Monday, 16 June 2014

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது'
ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்


ஸ்ரீதர் டைரக்ஷனில் ரஜினிகாந்தும், கமலஹாசனும் இணைந்து நடித்த "இளமை ஊஞ்சலாடுகிறது'' வெள்ளி விழா படமாக அமைந்தது.

ஒவ்வொரு படத்திலும், வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் நடித்து வந்த ரஜினிகாந்தையும், நடிப்பில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருந்த கமலஹாசனையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க ஸ்ரீதர் முடிவு செய்தார். அவர்கள் இருவருக்கும் சமமான வாய்ப்பு தர விரும்பி, அதற்கேற்றபடி கதையை அமைத்தார். அதுதான் "இளமை ஊஞ்சலாடுகிறது.''



விறுவிறுப்பான கதை

எதிர்பாராத திருப்பங்களும், உணர்ச்சி மயமான சம்பவங்களும் நிறைந்த கதை.

ரஜினிகாந்த் பெரிய தொழில் அதிபர். அனாதையான கமலஹாசனை தன் உடன்பிறவா சகோதரனாக கருதுகிறார். தன் தொழிற்சாலையின் ஜெனரல் மானேஜராக நியமிக்கிறார்.

ஆபீசுக்குள்தான் அவர்களுக்குள் முதலாளி - மானேஜர் உறவு. வெளியே, "போடா, வாடா'' என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு

நட்பு.கமலஹாசனின் காதலி ஸ்ரீபிரியா. இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள்.

ஸ்ரீபிரியாவின் தோழி ஜெயசித்ரா விதவை. அவர் கமலஹாசன் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். மனதுக்குள் கமலை எண்ணி

ஏங்குகிறார்.ஸ்ரீபிரியாவும், ஜெயசித்ராவும் கிராமத்துக்கு செல்கிறார்கள். ஒரு நாள் திருவிழா பார்க்க அடுத்த கிராமத்துக்கு ஸ்ரீபிரியா செல்கிறார். வீட்டில் ஜெயசித்ரா மட்டும் தனியாக இருக்கிறார்.

ஸ்ரீபிரியாவை பார்க்க வரும் கமல், அன்றிரவு ஜெயசித்ராவுடன் தங்க நேரிடுகிறது.

தனிமை இருவரையும் சலனப்படுத்துகிறது. ஜெயசித்ராவின் இளமை, கமலின் மனதை ஊஞ்சலாடச் செய்கிறது. இருவரும் தங்களை மறந்து ஐக்கியமாகிறார்கள்.

பொழுது விடியும் வேளையில், கமலஹாசனை மனச்சாட்சி உறுத்துகிறது. "என்னை மன்னித்து விடு'' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறுகிறார்.



வெளிïர் சென்றிருந்த ஸ்ரீபிரியா, திரும்பி வருகிறார். ஜெயசித்ரா தூங்கிக் கொண்டிருப்பதையும், அவர் அருகே ஒரு கடிதம் இருப்பதையும் பார்க்கிறார்.

கடிதத்தைப் படிக்கும் அவர் மனம் எரிமலையாகிறது. கமல் தனக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணிக் குமுறுகிறார். ரஜினியை மணக்க சம்மதிக்கிறார். நிச்சயதார்த்தமும் நடைபெறுகிறது.

இந்த சமயத்தில், ஜெயசித்ராவிடம் இருந்து ஸ்ரீபிரியாவுக்கு ஒரு கடிதம் வருகிறது. தான் கர்ப்பமாக இருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

கமலை ஸ்ரீபிரியா சந்தித்து, ஜெயசித்ராவை மணந்து கொண்டு அவருக்கு வாழ்வு அளிக்கும்படியும், செய்த பாவத்துக்கு அதுதான் பிராயச்சித்தம் என்றும் கூறுகிறார்.

அதன்படி கமல் பெங்களூருக்கு சென்று, ஒரு விபத்தில் சிக்கி மரணப்படுக்கையில் இருக்கும் ஜெயசித்ராவை சந்திக்கிறார். தாலி கட்டி மனைவியாக ஏற்கிறார். சுமங்கலியாகி விட்ட மகிழ்ச்சியுடன், ஜெயசித்ரா உயிர் துறக்கிறார்.

எதிர்பாராத `கிளைமாக்ஸ்'

இதன் பிறகு கமலும், ஸ்ரீபிரியாவும் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ரஜினி அங்கு வருகிறார். கமல் மீது சந்தேகப்பட்டு, ஆவேசத்துடன் தாக்குகிறார்.

நடந்த உண்மைகளை ஸ்ரீபிரியா வெளிப்படுத்துகிறார். கமலும், ஸ்ரீபிரியாவும் முன்னாள் காதலர்கள் என்பதை அறியும் ரஜினி, அவர்கள் இருவரையும் இணைத்து வைக்கிறார்.

வெள்ளி விழா



9-6-1978-ல் வெளியான இந்தப்படம், 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

பாரதிராஜாவின் "16 வயதினிலே'' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நிவாஸ், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

இளையராஜா இசை அமைப்பில் பாடல்கள் எல்லாம் `ஹிட்' ஆயின.

கமல், ரஜினி இருவரும் பொருத்தமான வேடங்களில், போட்டி போட்டு நடித்தனர்.

ஸ்ரீதர் தன் முத்திரையை முழுமையாகப் பதித்திருந்தார்.

ரஜினியும், கமலும் இணைந்து நடித்த படங்களில் மறக்க முடியாத படம் "இளமை ஊஞ்சலாடுகிறது.''

No comments:

Post a Comment