Monday, 16 June 2014

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''



புகழேணியில் வேகமாக ஏறிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், சிவாஜிகணேசனுடன் முதன் முதலாக "ஜஸ்டிஸ் கோபிநாத்'' என்ற படத்தில் இணைந்து நடித்தார்.

வள்ளிமணாளன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை யோகானந்த் இயக்கினார்.

இப்படத்தில் கே.ஆர்.விஜயா, சுமித்ரா, ஏ.சகுந்தலா, அபர்ணா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர்.

வசனத்தை வியட்நாம் வீடு சுந்தரம் எழுத, பாடல்களை வாலி எழுதினார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

16-12-1978-ல் இந்தப்படம் வெளிவந்தது. சிவாஜி, ரஜினி ஆகியோரின் திறமையை சரிவர பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால், படம் சுமாராகவே ஓடியது.

வெள்ளி விழா படம் - "ப்ரியா''

ரஜினி நடித்து அடுத்து வெளிவந்த "ப்ரியா'', 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. எஸ்.பி.தமிழரசியின் எஸ்.பி.டி. பிலிம்ஸ், தமிழிலும், கன்னடத்திலும் ஒரே சமயத்தில் இக்கதையை படமாக்கியது.

தமிழ்ப் படத்துக்கு திரைக்கதை, வசனம், பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுதினார். எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார். இசை இளையராஜா.

இந்தப் படத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி என்றாலும், அவர் ரஜினிக்கு ஜோடி அல்ல!

படத்தில், அவர் ஒரு நடிகை. அவர் அம்ரிஷை காதலிக்கிறார். அதற்கு வில்லன் மேஜர் சுந்தரராஜன் முட்டுக்கட்டை போடுவதுடன், பல விதத்திலும் தொந்தரவு கொடுப்பார்.

ஸ்ரீதேவிக்கு உதவும் துப்பறியும் அதிகாரியாக ரஜினி நடித்தார். அவருடைய காதலியாக அஸ்னா என்ற சிங்கப்பூர் நடிகை நடித்தார்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் முதலிய நாடுகளில் நடந்தது. பாபுவின் படப்பிடிப்பு, பிரமாதமாக அமைந்தது. எல்லாப் பாடல்களும் ஹிட்டாக அமைந்தன.

16-12-1978-ல் வெளிவந்த இந்தப்படம் 25 வாரம் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. கன்னடப்படமும் வெற்றிகரமாக அமைந்தது.

"ப்ரியா'' தமிழ்ப்பதிப்பு, "அஜெயுடு'' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. அந்தப் படமும் வெற்றி பெற்றது.

இந்த ஆண்டில் வெளிவந்த ரஜினியின் மற்றொரு படம் "என் கேள்விக்கு என்ன பதில்.'' அபிராமி பட நிறுவனத்தின் சார்பில், டி.கே.கோபிநாத் தயாரித்த படம். கவிஞர் கண்ணதாசன், முத்துலிங்கம் ஆகியோர் பாடல்களை எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். வசனம்: பாலமுருகன்.



ஸ்ரீபிரியா, விஜயசந்திரிகா, விஜயகுமார், எம்.என்.நம்பியார், மனோரமா, சுருளிராஜன் ஆகியோர் இதில் நடித்தனர்.

படம் சுமாராகவே அமைந்தது.

கால்ஷீட் பிரச்சினை

பட அதிபர்கள் ஏக காலத்தில் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டு மொய்த்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாமல் ரஜினி தவித்தார். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு அவர் ஏற்கனவே தேதி கொடுத்து விட்டார். புதுப்படங்களில் நடிக்க வந்த பல அழைப்புகளை ஏற்கமுடியவில்லை.

தன்னைத் தேடி வரும் பட அதிபர்களின் எண்ணிக்கையை குறைக்க, தன் ஊதியத்தை உயர்த்தினார். அதையும் சிலர் குறை கூறினர். `நேற்று வந்தவர் இவ்வளவு பணம் கேட்கிறாரே!' என்று சொன்னார்கள்.

இதுபற்றி அப்போது ஒரு பேட்டியில் ரஜினி கூறியதாவது:-

"அதிகப் படங்களில் நடிப்பதை தவிர்க்க எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. நான் வாங்குகிற ரேட்டை உயர்த்துவதுதான் அந்த ஐடியா. அதனால், வேறு வழியின்றி ரேட்டை உயர்த்தினேன். அதையும் சிலர் குறை கூறினார்கள். அவர்களுக்குத் தெரியுமா, என் அவஸ்தை!

இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், `ஏன் நடிக்க வந்தோம்' என்று தோன்றுகிறது! அந்த அளவுக்கு `கால்ஷீட்' பிராபளம்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. தென்னாட்டில் பிரபலமான நட்சத்திரமாக நான் மதிக்கப்படுகிறேன். எந்த நடிகருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் பயமாக இருக்கிறது. `கிடைத்த பேரை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே' என்ற பயம்தான் அது.

இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

பாலசந்தர் தமாஷ்

இந்த சந்தர்ப்பத்தில் டைரக்டர் பாலசந்தரை சந்தித்த ரஜினிகாந்த், தனக்குள்ள "கால்ஷீட்'' பிரச்சினை பற்றி தெரிவித்தார்.



பாலசந்தர் சிரித்துக்கொண்டே, "உன்னை அறிமுகப்படுத்திய நானே, உன்னுடைய கால்ஷீட்டுக்கு ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும் போல் இருக்கிறதே!'' என்றார்.

அந்த அளவுக்கு `பிசி'யாக இருந்தார், ரஜினிகாந்த்.

மார்லன் பிராண்டோ

ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவின் படங்கள் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும். இந்தக் காலக்கட்டத்தில் அவருடைய புகழ் பெற்ற படமான "காட்பாதர்'' மும்பையில் திரையிடப்பட்டது. இடைவிடாமல் படப்பிடிப்பு இருந்தாலும், விமானத்தில் மும்பைக்குப் பறந்து சென்று, அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் போய் வந்தார்.

No comments:

Post a Comment