'' அவர்.

மனைவியை கட்டித் தழுவும்போதுகூட, "இந்த மாதிரி அணைத்தால் உனக்குப் பிடிக்குமா? உன் பழைய காதலன் உன்னை எப்படி அணைப்பான்?'' என்று, வார்த்தைகளால் தேள் போல கொட்டுவார்.



இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. குழந்தையுடன் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேருகிறார், சுஜாதா.

அங்கு கமலஹாசன் (கதாபாத்திரத்தின் பெயர் ஜானி) வேலை பார்க்கிறார். மனைவியை இழந்தவர். எல்லோருக்கும் உதவி செய்யும் நல்லவர். அவருக்கு தோழனாக இருப்பது `ஜுனியர்' என்ற பெயருள்ள பேசும் பொம்மை.

அவர், சுஜாதாவுக்கு உதவிகள் செய்கிறார். கமல் வீட்டிலேயே குடியேறுகிறார், சுஜாதா.

சுஜாதாவின் கதையை அறியும் கமல், அவரை மனதுக்குள் நேசிக்கிறார். ஆனால், அது ஒருதலைக்காதல்.

எதிர்பாராத திருப்பம்

இந்த சமயத்தில், சுஜாதாவின் பழைய காதலன் ரவிக்குமார், பக்கத்து வீட்டில் வசிப்பது சுஜாதாவுக்குத் தெரிகிறது. இருவரும் சந்தித்துப் பேசும்போது, ரவிக்குமார் நிரபராதி என்பது சுஜாதாவுக்குத் தெரிகிறது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.

இந்த சமயத்தில், சுஜாதா வேலை பார்க்கும் கம்பெனியின் மானேஜராக மாற்றல் ஆகி வருகிறார், ரஜினி. தான் திருந்திவிட்டதாக கூறி, சுஜாதாவுக்கு பல உதவிகள் செய்கிறார்.

இதனால் சுஜாதாவின் மனம் மாறுகிறது. கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். அவருடைய வேண்டுகோளை ஏற்று வேறு பெண்ணை மணக்கிறார், ரவிக்குமார்.

இந்த கல்யாணம் முடிந்து சுஜாதா வீடு திரும்பும் வேளையில், ஒரு வடஇந்தியப் பெண் கைக்குழந்தையுடன் வந்து, தன்னை ராமநாதனின் (ரஜினி) மனைவி என்று கூறுகிறாள்.

இதைத்தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களால், ரஜினி மாறவே இல்லை என்பதை சுஜாதா தெரிந்து கொள்கிறார். "ஏன் இப்படி செய்தீர்கள்?'' என்று சுஜாதா கேட்க, "நீ மறுமணம் செய்வதை தடுக்கவே அப்படிச் செய்தேன். நீ கதறி அழுவதை பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை!'' என்கிறார், ரஜினி.

மன உறுதி படைத்த சுஜாதா, "என்னை அழவைக்க மட்டும் உன்னால் முடியாது'' என்று கூறிவிட்டு, திருவனந்தபுரத்திற்கு ரெயில் ஏறுகிறார்.

கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைக்கிறார், கமல்.

இந்தப் படத்தில் "ஆன்டி ஹீரோ'' வேடத்தில் அற்புதமாக நடித்திருந்தார், ரஜினி.

மலையாளம் கலந்த தமிழிலே பேசி நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார், கமல்.

சுஜாதாவும் மிகச்சிறப்பாக நடித்தார்.

தன் மகன், சுஜாதாவை மணந்து அநியாயமாக கைவிட்டதை அறியும் ரஜினியின் தாயார், வேலைக்காரியாக மாறி சுஜாதாவுக்கு உதவுவது அருமையான குணச்சித்திர கதாபாத்திரம்.

மொத்தத்தில் "அவர்கள்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு, ரஜினியின் நடிப்புக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. "எனக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்த படம் அவர்கள்'' என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!''
நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''


"அபூர்வராகங்கள்'' படத்தில் தான் நடிப்பது பற்றி, பெங்களூரில் உள்ள தன் நண்பர்களுக்கு ஏற்கனவே ரஜினி கடிதம் எழுதியிருந்தார்.

`அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறேன். திரைப்படக் கல்லூரியில் 36 பேர் படித்தபோதிலும், டைரக்டர் பாலசந்தரின் பார்வை என் மீது மட்டுமே பட்டது. எனவே, எனக்குக் கதாநாயகன் வாய்ப்பைத் தந்திருக்கிறார்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்!

இதுபற்றி ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியதாவது:-



"அபூர்வராகங்களில் சின்ன வேஷத்தில்தான் நான் நடித்தேன். அதைச் சொன்னால், `இதற்காகவா 2 வருஷம் படித்துக் கிழித்தாய்!' என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று நினைத்தேன். அதனால் நான்தான் கதாநாயகன் என்று சும்மா `ரீல்' விட்டேன்.

1 வருடம், 1ஷி வருடம் கழித்துதான் அபூர்வராகங்கள் பெங்களூருக்கு வரும் என்று நினைத்து தைரியமாக அப்படிச் சொன்னேன்.

என்னுடைய துரதிர்ஷ்டம், படம் 2 மாதத்திலேயே பெங்களூருக்கு வந்துவிட்டது! அப்போது நான் பெங்களூரில் இருந்தேன். என் நண்பர்களுக்கு ஒரே குஷி. எனக்கோ தர்மசங்கடம். என்ன செய்வது என்று தெரியவில்லை.

அபூர்வராகங்கள் படம் ரிலீஸ் ஆன அன்று, முதல் காட்சிக்கே என் நண்பர்கள் எல்லோரும் போனார்கள். "இந்தப் படத்தின் ஹீரோ, எங்கள் பிரண்ட்தான்!'' என்று கூறி, எல்லோருக்கும் சுவீட் கொடுத்தார்கள்.

அவர்கள் பலூன்களை ஊதி, கையில் வைத்திருந்தார்கள். நான் திரையில் தோன்றியதும், பலூன்களை படார், படார் என்று உடைத்து, என்னை வரவேற்கத்தான்!

படம் ஆரம்பம் ஆச்சு. டைட்டிலில் சிவாஜிராவ் என்ற பேரைத் தேடுறாங்க. அந்தப் பெயர் வரவில்லை. ரஜினிகாந்த் என்ற பெயர் வருது. அது, நான்தான் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

படம் ஓடிக்கிட்டே இருக்கு. திரையில் என்னைக் காணோம். இடைவேளையும் வந்துவிட்டது.

நான் அவர்கள் கண்ணில் படாமல் மெல்ல நழுவி விட்டேன்.

படத்தில் நான் இல்லை என்ற முடிவுக்கு நண்பர்கள் வந்துவிட்டார்கள். இருந்தாலும், `படம் நல்லா இருக்கு. முழுவதையும் பார்த்து விட்டுப் போகலாம்' என்று உட்கார்ந்திருந்தார்கள். பலூனில் காற்றை இறக்கி விட்டு, பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்கள்.

இடைவேளை முடிந்து, படம் ஆரம்பம் ஆச்சு.

இரண்டு கதவையும் தள்ளிவிட்டு, ஒருவன் உள்ளே நுழைகிறான். தாடி - மீசை. பழைய கோட்டு. `எங்கேயோ பார்த்த முகம் மாதிரி இருக்கே' என்று நண்பர்கள் நிமிர்ந்து உட்காருகிறார்கள்!

கொஞ்ச நேரம் போனதும், அது நான்தான் என்பது தெரிகிறது! நண்பர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. பலூனை எடுத்து ஊதி, `டப் டப்' என்று உடைச்சாங்க.

அதே நேரத்தில் கமலஹாசனோட முகமும் திரையில் தெரியும். தியேட்டருக்கு வந்திருந்தவர்கள், `கமலஹாசன் ரசிகர்கள்தான் பலூனை வெடிக்கிறார்கள்' என்று நினைத்துக் கொண்டார்கள். `பெங்களூரில் கூட கமலஹாசனுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களே' என்று ஆச்சரியப்பட்டாங்க.''

