Saturday, 5 July 2014

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது
அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

ரஜினிகாந்த் - லதா திருமணம், 26-2-1981 அன்று அதிகாலை திருப்பதியில் நடந்தது. திருமணம் முடிந்ததும், ரஜினி உடனடியாக சென்னைக்குத் திரும்பி, படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

திருமணத்துக்கு முதல் நாள் இரவு, ரஜினிகாந்த் கார் மூலம் திருப்பதி சென்றார். ரஜினியின் அண்ணனும், ஒரு சில நெருங்கிய உறவினர்கள் மட்டும் உடன் சென்றனர்.

மணமகள் லதா, அவரது பெற்றோர், அக்காள் சுதா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வேறொரு காரில் சென்றனர்.

திருப்பதியில், பயணிகள் விடுதியில் (காட்டேஜ்) தங்கினார்கள்.

சுப்ரபாதம் முழங்க தாலி கட்டினார்


அதிகாலை 3.30 மணிக்கு திருப்பதியில் சுப்ரபாதம் நிகழ்ச்சி நடந்தது. திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில் அதிகாலையில் பாடப்படும் துதிப்பாடல் "சுப்ரபாதம்.''

அப்போது ரஜினி - லதா திருமணம் நடந்தது. லதா கழுத்தில் ரஜினி தாலி கட்டினார்.

ரஜினி காலில் விழுந்து வணங்கினார், லதா.

பிறகு இரு குடும்பங்களையும் சேர்ந்த பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி, மணமக்கள் ஆசி பெற்றார்கள்.

திருமணம் முடிந்து, சாமி சந்நிதியை விட்டு ரஜினியும், லதாவும் வெளிவந்தபோது, இரண்டொரு பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் எப்படியோ அங்கு வந்து போட்டோ எடுக்க முயன்றனர். `எவ்வளவோ சொல்லியும் அதைக் கேட்காமல் இங்கு வந்துவிட்டார்களே' என்று `டென்ஷன்' ஆனார், ரஜினி.

உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி, வேறு வழியாக அழைத்துச் சென்றுவிட்டனர்.

படப்பிடிப்பு

திருப்பதியிலிருந்து அருகில் உள்ள திருச்சானூர் சென்று, பத்மாவதியை தரிசனம் செய்துவிட்டு, ரஜினிகாந்தும் மற்றவர்களும் உடனடியாக சென்னைக்குத் திரும்பினார்கள்.


அன்று காலை 10 மணிக்கு, ஏவி.எம்.ஸ்டூடியோவில் கே.பாலசந்தரின் "நெற்றிக்கண்'' படப்பிடிப்பு நடந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

7 மாதங்களுக்கு முன், பாலசந்தரின் "தில்லுமுல்லு'' படப்பிடிப்பின்போது அரும்பிய ரஜினி - லதா காதல், அதே பாலசந்தரின் "நெற்றிக்கண்'' படப்பிடிப்பின்போது திருமணத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

திருமண வரவேற்பு

"திருமணத்துக்கு யாரும் வரவேண்டாம். ஆனால், திருமண வரவேற்புக்கு எல்லோரும் வாருங்கள். நானே உங்களுக்கு அழைப்பு கொடுப்பேன்'' என்று ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்தார்.

அதைப்போலவே, திருமணத்துக்கு 2 வாரம் கழித்து (மார்ச் 14-ந்தேதி) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.

பிரமுகர்களும், திரை உலகத்தினரும் பெருந்திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

வரவேற்புக்கு, நடிகர் கமலஹாசன் மனைவியுடன் வந்து, மணமக்களை வாழ்த்தினார்.

மற்றும் வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரமுகர்கள் விவரம் வருமாறு:-

தொழில் அமைச்சர் திருநாவுக்கரசு, சிறுசேமிப்பு திட்ட துணைத் தலைவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், "முக்தா'' சீனிவாசன், எஸ்.பி.முத்துராமன், துரை, பி.மாதவன், ஆர்.தியாகராஜன், சி.வி.ராஜேந்திரன், ராமண்ணா, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.எஸ்.மணியம், தேவதாஸ்.

ஜெய்சங்கர்

நடிகர்கள் ஜெய்சங்கர், சிவகுமார், பி.எஸ்.வீரப்பா, பிரதாப், சுதாகர், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், அசோகன், நம்பியார்.

நடிகைகள் ராதிகா, சுமித்ரா, சுமலதா, நிர்மலா, ராஜசுலோசனா, அஞ்சலிதேவி, பண்டரிபாய்.

ஏவி.எம்.சரவணன்

பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், குமரன், கோவை செழியன், ஜி.உமாபதி, சி.தண்டபாணி, பஞ்சு அருணாசலம், கலைஞானம், கே.என்.சுப்பு, "கே.ஆர்.ஜி'', `தேவி பிலிம்ஸ்' கவுரிசங்கர், கே.என்.குஞ்சப்பன், ஹரிபோத்தன், ஆர்.எஸ்.சோமநாதன், "என்.வி.ஆர்'' முத்து, ராம்ஜி, `சாருசித்ரா' சீனிவாசன்.

பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.பி.சீனிவாஸ், வாணி ஜெயராம் மற்றும் பலர் வந்திருந்தனர்.

வந்தவர்களை, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ரஜினிகாந்தின் செயலாளர் முரளி ஆகியோர் வரவேற்றனர்.


தந்தையிடம் ஆசி

இதற்கிடையே, மனைவி லதாவுடன் ரஜினி பெங்களூருக்கு சென்று, தன் தந்தையிடம் ஆசி பெற்றார்.

"நீங்கள் சென்னைக்கு வந்து, எங்களுடனேயே தங்கியிருக்கவேண்டும்'' என்று தந்தையிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், தந்தையோ `எல்லோரும் சொந்தக் காலில் நிற்கவேண்டும்' என்று கருதுபவர். தன் வாழ்க்கைக்கு, தனக்குக் கிடைக்கும் `பென்சன்' தொகையே போதும் என்று நினைப்பவர். எனவே சென்னைக்கு வர மறுத்துவிட்டார்.

பிறகு ஒரு முறை, கண் ஆபரேஷன் செய்து கொள்ள சென்னைக்கு வந்து, ரஜினி வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார்.

அப்போது ஒரு நிருபர் அவரைச் சந்தித்து, "உங்கள் மருமகள் லதாவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டார். "ரொம்ப நல்லப் பொண்ணு. என்னை அன்பாக கவனித்துக் கொண்டாள்'' என்று அவர் பதிலளித்தார்.

லதா தொடர்ந்து படித்தார்

திருமணத்தின்போது லதா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் "பி.ஏ'' இறுதியாண்டு படித்துக்கொண்டு இருந்தார்.

திருமணத்துக்குப் பிறகும் 2 மாதம் தொடர்ந்து கல்லூரிக்குச் சென்று படித்து, பரீட்சை எழுதி, "பி.ஏ'' பட்டம் பெற்றார்.

No comments:

Post a Comment