Saturday, 5 July 2014

புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்''
புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த "நெற்றிக்கண்'', ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

"கவிதாலயா'' பேனரில் டைரக்டர் கே.பாலசந்தர் தயாரித்த படம் இது.

பொதுவாக, பாலசந்தர் கதை எழுதும் படங்களை அவரே இயக்குவதுதான் வழக்கம். ஆனால், "நெற்றிக்கண்''ணை அவர் டைரக்ட் செய்யவில்லை. ஏற்கனவே, ரஜினியை வைத்து "புவனா ஒரு கேள்விக்குறி'', "முரட்டுக்காளை'' முதலிய வித்தியாசமான படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

வியப்பு-திகைப்பு

"நெற்றிக்கண்''ணை இயக்குவதற்கு பாலசந்தர் அழைப்பு அனுப்பியபோது, முத்துராமன் வியப்பும், திகைப்பும் அடைந்தார்.

`அவரே பெரிய டைரக்டர். அவர் படத்தை நாம் எப்படி டைரக்ட் செய்வது?' என்ற கேள்வி, அவரை பயமுறுத்தியது.

பாலசந்தரை சந்தித்துப் பேசியபின், அவருடைய பயம் மறைந்தது.

பாலசந்தர் சொன்னார்:-

"நான் வித்தியாசமான கதைகளை, என் பாணியில் டைரக்ட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். என்னிடம் ரசிகர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

"நெற்றிக்கண், ரஜினிக்கு முற்றிலும் மாறுபட்ட கதை. இரட்டை வேடம். இதை கமர்ஷியல் படமாக எடுத்தால்தான் நன்றாக இருக்கும். நீங்கள் ரஜினியை வைத்து, சிறப்பான படங்களை எடுத்திருக்கிறீர்கள். ரஜினி ஓர் நடிப்புச்சுரங்கம். அவரிடம் புதைந்துள்ள நடிப்பை, நீங்கள் இப்படத்தில் சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.

முழு சுதந்திரம்

திரைக்கதை, எழுதுவதுடன் என் வேலை முடிந்து விட்டது. படத்தை உங்கள் விருப்பப்படி எடுக்கலாம். எந்த ஒரு கட்டத்திலும் என் தலையீடு இருக்காது. உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு.


படத்தை சிக்கனமாக எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஏவி.எம். படங்களை எப்படி நிறைய செலவு செய்து எடுக்கிறீர்களோ, அதுபோல் எடுங்கள்.''

இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

இதனால் உற்சாகம் அடைந்த எஸ்.பி.முத்துராமன், "நெற்றிக்கண்''ணை சிறந்த முறையில் உருவாக்கினார்.

அப்பா-மகன்

இதில் அப்பாவாகவும், மகனாகவும் ரஜினி நடித்தார்.

அப்பா ரஜினி உல்லாச பேர்வழி. வேலை கேட்டு வரும் ஒரு பெண்ணை (சரிதா) கெடுத்து விடுவார்.

இது மகன் ரஜினிக்கு தெரிகிறது. அப்பாவை திருத்துவதற்கும், உண்மையை அவர் வாயினாலேயே ஒப்புக் கொள்ளச் செய்யவும், புதிய உத்தியை கையாளுவார். சரிதாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிப்பார்.

இதனால் அப்பா ரஜினிக்கு இக்கட்டான நிலைமை ஏற்படும். அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சியி னால், அவர் இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவிப்பார்.

கடைசியில் உண்மையை ஒப்புக்கொள்வார். சரிதாவை ஏற்றுக்கொள்ளவும் முன்வருவார்.

ஆனால், "உண்மையை நீங்கள் ஒப்புக்கொண்டீர்களே, அதுவே போதும்'' என்று கூறிவிட்டு சரிதா வெளியேறுவார்.

அப்பாவாகவும், மகனாகவும் நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார் ரஜினி. இரண்டு ரஜினிகளும் நடத்திய "மவுனயுத்தம்'', ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஒரு ரஜினிக்கு மனைவியாகவும், இன்னொரு ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்த லட்சுமியின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. சரிதாவும் சிறப்பாக நடித்திருந்தார். ரஜினியின் மகளாக விஜயசாந்தி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிய பாலசந்தர், வசனம் எழுதவில்லை. அந்தப் பொறுப்பை விசுவிடம் கொடுத்தார். விசுவின் வசனம் கச்சிதமாக அமைந்திருந்தது.