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.



100 நாட்கள்

`அபூர்வராகங்கள்' சிக்கலான கதை. விக்கிரமாதித்தன் கதையில், வேதாளம் போடும் விடுகதையை அடிப்படையாக வைத்து, புதுபாணியில் இதை பாலசந்தர் எழுதியிருந்தார்.

படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் அப்பா; கமலஹாசன் மகன்.

கமலஹாசன் ஸ்ரீவித்யாவை காதலிக்க, ஸ்ரீவித்யாவின் மகளான ஜெயசுதாவை மணக்க மேஜர் சுந்தர்ராஜன் முடிவு செய்வார்!

படம் கிளைமாக்சை நெருங்கும்போது, `நான்தான் பைரவியின் (ஸ்ரீவித்யா) புருஷன்' என்று சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் திடும்பிரவேசமாக நுழையும்போது, கதையில் பெரும் திருப்பம் ஏற்படும்.

`இந்தக் கதையை மக்கள் ஏற்பார்களா? படம் ஓடுமா?' என்று, டைரக்டர் பாலசந்தர் உள்பட பலருக்கும் சந்தேகம் இருந்தது.

எனினும் படம் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால், நூறு நாட்களைக் கடந்து ஓடியது.

கேடயம்

படத்தின் நூறாவது நாள் விழாவில் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு, படத்தில் பங்கு கொண்ட கலைஞர்களுக்கு கேடயங்கள் வழங்கினார். அவர் வேறொரு முக்கிய நிகழ்ச்சிக்குப் போகவேண்டி இருந்ததால், டைரக்டர் பாலசந்தர், கதாநாயகன் கமலஹாசன், கதாநாயகி ஸ்ரீவித்யா உள்பட சிலருக்கு மட்டும் கேடயங்களை வழங்கி விட்டு, அடுத்த நிகழ்ச்சிக்குப் போய்விட்டார்.

ரஜினிகாந்துக்கும், மற்றவர்களுக்கும் ஏவி.எம். அதிபர் மெய்யப்ப செட்டியார்தான் கேடயங்களை வழங்கினார்.

`முதல்வரிடம் கேடயம் வாங்க முடியவில்லையே' என்ற மனக்குறை ரஜினிக்கு நீண்ட காலம் இருந்தது. "முத்து'' படத்தில் சிறப்பாக நடித்ததற்கான தமிழக அரசின் பரிசை, கலைஞரிடம் பெற்றபோது, அந்த மனக்குறை தீர்ந்தது.

`ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர்

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக
`ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர்


"அபூர்வராகங்கள்'' படத்தில் நடித்து முடிக்கும் வரை "சிவாஜிராவ்'' ஆக இருந்தவர், பிறகு "ரஜினிகாந்த்'' ஆக மாறினார். புதிய பெயரை சூட்டியவர் டைரக்டர் கே.பாலசந்தர்.

இதுபற்றி ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-

"அபூர்வராகங்கள் படத்திற்காக, நான் இன்னொரு காட்சியில் நடித்தேன். நானும், ஸ்ரீவித்யாவும் பங்கு கொள்ளும் லவ் சீன்.

இரண்டு பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்துக்கொண்டு, சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் வரவேண்டும். அக்காட்சியில் வசனம் கிடையாது. வெறும் உதட்டசைப்பு மட்டும்தான்.

இதனால், `உங்கள் இஷ்டப்படி ஏதாவது பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் நடந்து வாருங்கள்' என்று சொன்னார்கள். நான் கன்னடத்தில் பேச, ஸ்ரீவித்யா மலையாளத்தில் பேசினார்!



இந்தக் காட்சி முடிந்தது. `நீங்க வீட்டுக்குப்போகலாம்' என்றார்கள்.

நான் `மேக்கப்'பை கலைத்து விட்டு வெளியே வந்தேன்.

அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பு அத்துடன் முடிவடைந்தது.

என் காட்சிகளுக்கு வசனம் பேச (டப்பிங்) ஜெமினி ஸ்டூடியோவுக்குப் போனேன். அப்போது கமலஹாசனும், ஸ்ரீவித்யாவும் `டப்பிங்'கில் வசனம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

என்னுடைய காட்சி எப்போது வரும் என்று காத்திருந்தேன்.

திடீரென்று திரையில் ஒரு காட்சி. கோட்டு போட்ட ஒரு தாடி ஆசாமி, கதவைத் திறந்து கொண்டு வருகிறான். ஏதோ பேசுகிறான். என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது - அது நான்தான் என்று!

என்னை மறந்து, அந்தக் காட்சியைப் பார்க்கிறேன்! அதே காட்சி சுற்றிச்சுற்றி வருகிறது. வசனம் பேசுவதை மறந்து அதையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என் உருவத்தை திரையில் பார்த்தபோது உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு! இதற்காகத்தானே இவ்வளவு நாள் காத்துக்கிட்டிருந்தேன்!

இதை கவனித்துக் கொண்டிருந்த டைரக்டர் பாலசந்தர் சார், "என்ன! வசனத்தைப் பேசலாமா?'' என்று கூறியதும், நான் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தேன்.

இந்த சமயத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். எனக்கு தமிழ் சரிவரத் தெரியாததால், வேறு யாரையாவது எனக்குக் குரல் கொடுக்கச் சொல்லலாம் என்று சிலர் கூறினார்கள். பாலசந்தர் சார் அதை ஏற்கவில்லை. `கூடவே கூடாது. ஒரிஜினல் வாய்ஸ்தான் வேண்டும்' என்று கூறிவிட்டார்.

அபூர்வராகங்களில் எனக்கு வசனம் கொஞ்சம்தான். அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பாலசந்தர் சார், சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே பேசினேன். அதை டைரக்டர் `ஓகே' செய்தார். டப்பிங் வேலை முடிந்தது.'

இவ்வாறு குறிப்பிட்ட ரஜினிகாந்த், தனக்கு அந்தப் பெயர் வந்தது பற்றி சொன்னதாவது:-

"1975 ஆகஸ்ட் 15-ந்தேதி அபூர்வராகங்கள் படம் வெளிவரும் என்று தேதி குறிப்பிடப்பட்டது.



பாலசந்தர் சார் என்னை அழைத்தார். `டைட்டிலில் பெயர் போடவேண்டும். சிவாஜிராவ் என்ற பெயர் வேண்டாம். ஏனென்றால் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் வேண்டாம். `ராவ்' என்கிற பெயரும், தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது' என்றார்.

`நீங்களே ஏதாவது பெயர் சொல்லுங்க சார்!' என்று கூறிவிட்டுத் திரும்பினேன்.

என் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்தேன். `சரத்', `ஆர்.எஸ்.கெய்க்வாட்' என்ற இரண்டு பெயர்கள் என் மனதில் இருந்தன. அதைச் சொன்னேன். நண்பர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக, "நன்றாக இல்லை'' என்று கூறினார்கள்.

மறுபடியும் பாலசந்தர் சார் கிட்ட போய், "நீங்களே ஆசீர்வாதம் செய்து, ஒரு பெயர் வையுங்க!'' என்றேன்.

அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். பவுர்ணமி தினம்.

பாலசந்தர் சார் சொன்னார்: "என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில், சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ஸ்ரீகாந்த், மற்றவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது. ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன்.'

இவ்வாறு பாலசந்தர் சொன்னதும், அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன். `நல்ல வில்லனா வரணும் என்று ஆசீர்வாதம் செய்யுங்க' என்றேன்.

`வில்லன் எதுக்கப்பா! நீ பெரிய நடிகனாக வருவே. பார்த்துக்கொண்டே இரு!' என்றார், பாலசந்தர் சார்.

எனக்குத் தாங்கமுடியாத உற்சாகம். நேராக மெரினா கடற்கரைக்கு ஓடினேன். கடற்கரை மணலில் உட்கார்ந்து, நீலக்கடலை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

எனக்கு மனக் கஷ்டம் வந்தாலும், உற்சாகம் வந்தாலும் கடற்கரைக்குச் சென்று, தனியாக உட்கார்ந்து, சிந்தனையில் மூழ்கிவிடுவேன்.''

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

1975-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ந்தேதி.

"அபூர்வ ராகங்கள்'' ரிலீஸ் ஆயிற்று.



மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம். பாலசந்தர் தன் படங்களில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருந்த காலக்கட்டம். எனவே, அதை `டைரக்டர் படமாக'த்தான் ரசிகர்கள் நினைத்தார்கள்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரிலும் இப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. படம் பார்க்கப்போனார், ரஜினி. டிக்கெட் கிடைக்கவில்லை.

தியேட்டர் மானேஜரை சந்தித்து, `நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு ஒரு டிக்கெட் வேண்டும்' என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

அவரை மேலும் கீழுமாகப் பார்த்த மானேஜர், இரக்கப்பட்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.

துள்ளிக்குதித்து ஓடிய ரஜினி, திரையில் தன் உருவத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.

`நம் கனவு நிறைவேறிவிட்டது. வில்லன் வேடங்களாவது தொடர்ந்து கிடைக்கும்' என்று நினைத்தார்.

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

ரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை
"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு


ரஜினிகாந்த் நடித்த முதல் படமான "அபூர்வ ராகங்கள்'' படப்பிடிப்பு, அவருடைய அதிர்ஷ்ட நாளான வியாழக்கிழமை அன்று நடந்தது.

3 படங்களில் நடிக்க வைக்கப் போவதாக டைரக்டர் கே.பாலசந்தர் கூறியதால் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்ற ரஜினிகாந்த், நேராக டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்றார். அவரிடம் 20 ரூபாய் இருந்தது.

ஓட்டலில் இருந்த நண்பர்களிடம் விஷயத்தைச் சொன்னார். அவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். எல்லோருக்கும் சுவிட், மசாலா தோசை, காபி வாங்கிக் கொடுத்தார்.

`தமிழ் கற்றுக் கொண்டால், உங்களை எங்கோ கொண்டுபோய் விட்டு விடுவேன்' என்று பாலசந்தர் சொன்னது, ரஜினியின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அன்று முதல், தமிழ் படிக்க ஆரம்பித்தார். தமிழ்ப் பத்திரிகைகளில் வரும் செய்திகள், கதைகளை எல்லாம் படித்தார். ஒவ்வொரு வார்த்தையையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஒருநாள் - ஞாயிற்றுக்கிழமை. கலாகேந்திரா அலுவலகத்தில் இருந்து ரஜினிக்கு போன் வந்தது.



"அபூர்வ ராகங்கள் படத்தின் ஷூட்டிங் நாளைக்கு நடக்கிறது. உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை பாலசந்தர் எடுக்கப்போகிறார். ஸ்டூடியோவுக்கு வந்துவிடுங்கள்'' என்று கூறினார்கள்.

ரஜினிக்கு ஏக சந்தோஷம். இருந்தாலும் ஒரு நெருடல். அவருக்கு வியாழக்கிழமைதான் அதிர்ஷ்ட நாள். முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் வியாழக்கிழமைகளில்தான் நடந்து வந்திருக்கின்றன. `முதல் நாள் படப்பிடிப்பு வியாழக்கிழமை இருக்கக் கூடாதா?' என்று எண்ணினார்.

ஆனால், படப்பிடிப்புக்காக முதல் முதலாக அழைப்பவர்களிடம் இதையெல்லாம் கூறமுடியுமா?

எனவே, அவர்கள் சொன்னபடியே திங்கட்கிழமை ஸ்டூடியோவுக்குப் போனார்.

ஆனால், அன்று அவரது காட்சிகள் எடுக்கப்படவில்லை. மறுநாளும் போனார். அன்றும், அதற்கு அடுத்த நாளும் கூட படப்பிடிப்பு இல்லை.

கடைசியில், வியாழக்கிழமையன்று அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினார், பாலசந்தர்.

