Saturday, 5 July 2014

ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா''
ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' படத்தில், ரஜினிகாந்தும், ராதிகாவும் இணைந்து நடித்தனர்.

"சாண்டோ'' சின்னப்பதேவர் மறைவுக்குப் பிறகு, தேவர் பிலிம்ஸ் பேனரில் அவர் மகன் சி.தண்டாயுதபாணி, திரைப்படங்கள் தயாரித்தார். 1982-ல் அவர் தயாரித்த படம் "ரங்கா.''

ரஜினி - ராதிகா

இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா நடித்தார்.

முக்கிய வேடத்தில் "கராத்தே'' மணி நடித்தார். ரஜினியுடன் இவர் நடித்த இரண்டாவது படம் இது.

ரஜினியின் அக்காவாக கே.ஆர்.விஜயா நடித்தார். மற்றும் `சில்க்' சுமிதா, ரவீந்தர், மாஸ்டர் சுரேஷ், ஹாஜா செரீப், அசோகன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர்.

தேவர் பிலிம்ஸ் கதை இலாகா உருவாக்கிய கதைக்கு, தூயவன் வசனம் எழுதினார். வாலியின் பாடல்களுக்கு, சங்கர் - கணேஷ் இசை அமைத்தனர்.

தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.

குடும்ப சென்டிமெண்டும், சண்டைக்காட்சிகளும் நிறைந்த "ரங்கா'', 14-4-1982-ல் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடியது.

டைரக்டர் பேட்டி

இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, டைரக்டர் ஆர்.தியாகராஜன் கூறியதாவது:-

"ரங்கா படத்தில் ரஜினியின் அக்கா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜெயலலிதா. அவரிடம் கதையைச் சொன்னோம். தனது கேரக்டர் பிடித்துப்போனதால் ஜெயலலிதா ?ஒப்புக்கொண்டார். அவருக்கான "காஸ்ட்ïம்''கள் கூட தயாராகி விட்டன.


படப்பிடிப்பு தொடங்க இரண்டு நாள் இருக்கிற நிலையில், எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்தது. "அம்முவை (ஜெயலலிதா) இந்தப் படத்தில் போடவேண்டாம். அவரை நான் அரசியலில் கொண்டுவர இருக்கிறேன். நான் கே.ஆர்.விஜயாவிடம் பேசிவிட்டேன். அவர் ரஜினிக்கு அக்காவாக நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார்'' என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

அதன் பிறகு, கே.ஆர்.விஜயாவுடன் பேசினோம். எம்.ஜி.ஆர். அவரிடம் ஏற்கனவே பேசிவிட்டதால், எந்தவித தடங்கலுமின்றி ரஜினிக்கு அக்காவாக நடித்தார்.''

இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

புதுக்கவிதை

கே.பாலசந்தரின் "கவிதாலயா'' தயாரிப்பான "புதுக்கவிதை''யில் ரஜினியும், புதுமுகம் ஜோதியும் இணைந்து நடித்தனர்.

`ஒரு படத்தின் வெற்றிக்கு கதை வலுவானதாக இருக்கவேண்டும்' என்று அடிக்கடி ரஜினி கூறுவார். கன்னடத்தில் வெற்றி கண்ட "நா நின்னே மறியல்லாரே'' என்ற படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான் "புதுக்கவிதை.'' இதற்கு வசனம் எழுதியவர் விசு.

ரஜினிக்கு மாறுபட்ட கதை. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் படம் சிறப்பாக அமைந்தது.

சுகுமாரி, சில்க் சுமிதா, தேங்காய் சீனிவாசன், டெல்லி கணேஷ் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர்.

படத்தின் சிறப்பு அம்சம் இளையராஜாவின் இசை. "வெள்ளைப்புறா ஒன்று...'' உள்பட அனைத்துப் பாடல்களும் ஹிட்டாக அமைந்தன.

11-6-1982-ல் வெளிவந்த இந்தப்படம் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

"டைகர் ரஜினி'' என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment