Monday, 16 June 2014

"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!''

"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!''
ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்'' என்று ரஜினிகாந்த் கூறினார். ஆனால் ரசிகர்கள் விடாப்பிடியாக `சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கவே, அவர் பெயருடன் அந்தப் பட்டம் இரண்டறக் கலந்து விட்டது.

ரஜினிகாந்த் முழுக் கதாநாயகனாக நடித்த முதல் படம் "பைரவி.'' இதை கலைஞானம் தயாரித்தார்.

"கலைப்புலி'' தாணு

இப்போது பிரபல பட அதிபராக விளங்கும் "கலைப்புலி'' தாணு அந்தக் காலக் கட்டத்தில் எஸ்.தாணு என்ற பெயரில், திரைப்பட விநியோகஸ்தராக விளங்கினார்.



"பைரவி'' படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அவர் பெற்றிருந்தார்.

அண்ணா சாலையில் "பைரவி'' படம் திரையிடப்பட்ட பிளாசா தியேட்டரில், ரஜினியின் 35 அடி உயர `கட் அவுட்' வைத்தார். தியேட்டர் உயரத்துக்கு மேலே, அந்த `கட் அவுட்' நிமிர்ந்து நின்றது.

இத்துடன் 3 விதமான போஸ்டர்களை அச்சடித்து, சென்னை நகரம் முழுவதும் ஒட்டினார். அதில், படமெடுத்தாடும் நல்ல பாம்பை கையில் பிடித்தபடி ரஜினி தோன்றும் போஸ்டர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

சூப்பர் ஸ்டார்

போஸ்டர்களில் ரஜினிகாந்தை `சூப்பர் ஸ்டார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஜினிகாந்த் முதன் முதலாக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டது அப்போதுதான்.

அதன்பிறகு நடந்த நிகழ்ச்சிகள் பற்றி தாணு கூறியதாவது:-

"ரஜினியின் நடிப்பு, அவருக்கே உரித்தான ஸ்டைல் எல் லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனவே, அவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த "பைரவி'' படத்தின் விநியோக உரிமையை வாங்க விரும்பினேன். எஸ்.மகாலிங்கம், ஆர்.பி.ஜெயகுமார் என்ற 2 நண்பர்களை பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டு, பைரவி படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை வாங்கினேன்.



படத்தை பொதுமக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள, ராஜகுமாரி தியேட்டருக்கு பகல் காட்சிக்கு ரஜினி வந்தார். அவருடன் கலைஞானம், பஞ்சு அருணாசலம், கே.என்.சுப்பு ஆகியோரும் வந்தார்கள்.

போஸ்டர்களை ரஜினி பார்த்தார். `சென்னை நகர டிஸ்டிரிபிïட்டர் யார்?' என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டார். சிலர் என்னிடம் வந்து, `ரஜினி சார் உங்களை பார்க்க விரும்புகிறார்' என்றார்கள்.

நான் ரஜினியிடம் சென்றேன். `பென்டாஸ்டிக் போஸ்டர்! பிïட்டிபுல் பப்ளிசிட்டி' என்று என் கையைப் பிடித்துக் குலுக்கினார். நான் மகிழ்ந்து போனேன்.



பிளாசா டாக்கீசில் வைத்திருந்த பெரிய `கட் அவுட்'டையும் அவர் பார்த்தார். அதன் பிறகு அவரை நான் சந்தித்தபோது, `உங்கள் விளம்பரங்கள் எனக்குள் ஒருவித வைப்ரேஷன் (அதிர்வுகள்) உண்டாக்குகின்றன' என்றார்.

"பட்டம் வேண்டாம்''

இதன்பின் பட அதிபர் கலைஞானம், டைரக்டர் எம்.பாஸ்கர் இருவரும் என்னை ஒரு நாள் வந்து பார்த்தார்கள்.

"ரஜினி அனுப்பி, உங்களை வந்து பார்க்கிறோம். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகிய மூத்த கலைஞர்கள் இருக்கும்போது, தன்னை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதை ரஜினி விரும்பவில்லை. அப்படி விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிடச் சொன்னார்'' என்றார்கள்.

ஆனால், இதற்குள் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பிரபலமாகி விட்டது. ரஜினியை பார்க்கும்போதெல்லாம் ரசிகர்கள் `சூப்பர் ஸ்டார்' என்று குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

எனவே, நான் துணிந்து `கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்தேன்.



தன்னடக்கத்தின் காரணமாக, தன்னை `சூப்பர் ஸ்டார்' என்று அழைக்க வேண்டாம் என்று ரஜினி கூறினார். என்றாலும், ரசிகர்கள் மத்தியில் `சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் நிலைத்து விட்டது.

`நடிகர் திலகம்' என்றால் அது சிவாஜிகணேசன் ஒருவரை மட்டும் குறிப்பிடுவது மாதிரி, `சூப்பர் ஸ்டார்' என்றால் அது ரஜினி ஒருவரை மட்டும் குறிப்பிடும் சொல்லாகிவிட்டது.''

இவ்வாறு தாணு கூறினார்.

ரஜினிகாந்த் ஆரம்பத்தில் "ஸ்டைல் மன்னன்'' என்று அழைக்கப்பட்டார். "பைரவி'' படத்துக்குப்பின், "சூப்பர் ஸ்டார்'' என்றே குறிப்பிடப்படுகிறார்.

No comments:

Post a Comment