தான் விரும்பியபடியே, முதல் நாள் ஷூட்டிங் தானாகவே வியாழக்கிழமை நடந்ததில், ரஜினிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.

முதலில் படமாக்கப்பட்ட காட்சி:

ஒரு பெரிய பங்களா. அதற்கு ஒரு பெரிய கதவு. அதைத் திறந்துகொண்டு, தாடி-மீசையுடன் உள்ளே நுழைகிறார், ரஜினி.



"பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்!'' என்று கமலஹாசனிடம் கூறுகிறார்.

ரஜினி பேசிய முதல் வசனம் இதுதான்.

படப்பிடிப்புக்கு முன், இந்த வசனத்தை சுமார் ஆயிரம் தடவை பேசிப் பேசி ஒத்திகை பார்த்திருந்தார்!

முதல் நாள் அனுபவம் பற்றி ரஜினி கூறியிருப்பதாவது:-

`என் முகம் எல்லாம் கம் தடவி, தாடியை ஒட்ட வைத்திருந்தார்கள். சிரிக்கவும் முடியாது. அழவும் முடியாது.

சுமார் 20 கிலோ எடையுள்ள கோட்டை அணிந்திருந்தேன். அதைத் துவைத்து எத்தனை வருடம் இருக்குமோ தெரியவில்லை! ஒரே வியர்வை நாற்றம். தாங்க முடியாத அரிப்பு!

"கிளாப்!'' என்று கத்தினார், டைரக்டர் சார்.

கிளாப் அடிக்கும் உதவி டைரக்டர் வெள்ளைக்காரன் மாதிரி இருப்பார். அதனால் அவரை `ஜப்பான்' என்று எல்லோரும் செல்லமாக கூப்பிடுவார்கள்.

ஜப்பான் என் முன்னால் கிளாப் அடித்து விட்டு ஓடினார். எனக்கு ஒரே பதற்றம். எப்படியோ டயலாக்கை சொல்லிவிட்டேன். உண்மையில் உளறினேன் என்பதுதான் பொருந்தும்.



நான் கமலைப் பார்த்துத்தான் இந்த வசனத்தைச் சொன்னேன். ஆனால், சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த பாலசந்தர் சார்தான் என் கண்ணுக்குத் தெரிந்தார்.

நான் கேமராவைக் கண்டோ, அங்கிருந்த கூட்டத்தைக் கண்டோ பயப்படவில்லை. என் பயம் எல்லாம் பாலசந்தர் சார் கிட்டதான். அவருடைய பர்சனாலிட்டி, ஜென்டில்னஸ், அவருடைய அப்பியரன்ஸ் எல்லாம் சேர்ந்து, அவரிடம் எனக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தி இருந்தன.

பாலசந்தர் சாரைப் பார்த்தேன். நான் அவ்வளவு சரியா செய்யவில்லை என்பதை, அவர் முகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.

அருகே இருந்த சுவர் பக்கம் ஓடினேன். ஒரு சிகரெட்டை எடுத்து, சுருள் சுருளாகப் புகை விட்டேன்.

"சிவாஜி!'' என்று குரல் கேட்டது. நான் ஓடிப்போய் கேமரா முன் நின்றேன். என் சம்பந்தப்பட்ட அடுத்த காட்சியை படமாக்கினார், பாலசந்தர் சார்.

மேலேயிருந்து கமல் என்னிடம் ஓடிவருகிறார். "என்ன சொன்னீங்க?'' என்று கேட்கிறார்.

"நான் பைரவியோட புருஷன்'' என்று மீண்டும் சொல்கிறேன்.

கமல் என்னை இழுத்து மோட்டார் பைக்கில் உட்கார வைத்து, பைக்கை கேட்டுக்கு வெளியே ஓட்டிச் செல்கிறார்.

இந்தக்காட்சி படமாக்கப்பட்டபோது, கமல் நடிப்பைப் பார்த்து நான் பிரமித்துப் போய்விட்டேன். `நாம் இப்படி ஆவது எப்போது?' என்று நினைத்தேன்.

