Saturday, 5 July 2014

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை''

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை''
கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினிகாந்த் நடித்த முக்கிய படங்களில் ஒன்று "முரட்டுக்காளை.'' இதில் அவர் கதாநாயகனாகவும், ஜெய்சங்கர் வில்லனாகவும் நடித்தனர்.

பட உலக நிலவரம் சரி இல்லாமல் இருந்ததால், ஏவி.எம். நிறுவனம் சில காலம் படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. 1980-ல் அவர்கள் மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்தனர். கதாநாயகனாக நடிக்க ரஜினிகாந்தை ஒப்பந்தம் செய்தனர்.

இதற்கான கதை-வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

வில்லன் ஜெய்சங்கர்

ஒரு கிராமத்தில், பண்ணையாருக்கும், ஏழை விவசாயிக்கும் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. கிராமியக் கதையாக இருந்தாலும், பொழுதுபோக்கு அம்சங்களை நிறைய சேர்த்து படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்க ஏவி.எம். முடிவு செய்தது.

படத்தில் ஒரு புதுமையாக, ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைக்க தீர்மானிக்கப்பட்டது. அதுவரை ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்து, தமிழ்ப்பட உலகின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக ஜெய்சங்கர் திகழ்ந்து கொண்டிருந்தார்.

வில்லன் வேடத்தில் நடிக்க அவர் முதலில் தயங்கினார். எனினும், அவர் வேடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வலுவானதாகவும் இருந்ததால் நடிக்க சம்மதித்தார்.

காளைச்சண்டை

இதில் விவசாயி காளையனாக ரஜினியும், பண்ணையார் மகனாக ஜெய்சங்கரும் நடித்தார்கள்.

பண்ணையாரின் முரட்டுக்காளையை காளையன் அடக்குவான். அவனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுப்பதாக பண்ணையார் அறிவிப்பார். ஆனால், காளையன் மறுத்து விடுவான்.

இந்த மோதல் காரணமாக அடுக்கடுக்காக நடைபெறும் சம்பவங்களால், படம் விறுவிறுப்பாக அமைந்தது.


படத்தின் உச்சகட்டமாக, ஓடுமë ரெயில் மீது ரஜினிக்கும், ஜெய்சங்கருக்கும் நடக்கும் சண்டை மயிர் கூச்செரியும் விதத்தில் படமாக்கப்பட்டிருந்தது. பட அதிபர் ஏவி.எம்.சரவணன் உள்பட பலர் கேட்டுக்கொண்டும், ரஜினி `டூப்' போட்டுக்கொள்ள மறுத்து, சண்டைக் காட்சிகளில் அவரே துணிகரமாக நடித்தார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரதி நடித்தார். மற்றும் சுமலதா, ஒய்.ஜி.மகேந்திரன், சுருளிராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன் ஆகியோரும் நடித்தனர்.

கதை, நடிப்பு, இசை அனைத்தும் சிறப்பாக அமைந்தன.

20-12-1980-ல் வெளிவந்த இந்தப்படம், 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது.

சரவணன் அனுபவம்

ரஜினி பற்றியும், "முரட்டுக்காளை'' படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றியும் பட அதிபர் ஏவி.எம்.சரவணன் கூறியதாவது:-

"சுமார் 25 வருடங்களுக்கு மேலாக எனக்கு ரஜினி பழக்கம். அவர் எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுபவர். "நான் உண்மையே பேசி பழகிவிட்டேன். இந்தப் பணம், புகழ், பெயர் வந்திட்டா, பொய் பேச வேண்டிய நிலைமையும் வந்திடும். சாப்பாட்டுக்கே வழியில்லாது கஷ்டப்பட்ட காலத்திலேயே உண்மை பேசிவிட்டு, வசதியான வாழ்க்கை அமைந்தபின் இப்போது பொய் பேச மனதுக்குப் பிடிக்கவில்லை. இனிமே வாழப்போறதுகொஞ்ச நாள், அதுவரைக்கும் பொய் பேசாமலேயே இருந்து விடலாமேன்னு தோன்றுகிறது'' என்று என்னிடம் அவர் கூறியதுண்டு.

அதுமட்டுமல்ல. வழக்கமாக சினிமா உலகில் எல்லாருமே கால்ஷீட் விஷயங்களைக் கவனித்துக்கொள்ள ஓர் உதவியாளரை வைத்துக் கொண்டிருப்பார்கள். விருப்பம் இல்லாத விஷயங்களைத் தட்டிக்கழிக்கவும், , தவறு நேர்ந்து விட்டால் பழியைப் போட்டுவிட்டு நழுவவும், அந்த உதவியாளரைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.


ஆனால், ரஜினி இந்த விஷயத்தில் நேர் எதிர். மற்ற விஷயங்களைக் கவனித்துக்கொள்ள உதவியாளர்கள் இருந்தாலும், கால்ஷீட் விஷயத்தைத் தானே நேரடியாக கவனித்துக்கொள்வார். ஒரு தயாரிப்பாளருக்குத் தேதிகளை முடிவு செய்துவிட்டால், தானே அதைக் கைப்பட எழுதிக் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து விடுவார். எக்காரணம் கொண்டும் கொடுத்த தேதியை மாற்றமாட்டார். வேறு யாராவது அந்த தேதிகளில் அட்ஜெஸ்ட் செய்து ஓரிரு நாட்கள் கால்ஷீட் கேட்டால் கூட `சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், டைரக்டரிடம் நீங்களே நேரடியாக பேசிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிடுவாரே தவிர, அவர் தலையிட்டு தர்மசங்கடம் ஏற்படுத்த மாட்டார்.

ஜெய்சங்கருக்கு மரியாதை

அடுத்தவர் மனம் நோகும்படி எதுவும் செய்து விடக்கூடாது என்பது ரஜினியின் பாலிசி. எங்களது `முரட்டுக்காளை' படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் படத்தின் ஹீரோவான ரஜினி, `நூற்றைம்பது படங்களில் ஹீரோவாக நடித்த ஜெய்சங்கர் இதில் வில்லன். அவர் வில்லன் என்பதால், படத்தின் விளம்பரங்களில் அவருக்குரிய முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்துவிடாதீர்கள்' என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார்.''

இவ்வாறு சரவணன் கூறினார்.

No comments:

Post a Comment