பாடல்களை கண்ணதாசன் எழுத, இசை அமைத்தவர் இளையராஜா.

1981 ஆகஸ்டு 15-ந்தேதி வெளியான "நெற்றிக்கண்'', நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.


இப்படம் தெலுங்கிலும் "டப்'' செய்யப்பட்டு நன்றாக ஓடியது.

ராணுவ வீரன்

அடுத்து ரஜினி நடித்த படம் சத்யா மூவிஸ் தயாரிப்பான "ராணுவ வீரன்.'' இந்தப் படத்தையும் எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார்.

ராணுவத்தில் இருந்து ஊருக்கு திரும்பும் ரஜினி, பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படும் பொதுமக்களுக்கு உதவுவதுதான் கதை.

ரஜினிகாந்த், ஆக்ஷன் ஹீரோவாகத் தோன்றி, அடிதடி சண்டைக் காட்சியில் கைதட்டல் பெற்றார்.

இப்போது தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் சிரஞ்சீவி, இந்தப் படத்தில் ரஜினிக்கு அடுத்த வேடத்தில் நடித்திருந்தார்.

மற்றும் ஸ்ரீதேவி, வசந்தா, நளினி, தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்தவர் "ஓம்சக்தி'' ஜெகதீசன். வசனம்: கிருஷ்ணா.

வாலி, முத்துலிங்கம், புலமைப்பித்தன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு, இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

26-10-1981-ல் வெளியான இப்படமும் நூறு நாள் ஓடியது.

"பந்தி போட்டு சிம்மம்'' என்ற பெயரில் "ராணுவ வீரன்'' தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது.

(ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' - நாளை)

ரஜினி நடித்த திரைப்படங்கள்

படம் வெளியான தேதி டைரக்டர்

41 ப்ரியா (கன்னடம்) 12-01-1979 எஸ்.பி.முத்துராமன்

42 குப்பத்துராஜா 12-01-1979 டி.ஆர்.ராமண்ணா

43 இத்துரு அசாத்யுலே (தெலுங்கு) 25-01-1979 கே.எஸ்.ஆர்.தாஸ்

44 அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்) 14-04-1979 ஐ.வி.சசி
45 நினைத்தாலே இனிக்கும் 14-04-1979 கே.பாலசந்தர்

46 அந்த மைன அனுபவம் (தெலுங்கு) 19-04-1979 கே.பாலசந்தர்
47 அலாவுதீனும் அற்புத விளக்கும் 08-06-1979 ஐ.வி.சசி

48 தர்மயுத்தம் 29-06-1979 ஆர்.சி.சக்தி

49 நான் வாழவைப்பேன் 10-08-1979 டி.யோகானந்த்

50 டைகர் (தெலுங்கு) 05-09-1979 என்.ரமேஷ்

51 ஆறிலிருந்து அறுபது வரை 14-09-1979 எஸ்.பி.முத்துராமன்

52 அன்னை ஓர் ஆலயம் 19-10-1979 ஆர்.தியாகராஜன்

53 அமா எவரிதைன அம்மா (தெலுங்கு) 08-11-1979 ஆர்.தியாகராஜன்
54 பில்லா 26-01-1980 ஆர்.கிருஷ்ணமூர்த்தி

55 ராம் ராபர்ட் ரஹீம் (தெலுங்கு) 31-05-1980 விஜய நிர்மலா

56 அன்புக்கு நான் அடிமை 04-06-1980 ஆர்.தியாகராஜன்

57 காளி 03-07-1980 ஐ.வி.சசி

58 மாயதாரி கிருஷ்ணடு (தெலுங்கு) 19-07-1980 ஆர்.தியாகராஜன்

59 நான் போட்ட சவால் 07-08-1980 புரட்சிதாசன்

60 ஜானி 15-08-1980 மகேந்திரன்

No comments:

Post a Comment