இதே படத்துக்காக, நாகேஷ் சாரோடு ஒரு சீனில் நடித்தேன்.

அந்தக் காட்சி படமாக்கப்பட்டதும், நாகேஷ் என்னிடம் வந்தார். `உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்று கூறியபடி என் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் போனார்.

அவர் கூறிய வார்த்தை அப்போது மட்டும் அல்ல, இப்போதுகூட டானிக்தான்!''

இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார்,

ரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை
3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர்
`தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'


பெங்களூரில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட மெயில் ரெயிலில் ரஜினி உட்கார்ந்திருந்தார். ஜன்னல் வழியாக தூரத்தில் தெரிந்த சூனிய வெளியை அவர் கண்கள் உற்று நோக்கிக் கொண்டிருந்தன.

எதிர்கால சூப்பர் ஸ்டாரை ஏற்றிச் செல்கிறோம் என்று அறியாத அந்த ரெயில், வெகுவேகமாக ஓடத்தொடங்கியது.

"நேரமாச்சு. தூங்கவேண்டும். விளக்கை அணையுங்கள் சார்!''

- அருகில் அமர்ந்திருந்தவர் குரல் எழுப்பினார்.

ரஜினி, விளக்கை அணைத்துவிட்டு படுத்தார். தூக்கம் வரவில்லை. எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி, அவர் தூக்கத்தை விரட்டிக் கொண்டிருந்தது.

மறுநாள். பெங்களூர் மெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து நின்றது.

ஒருவித புத்துணர்ச்சியுடன் ரெயிலில் இருந்து இறங்கினார், ரஜினி. ஏதோ பிறந்த ஊருக்கு வந்தது போன்ற உணர்வு. `இனிமேல் சென்னைதான் நம்ம சொந்த ஊர்' என்று மனதில் எண்ணியவராய், சென்னை மண்ணில் காலடி வைத்தார்.

அறையில் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களைச் சந்தித்து, நடந்ததைச் சொன்னார். "சிவாஜி! கவலைப்படாதே. எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையோடு இரு. கடவுள் கைவிடமாட்டார்'' என்று நண்பர்கள் ஆறுதல் கூறினார்கள்.



பாலசந்தர் அழைப்பு

நாட்கள் ஓடின. ஒரு நாள் மாலை ஐந்து மணி. ரஜினி கட்டிலில் படுத்திருந்தார். `இன்னும் எத்தனை நாட்கள் இப்படி வேலை வெட்டி இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பது' என்ற எண்ணம் மனதை வாட்டியது.

அப்போது, சத்தீஷ் என்ற நண்பர் ஓடிவந்தார்.

"சிவாஜி! பாலசந்தர் சார் ஆபீசில் இருந்து, அசோசியேட் டைரக்டர் சர்மா வந்திருக்கிறார். பாலசந்தர் சார், உன்னை உடனே அழைத்து வரச் சொன்னாராம்!'' என்றார், மகிëச்சியுடன்.

ரஜினிகாந்த் துள்ளி எழுந்தார். அவருடைய சோர்வெல்லாம் பறந்துவிட்டது. பாத்ரூமுக்கு ஓடினார். ஷேவ் செய்து கொண்டு, குளித்தார். அவசரம் அவசரமாக டிரஸ் செய்து கொண்டு கார் முன் போய் நின்றார்.

சர்மா, ரஜினியை காரில் ஏற்றிக்கொண்டார்.

கார் `விர்' என்று கிளம்பியது.

அதன்பின் என்ன நடந்தது?

ரஜினியே சொல்கிறார்:

"கார் சுற்றி வளைத்து, ஒரு கட்டிடம் முன்னால் போய் நின்றது. அங்கே `கலாகேந்திரா' என்ற போர்டு இருந்தது. இந்த பேனரை படங்களில் பார்த்திருக்கிறேன்.

உள்ளே போனேன். ஹாலில் உட்காரச் சொன்னார்கள். சோபாவில் உட்கார்ந்தேன். அங்கு ஷோ கேசில், "அரங்கேற்றம்'', "அவள் ஒரு தொடர்கதை'', "இருகோடுகள்'' போன்ற படங்களின் வெற்றி விழா ஷீல்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

உள்ளே இருந்த ரூமில் இருந்து, பாலசந்தர் சார் சிரிக்கிற சப்தம், பேசுகிற சப்தம் அவ்வப்போது கேட்டது.

`காபி வேணுமா? டீ வேணுமா?' என்று கேட்டார்கள். சாப்பிடலாம் என்று மனசுக்குள் தோன்றினாலும், `வேண்டாம்' என்று சொன்னேன்.



ஆனால், காபி கொண்டு வந்து வைத்தார்கள்.

அதே சமயத்தில் டைரக்டர் என்னை கூப்பிட்டார்.

காபியை தியாகம் செய்துவிட்டு உள்ளே போனேன்.

பாலசந்தர் சார் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இரு கை கூப்பி வணங்கினேன். அவர் கை நீட்டி, என்னுடன் கை குலுக்கினார்.

"உட்காருங்கள்'' என்றார். நான் உட்காராமல் நின்று கொண்டே இருந்தேன். வற்புறுத்தி, உட்காரச் சொன்னார். நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்தேன்.

அவர் என்னைக் கூர்ந்து பார்த்தார்.

எனக்கு அப்போது தமிழும் சரியாகத் தெரியாது; ஆங்கிலமும் சரியாகத் தெரியாது. எந்த மொழியில் பேசுவது என்று எனக்குக் குழப்பம்.

கொஞ்ச நேரம் ஓடியது.

`என்ன படிச்சிருக்கீங்க?' என்று பாலசந்தர் கேட்டார்.

`எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்!'' என்றேன்.

இது மாதிரி வேறு சில கேள்விகள் கேட்ட பின், `நான் இதுவரை உங்கள் நடிப்பைப் பார்த்ததில்லை. ஏதாவது நடித்துக் காட்டுங்கள்!' என்றார்.

`எனக்குத் தமிழ் தெரியாதே!' என்றேன்.



`பரவாயில்லை. கன்னடத்தில் பண்ணுங்க!' என்றார்.

கிரீஷ்கர்னாட் எழுதிய "துக்ளக்'' நாடகத்தில் இருந்து ஒரு சீனை நடித்துக் காட்டினேன்.

பாலசந்தர் சாருக்கு மிகுந்த சந்தோஷம். `ரொம்ப நல்லா இருக்கு' என்று பாராட்டினார்.

`எங்கேயோ கொண்டு போவேன்!'

பிறகு பாலசந்தர் சார் சொன்னார்:

`இப்போது, அபூர்வ ராகங்கள்' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு ரோல். அது சின்ன ரோல் என்றாலும், ரொம்ப பவர்புல் ரோல்.

அந்த ரோலில் உங்களை அறிமுகம் செய்யப்போகிறேன்.

அடுத்து, `அவள் ஒரு தொடர்கதை' படத்தை தெலுங்கில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் ஜெய்கணேஷ் நடித்த ரோல் உங்களுக்கு!''

- இவ்வாறு கூறிய பாலசந்தர், "உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?'' என்று கேட்டார்.

எனக்கு அப்போது தெலுங்கில் சில வார்த்தைகள்தான் தெரியும். என்றாலும் துணிந்து, "தெரியும்!'' என்றேன்.

பாலசந்தர் தொடர்ந்து, "மூன்றாவது ஒரு கதை இருக்கு. ("மூன்று முடிச்சு''). அதில் ஆண்டி ஹீரோ ரோலை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் மட்டும் தமிழை நன்றாகக் கற்றுக் கொண்டால், உங்களை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுவேன்'' என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னார்.

அதைக்கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன். ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி.

"சரி. நீங்கள் போகலாம். விலாசம், போன் நெம்பர் எல்லாம் கொடுத்து விட்டுப் போங்கள். படப்பிடிப்பின்போது உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன்'' என்றார், பாலசந்தர்.